ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் .. ஆசிரியர் வீரமணி அறிவிப்பு

திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவர் யார்?
மின்னம்பலம்: தனக்குப் பிறகு திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக யார் பொறுப்பேற்பார் என்பதைத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.
திராவிடர் கழகத்தின் சார்பில் தஞ்சையில் 2 நாள் சமூக நீதி மாநாடு இன்றும் நாளையும் நடக்கிறது. இந்த மாநாட்டின் முதல்நாளில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் சுபவீரபாண்டியன் ஆகியோரும், இரண்டாவது நாளில் திமுக தலைவர் முக.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, காதர் மொய்தீன், கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், ஜவாஹிருல்லா, இரா.அதியமான், எஸ்ரா.சற்குணம் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். மாநாட்டுத் திறப்பாளராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொள்கிறார்.

கருத்தரங்கம், பேரணி, இசை நிகழ்ச்சி, வீதி நாடகம், பறை முழக்கம், படத்திறப்பு நிகழ்வுகள் என பல நிகழ்வுகள் 2 நாள் மாநாட்டில் நடக்கின்றது. மாநாட்டில் இன்று காலையில் பேசிய கி.வீரமணி இந்த இயக்கத்தின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சமூக நீதி மாநாட்டின் நோக்கம் குறித்து அவர் பேசுகையில், “இந்த இயக்கத்தின் தொடர்ச்சிக்கு அடுத்த தலைவராக இந்த மாநாட்டின் தலைவரும், மகத்தான செயல்வீரருமான திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனை நாங்கள் பிரகடனப்படுத்துகிறோம்” என்று அறிவித்தார்.

இதன்மூலம் கி.வீரமணிக்குப் பிறகு இவ்வியக்கத்தின் அடுத்த தலைவராகக் கலி.பூங்குன்றன் செயல்படுவார் என்பதை அவர் அறிவித்துள்ளார். கலி.பூங்குன்றன் 1939ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி பிறந்தவர். அவரது சொந்த ஊர் மயிலாடுதுறை. பெரியார் கொள்கை மீது ஈடுபாடு கொண்டு இளமைக்காலம் முதல் திராவிடர் கழகத்தில் செயல்பட்டு வருகிறார். பெரியார் தலைமையில் சுயமரியாதை திருமணம் செய்துகொண்ட இவர், சுயமரியாதை இயக்கத்தின் செல்லப்பிள்ளை என்று பெரியாரால் அப்போதே பாராட்டப்பட்டவர். கால்நடைத் துறையில் விரிவாக்க அலுவலராகப் பணியாற்றி வந்த கலி.பூங்குன்றன் எமர்ஜென்சி காலத்தின்போது பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு திராவிடர் கழகத்தில் முழுநேர ஊழியராகச் செயல்படத் தொடங்கினார்.

திராவிடர் கழகத்தின் அணுகுமுறை, சாதி தீண்டாமை ஒழிப்பு அறப்போர் ஏன், பிள்ளை-யார்?, இயக்க வரலாற்றில் இராமாயண எதிர்ப்பு, பெரியார் ஒரு வாழ்க்கை நெறி, பெரியார் இல்லாவிட்டால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு நூல்களையும், கவிதைகளையும் எழுதியுள்ளார். திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான விடுதலையின் பொறுப்பாசிரியராகவும் செயல்பட்டு வருகிறார். பெரியாருக்குப் பிறகு மணியம்மையாரும், மணியம்மையார் மறைவுக்குப் பிறகு கி.வீரமணியும் திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்துவரும் நிலையில் அதன் 4ஆவது தலைவராக கலி.பூங்குன்றன் அடையாளம் காட்டப்பட்டுள்ளார்

கருத்துகள் இல்லை: