திங்கள், 25 பிப்ரவரி, 2019

முருகானந்தம் ஆஸ்கர் விருது ஆச்சரியம்...

ஆஸ்கர் விருது ஆச்சரியம்: முருகானந்தம் கருத்து!
மின்னம்பலம் : இந்தியப் பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் சந்திக்கும் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘பீரியட் என்ட் ஆஃப் சென்டன்ஸ்’ என்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
பெண்களுக்கான மலிவு விலை நாப்கின்களை உருவாக்கி, அது பற்றிய விழிப்புணர்வைக் கிராமங்களில் கொண்டுபோய்ச் சேர்த்தவர் கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம். இவரது வாழ்க்கையை மையப்படுத்தி, ஏற்கனவே ‘பேடு மேன்’ என்ற திரைப்படம் இந்தி மொழியில் உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்க நாட்டின் லாஞ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள ஆக்வுட் பள்ளி மாணவிகள் மற்றும் அங்குள்ள ஆசிரியரான மெலிஸா பெர்ட்டன் ஆகியோர் இணைந்து ‘தி பேடு ப்ராஜக்ட்’ என்பதனைத் தொடங்கினர். இதன்மூலமாக, கிராமப்புறப் பெண்களுக்கு நாப்கின் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்தனர். இதன் தொடர்ச்சியாக, அருணாச்சலம் முருகானந்தத்தைச் சந்தித்து, அவர் குறித்த ஆவணப்படம் ஒன்றை இயக்க விரும்பினார் ஈரான் – அமெரிக்க இயக்குனரான ராய்கா ஸெஹ்தாப்சி.
இந்த திரைப்படத்தை உருவாக்கிய இயக்குனர் தனது குழுவினரோடு இந்தியா வந்தார். தனது வாழ்க்கை வரலாறைப் பதிவு செய்ய ராய்கா விரும்பியதாகவும், அதற்குப் பதிலாக மாதவிடாய் காலத்தில் பெண்கள் படும் கஷ்டத்தைப் படம்பிடித்தால் நன்றாக இருக்குமென்று தான் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார் முருகானந்தம். இதன்பிறகு, உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஹாபூர் என்ற கிராமத்தில் நாப்கின் மெஷினை வைத்து, அங்குள்ள பெண்களின் செயல்பாடுகளை மறைமுகமாகப் படம்பிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் பின்னர், அவர்களது துயரங்கள், கருத்துகள் பதிவு செய்யப்பட்டது.
இவ்வாறு உருவாக்கப்பட்ட ‘பீரியட் என்ட் ஆஃப் சென்டன்ஸ்’ திரைப்படம், ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்றது. 26 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த திரைப்படம், நேற்று (பிப்ரவரி 24) நடந்த ஆஸ்கர் விழாவில் சிறந்த ஆவணப்படத்துக்கான விருதைப் பெற்றது. இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அருணாச்சலம் முருகானந்தம், “மாதவிலக்கின்போது பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் இதில் பதிவு செய்யப்பட்டது. இதற்கு உலக அங்கீகாரம் கிடைத்தது ஆச்சரியமாக உள்ளது” என்றார்.
“நான் ஆஸ்கர் விருதை எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே எனது வாழ்க்கை வரலாறு ‘பேடு மேன்’ என்ற இந்தித் திரைப்படமாக வெளிவந்துள்ளது. திரைப்படங்கள் ஒரு அளவுக்கு மேல் இந்த விஷயங்களைக் கொண்டுபோக முடியாது. ரொம்பவும் அருவெருப்பாகப் போய்விடும் வாய்ப்புண்டு. இதனால், சொல்ல வேண்டிய விஷயங்களை விளக்கமாகச் சொல்ல முடியாத வருத்தம் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் படும் கஷ்டம் குறித்துக் குறும்படம் எடுக்கும் எண்ணம் இருந்தது. மாதவிடாய் பேச முடியாத விஷயம் என்ற நிலை இன்றும் இருக்கும் நிலையில், இந்த ஆஸ்கர் விருதானது வளரும் நாடுகளில் இது பற்றிப் பேச உதவியாக இருக்கும்” என்று கூறினார்.

“இதற்கு முன்னர், இந்தியாவில் 2 சதவிகிதப் பெண்கள் நாப்கின் பயன்படுத்தினர். எங்களது 18 வருட உழைப்புக்குப் பிறகு 34 சதவிகிதம் பெண்கள் இதனைப் பயன்படுத்தும் நிலை உள்ளது. இன்னும் கிராமப்புறப் பெண்கள் முழுமையாக நாப்கின் பயன்படுத்துவதில்லை. இதற்கு சில மூட நம்பிக்கைகள் காரணமாக உள்ளன” என்று தெரிவித்த முருகானந்தம்,
யாரை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டதோ அந்த பெண்களை ஆஸ்கர் விருது விழாவுக்கு அனுப்பி வைத்ததாகக் கூறினார்.
மாதவிடாய் பிரச்சினை குறித்த விழிப்புணர்வு பல்வேறு மொழிகளில் வெளியாக வேண்டிய கட்டாயம் உள்ளது என்றும், எனவே பேடு மேன் மற்றும் பீரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ் படங்களைப் பள்ளி, கல்லூரிகளில் திரையிடத் தாம் முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார் முருகானந்தம்.

கருத்துகள் இல்லை: