சனி, 2 மார்ச், 2019

ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். 13 ஆம் தேதி ..பிரசார கூட்டங்கள்..

மின்னம்பலம் : தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும்
13ஆம் தேதி காங்கிரஸ்
தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வரவுள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என்ற சூழ்நிலையில், தமிழகத்தில் கூட்டணிகளை இறுதி செய்யும் வேலைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு புதுச்சேரியையும் சேர்த்து 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முஸ்லீம் லீக், கொமதேக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்துவிட்டன. தோழமைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்து இன்னும் சில நாட்களில் திமுக கூட்டணி இறுதி செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (மார்ச் 2) காங்கிரஸ் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், தங்கபாலு, கிருஷ்ணசாமி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி செயல் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து திருநாவுக்கரசர் தலைமையில் பிரச்சார ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டமும் நடந்தது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “வரும் 13ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக வர இருக்கிறார். அதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதுதான் காங்கிரஸின் முதல் ஆரம்ப பிரச்சாரமாக இருக்கும். எந்த இடம் என்பது விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார். வரும் 13ஆம் தேதிக்குள் கூட்டணி இறுதி செய்யப்படும் நிலையில், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் ராகுலோடு ஒரே மேடையில் பிரச்சாரம் செய்யலாம்.

கருத்துகள் இல்லை: