வியாழன், 5 செப்டம்பர், 2019

சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி! சுப்பிரமணியன் சாமி தூது?

டிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி!மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டது. மழைக்குள் இருந்து சூரியன் எட்டி பார்த்த நேரத்தில் வாட்ஸ் அப் தன் செய்தி கதிர்களை வீசியது.
“கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதி வாரத்தில் பெங்களூருவிலிருந்து ஒரு பரபரப்புச் செய்தி தமிழகத்துக்குள் தடதடத்தது. பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவை தினகரன் சந்திக்க வழக்கம்போல் சென்றதாகவும், ஆனால் அன்று சசிகலாவைச் சந்திக்க முடியாமல் தினகரன் திரும்பிவிட்டதாகவும் அந்தத் தகவல் பரவியது. தினகரனின் அணுகுமுறைகள் சசிகலாவுக்குப் பிடிக்கவில்லை என்றும் அதனால்தான் அவரை சந்திக்க மறுத்துவிட்டார் என்றும் இந்தத் தகவலுக்கு தலைவாரிப் பூச்சூடி பலரும் ஊடக சாலைகளுக்கு அனுப்பினர்.
ஆனால், அன்று சசிகலாவை மிக முக்கியமான நபர் ஒருவர் மிக முக்கியமான காரியத்துக்காக சந்தித்ததால்தான் தினகரனைச் சந்திக்க முடியவில்லை என்று இப்போது தகவல் கிடைத்திருக்கிறது. அந்த முக்கியமான நபர் சந்திரலேகா ஐஏஎஸ். ஜெயலலிதா, சசிகலா பற்றி எழுதும்போது சந்திரலேகா ஐஏஎஸ்ஸைத் தவிர்த்துவிட முடியாது. ஆரம்ப காலத்தில் சசிகலாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் அறிமுகத்தை ஏற்படுத்தியவர் சந்திரலேகாதான் என்றும் ஒரு தகவல் உண்டு. அதன்பின் சந்திரலேகா முகத்தில் ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பற்றியும், அந்த சூழலில் நடந்தது என்ன என்பதையும் தமிழ்நாடு அறியும்.

இந்த நிலையில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டது முதலே அவருக்கு ஆதரவாகத் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அதிமுகவுக்குள் ஒற்றுமையை உண்டு பண்ணி அதன் மூலமாக மட்டுமே தமிழகத்தில் திமுகவை ஒடுக்கமுடியும் என்று டெல்லி பாஜக மேலிடத்தில் தொடர்ந்து சொல்லி வருகிறார். அதற்கேற்றாற்போல் அவர் சசிகலாவை ஆதரித்து வெளிப்படையாகத் தொடர்ந்து கருத்து சொல்கிறார்.
இந்த நிலையில் சுப்பிரமணியன் சுவாமிக்கு நெருக்கமான சந்திரலேகா கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி சசிகலாவைச் சிறையில் சந்தித்திருப்பதன் மூலம் அதிமுகவுக்கும் அமமுகவுக்கும் ஒரு சமரசத்தை உண்டு பண்ணும் சுப்பிரமணியன் சுவாமியின் முயற்சி முக்கியக் கட்டத்தை அடைந்துள்ளதாக சொல்கிறார்கள்.
அதிமுக பற்றி சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தும் கருத்தை பாஜக மேலிடம் கேட்கிறதா இல்லையா என்ற ஒரு கேள்வி எழுந்தாலும்... சசிகலாவை சந்திரலேகா சந்தித்ததன் மூலம் அதிமுகவுக்கும், அமமுகவுக்கும் ஒரு திடீர் சமரசம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதே உண்மை.
சில மாதங்களாகவே டிடிவி தினகரன் பாஜக, அதிமுகவை தனக்கே உரிய பாணியில் கடுமையாக விமர்சித்துப் பேசவில்லை. முதல்வர் எடப்பாடியின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் அழகிரி உட்பட பலர் கேள்விகளால் துளைத்து எடுக்கும் நிலையில் அது குறித்து விமர்சிக்க விரும்பவில்லை என்று மிக மென்மையாக கடந்து போய்விட்டார் டிடிவி தினகரன். பாஜக பற்றியும் கடுமையான சொற்களை அவர் கடந்த சில வாரங்களில் பேசியதாக செய்திகள் இல்லை.
இந்த நிலையில் சசிகலா சந்திரலேகா சந்திப்பு அதிமுக - பாஜக இடையிலும், அதிமுக - அமமுக இடையிலும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில்தான் இன்று செப்டம்பர் 5ஆம் தேதி சசிகலாவை சிறையில் சென்று சந்திக்கிறார் டிடிவி தினகரன். அப்போது இந்த விவகாரங்களில் தற்போதைய நிலை என்ன என்றும் சந்திரலேகாவை சுப்பிரமணியன் சுவாமி அனுப்பி வைத்தாரா, சுப்பிரமணியன் சுவாமி மூலமாக பாஜக மேலிடம் அனுப்பி வைத்ததா என்ற கேள்விகளுக்கும் விடை கிடைக்கக் கூடும்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆப் லைன் போனது வாட்ஸ் அப்

கருத்துகள் இல்லை: