வெள்ளி, 6 செப்டம்பர், 2019

நாளை அதிகாலை நிலவில் இறங்குகிறது சந்திராயன் 2

நாளை அதிகாலை நிலவில் இறங்குகிறது சந்திராயன் 2 தினத்தந்தி :  சந்திரயான் - 2 விண்கலத்திலிருந்து தனியாக பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கருவியானது, நள்ளிரவு 1.30 மணியிலிருந்து 2.30 மணிக்குள் தரை இறங்க உள்ளது இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டா, இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ‘சந்திரயான்-2’ விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது. கடந்த மாதம் (ஆகஸ்டு) 14-ந்தேதி ‘சந்திரயான்-2’ விண்கலம் புவி வட்டப்பாதையில் இருந்து பிரிந்து நிலவை நோக்கி பயணிக்க தொடங்கியது. கடந்த மாதம் 20-ந்தேதி ‘சந்திரயான்-2’ விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்தது. அதன்பிறகு படிப்படியாக 5 முறை ‘சந்திரயான்-2’ விண்கலத்தின் நிலவின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது. கடந்த 2-ந்தேதி ‘சந்திரயான்-2’ விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்க தொடங்கியது.


3-ந்தேதி மற்றும் நேற்று முன்தினம் என்று 2 முறை உள் உந்து விசையை பயன்படுத்தி விக்ரம் லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டு, அதன் சுற்று வட்டப்பாதை மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலம் விக்ரம் லேண்டர் நிலவை நெருங்கி உள்ளது.

‘சந்திரயான்-2’ விண்கல திட்டத்தின் முக்கிய மற்றும் சவாலான நிகழ்வு நாளை(சனிக்கிழமை) அதிகாலையில் நடக்க உள்ளது. அதாவது விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் மிகவும் மெதுவாக நாளை அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் தரையில் இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்து உள்ளனர்.

நிலவின் தென்துருவத்தில் மான்சினஸ்-சி, சிம்பிலியஸ்-எஸ் என்ற பள்ளங்களுக்கு நடுவே விக்ரம் லேண்டர், 70 டிகிரி கோணத்தில் மெதுவாக தரையிறக்கம் செய்யப்படுகிறது. அதைத்தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் பிரக்யான் ரோவர் வெளியே வந்து ஆய்வை தொடங்க உள்ளது. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை ஒரு நிலவு நாள் (14 பூமி நாட்கள்) நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்யும்

கருத்துகள் இல்லை: