திங்கள், 25 பிப்ரவரி, 2019

திமுக கூட்டணியில் ஈஸ்வரனுக்கு நாமக்கல்!

திமுக கூட்டணியில் ஈஸ்வரனுக்கு நாமக்கல்!மின்னம்பலம் : திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி ஒரு தொகுதியில் போட்டியிடுவது உறுதியான நிலையில், அது எந்தத் தொகுதி என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்காக நாளை அறிவாலயம் வர இருக்கிறார் ஈஸ்வரன்.
இதற்கிடையில் கொமதேகவுக்கு திமுக கூட்டணிக்கு நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், அதில் ஈஸ்வரனே போட்டியிடுவதாகவும் கொங்கு வட்டாரங்களில் செய்திகள் பரவிக் கிடக்கின்றன.

12 நாடாளுமன்றத் தொகுதிகளில் தங்கள் கட்சி வலுவாக இருக்கிறது என்று குறிப்பிடும் ஈஸ்வரன், தங்கள் கட்சிக்கு பொள்ளாச்சி, நாமக்கல் ஆகிய தொகுதிகளை திமுகவிடம் கேட்டிருந்தார். ஏற்கனவே பொள்ளாச்சியில் அவர் நின்று இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார் என்பதால் அத்தொகுதியைக் கேட்டார். நாமக்கல் தொகுதியைக் குறி வைத்து கடந்த பல மாதங்களாகவே ஈஸ்வரன் வேலை செய்து வந்தார். 2 ஆம் உலகக் கொங்குத் தமிழர் மாநாட்டை இதற்காகவே நாமக்கல்லில் பிப்ரவரி முதல் வாரத்தில் நாமக்கலில் நடத்தினார் ஈஸ்வரன். அப்போதே நாமக்கல்லுக்கு ஈஸ்வரன் அஸ்திவாரம் போட்டுவிட்டார் என்ற பேச்சு எழுந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில், அடுத்தடுத்து பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமனம், குழுக்கள் நியமனம் என்று நாமக்கல் தொகுதியில் கொமதேகவினர் வேகவேகமாக வேலைகளில் ஈடுபட்டனர்.
சேலம் மகுடஞ்சாவடியில் நடைபெற்ற ஆதித் தமிழர் எழுச்சி மாநாட்டில் பங்கேற்ற ஈஸ்வரன், அருந்ததியர் சமூகத்துக்கும் கவுண்டர் சமூகத்துக்கும் கொங்குப் பகுதியில் நல்லிணக்கம் இருப்பதாகவும் அதை மேம்படுத்த வேண்டும் என்றும் பேசினார். நாமக்கல் தொகுதியில் அருந்ததியர் சமூகமும் கணிசமான அளவில் இருக்கிறார்கள்.
இந்தப் பின்னணியில்தான் ஈஸ்வனுக்கு நாமக்கல் தொகுதியை ஒதுக்க, ஸ்டாலின் சம்மதித்திருப்பதாக நாமக்கல் மாவட்ட திமுக நிர்வாகிகளே கூறுகின்றனர்.
“அதியமான் மாநாட்டை அடுத்து ஈஸ்வரனுக்கும் திமுகவினருக்குமான ஒருங்கிணைப்பு வேகம் பெற்றுள்ளது. அதிமுகவில் நாமக்கல் தொகுதி அமைச்சர் தங்கமணி முடிவு செய்பவருக்குத்தான் கிடைக்கும். அதேநேரம் அமமுகவும் இங்கே நிற்கும்போது அதிமுக வாக்குகள் பிரியும். இந்நிலையில் திமுக அணியில் உதயசூரியன் சின்னத்திலேயே ஈஸ்வரன் நிற்பது அவருக்கு சாதமாக இருக்கும்” என்கிறார்கள் மாவட்ட திமுக நிர்வாகிகள்.
ஆத்தூரில் நேற்று நடந்த கொமதேக பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகளும் நாமக்கல் தொகுதி ஈஸ்வரனுக்கு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: