சனி, 22 ஜூன், 2019

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தமிழக காங்கிரஸ் தீர்மானம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக காங்கிரஸ் தீர்மானம்!
  மின்னம்பலம் : தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாக கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் இயற்றியுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜூன் 21) சென்னை சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் தேசிய செயலாளர்கள் சஞ்ஜய் தத், சிரிவல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி மற்றும் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின்போது காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தொடர வேண்டும், புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு, குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதில் அதிமுக அரசு தோல்வியடைந்துவிட்டதால் அதற்கு பொறுப்பேற்று உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி ராஜினாமா செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தேர்தல் ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களில் வெற்றிபெற்றது. தமிழகத்தில் மோடி-எடப்பாடி ஆட்சிகளுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு அலை வீசியதை உணரமுடிந்தது. அதே நேரத்தில் தேசிய அளவில் பாஜக வெற்றிபெற்று மீண்டும் பிரதமராக மோடி பொறுப்பேற்கிற வகையில் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. இத்தகையை வெற்றியை மோடி எப்படி பெற்றார் என்பது குறித்து பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன. தமது வகுப்பு வாத பிரச்சாரத்தின் மூலம் வட இந்தியாவில் பாஜக வெற்றிபெற்றிருந்தாலும் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை மீது பல்வேறு கருத்துக்கள் வெளிவருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, “தேர்தல் தொடங்கிய காலத்திலிருந்தே தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்துகொண்டு வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டின. தேர்தல் முடிவுக்கு பிறகு வெளிவந்த தகவல்கள் பல்வேறு சந்தேகங்களை உறுதிப்படுத்தியுள்ளன. குறிப்பாக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளிவந்த கருத்துக்களில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. ஏறத்தாழ 371 தொகுதிகளில் மொத்தம் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் நிறைய வித்தியாசம் இருந்ததை காண முடிந்தது. இத்தகைய வித்தியாசங்கள் தேர்தல் ஆணையத்தின் மீது இருந்த நம்பிக்கையை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் தீர்ப்பை ஜனநாயக ரீதியாக ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில் தேர்தல் ஆணையம், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் ஆகியவற்றின் மீது இருந்த நம்பிக்கை குறைந்திருப்பது கவலையளிக்கிறது. இதற்கு ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் குறிப்பிட்டு அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: