வெள்ளி, 21 ஜூன், 2019

மோடியை விமர்சித்த..குஜராத் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை ..


சஞ்சீவ்vikatan.com - பழனியப்பன் பிரதமர் நரேந்திர மோடியை சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்துவந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு, லாக்அப் மரணம் தொடர்பான ஒரு வழக்கில் ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான சஞ்சீவ் பட், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். 1990-ம் ஆண்டு இவர், ஜாம்நகரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது நிகழ்ந்த ஒரு காவல்நிலைய மரணம் தொடர்பான வழக்கில், தற்போது இவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பி.ஜே.பி தலைவர் எல்.கே.அத்வானி தலைமையில் நடைபெற்ற ரத யாத்திரையையொட்டி, 1990-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி பொது வேலைநிறுத்தம் நடைபெற்றுள்ளது.
அப்போது, ஜம்ஜோத்பூர் என்ற கிராமத்தில் கலவரம் ஏற்படுகிற சூழல் ஏற்பட்டதால், சஞ்சீவ் பட் தலைமையிலான போலீஸ் படை அங்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அங்கு சிறுபான்மையினருக்குச் சொந்தமான சொத்துகளைச் சேதப்படுத்தியதாக 133 நபர்களை தடா சட்டத்தின் கீழ் போலீஸார் கைதுசெய்தனர்.
போலீஸ் காவலின்போது பிரபுதாஸ் மாதவஜி என்கிற நபர் சித்ரவதை செய்யப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த அவர், 1990-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி மரணம் அடைந்ததாகவும் சொல்லப்பட்டது.
இது தொடர்பாக குஜராத் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தது. இந்த வழக்கு ஜாம்நகர் நீதிமன்றத்தில் நீண்டகாலம் நடைபெற்றுவந்தது. அனைத்துத் தரப்பு வாக்குமூலங்கள் மற்றும் இறுதி விசாரணையை நிறைவுசெய்த நீதிமன்றம், சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள்தண்டனை வழங்கி இன்று தீர்ப்பளித்தது.

கருத்துகள் இல்லை: