சனி, 2 மார்ச், 2019

டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுக கூட்டணியில் .. ஒரு தொகுதி ..தனிசின்னம் ..

THE HINDU TAMIL : அதிமுக தலைமையிலான
கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு இன்று (சனிக்கிழமை) காலை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வந்தார். இதையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்துடன் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்பின், கூட்டணி இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தத்தில், கிருஷ்ணசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டனர். அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அத்தொகுதியில் தனிச்சின்னத்தில் அக்கட்சி போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து, தமிழகம், புதுச்சேரியில் வரும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி, புதிய தமிழகம் கட்சிக்கு 1 நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு புதிய தமிழகம் கட்சி முழு ஆதரவை அளிக்கும்" என்றார், ஓ.பன்னீர்செல்வம்.
இதையடுத்து பேசிய கிருஷ்ணசாமி, "தேசிய அளவில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியிலும், மாநில அளவில் அதிமுக தலைமையிலான மகத்தான வெற்றி கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
தேர்தலில் எங்கள் கட்சி முழு ஆதரவை அளிக்கும். 1 தொகுதியில் தனிச்சின்னத்தில் எங்கள் கட்சி போட்டியிடும். அதிமுக, பாஜக, பாமக எங்களுக்குப் பின்னால் இருக்கிறது. இன்னும் சில கட்சிகள் கூட்டணியில் வர உள்ளன. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்" என கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியில் ஏற்கெனவே பாஜகவுக்கு 5 தொகுதிகளும், பாமகவுக்கு 7 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: