

Bala Subramanian : சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா?
---------------------------------------------------
தமிழக முதல்வர் சி.என். அண்ணாதுரையின் பிறந்த நாளன்று பலரும் அவரைப் பற்றிய நினைவுகளை, சாதனைகளைப் பகிர்ந்திருந்தனர். அதில் ஒரு குறிப்பில், போர்ச்சுகலிடமிருந்து கோவாவை விடுவிக்கப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரரான மோகன் ரானடேவின் விடுதலைக்காக போப் ஆறாவது பாலிடம் பேசியதாகப் படித்தேன்.
என்னதான் அண்ணாவைப் பிடிக்கும் என்றாலும் இந்தக் குறிப்பு சற்று அதிகமாகவேபட்டது. இதற்குப் பிறகு தொடர்ந்து தேடிப்பார்த்ததில் உண்மையாகவே அப்படி நடந்திருக்கிறது!!
கோவா விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட மோகன் ரானடே 1955ல் கைதுசெய்யப்பட்டு, 5 ஆண்டுகள் தனிமைச் சிறையில் இருந்த பிறகு, 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
1960ல் அவர் ஒரு சரக்குக் கப்பலில் லிஸ்பனுக்கு கொண்டுசெல்லப்பட்டு, அதற்கு அருகில் உள்ள காஸியஸ் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். 1961ல் இந்தியப் படைகள் கோவாவை விடுவித்துவிட்ட பிறகும் மோகன் ரானடே விடுதலைசெய்யப்படவில்லை.
இவரது விடுதலைக்கு கடுமையான முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், ஏதும் நடக்கவில்லை. பிரதமர் ஜவஹர்லால் நேருவே இதற்கு முயற்சித்தும் நடக்கவில்லை.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சராக 1967ல் பதவியேற்ற சி.என். அண்ணாதுரை, வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, வாட்டிகனில் போப்பாண்டவர் ஆறாவது பவுலைச் சந்தித்தார்.
அப்போதுதான் போர்ச்சுகல் அரசுக்கு அழுத்தம் கொடுத்து மோகன் ரானடேவை விடுவிக்க வேண்டுமெனக் கோரினார் அண்ணா.
இதற்கான ஆதாரங்கள் என்னென்ன? முதலாவதாக, மோகன் ரானடே 2014ல் அளித்த பேட்டி. அதில் தன்னை விடுவிக்க அண்ணாதுரை போப்பிற்குக் கடிதம் எழுதியதாகவும் இதையடுத்து போப் வலியுறுத்தியதால் தான் விடுவிக்கப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார் ரானடே.
ஆர். கண்ணன் எழுதிய அண்ணாவின் வாழ்க்கை வரலாற்று நூலான Anna – the life and times of C.N. Annaduraiல் போப் ஆண்டவரை அண்ணா தனிமையில் சந்தித்ததாக மட்டுமே சொல்லப்படுகிறது. கோரிக்கை குறித்து ஏதும் சொல்லவில்லை.
ஆனால், தனது சுயசரிதை நூலான நெஞ்சுக்கு நீதியில், மோகன் ரானடே இது தொடர்பாக அளித்த பேட்டியைச் சுட்டிக்காட்டுகிறார் மு. கருணாநிதி. போர்ச்சுகல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு இந்தியா திரும்பிய மோகன் ரானடே, 1969 மார்ச் 3ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தார். "போர்ச்சுக்கீசிய சிறைகளில் வாடும் இந்தியர்களின் விடுதலைக்கான குழு, அண்ணா அவர்களிடம் அவர் வெளிநாட்டுப் பயணம் செய்தபோது அவரிடம் எனது விடுதலைக்கு முயற்சி செய்யுமாறு கேட்டது. அண்ணா அவர்களும் புனித போப்பிடம் அந்தக் கோரிக்கையை சமர்ப்பித்து போர்த்துகீசிய அரசுக்குப் பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொண்டார். அதனை ஏற்றுக்கொண்ட போப் அவர்கள் நான் விடுதலைசெய்ய வழிவகுத்தார்" என்று அந்த செய்தியாளர் சந்திப்பில் ரானடே கூறியதாக கருணாநிதி குறிப்பிடுகிறார்.
1970ல் வாட்டிகன் சென்ற கருணாநிதி, இதற்காக போப்பிடம் நன்றி தெரிவித்ததாகவும் கூறுகிறார் (நெஞ்சுக்கு நீதி - பாகம் இரண்டு, அத்தியாயம் - 14. தியாக தீபங்கள்).
இப்படி வலியுறுத்த, சி.என். அண்ணாதுரைக்கு எவ்வளவு தெரிந்திருக்க வேண்டும்? கத்தோலிக்க தேசமான போர்ச்சுகலில் போப்பின் பேச்சுக்கு மதிப்பு உண்டு என்பது முதலில் புரிந்திருக்க வேண்டும். அதற்கு வாட்டிகன், போர்ச்சுகல் உறவு தெரிந்திருக்க வேண்டும்.
பிறகு, மோகன் ரானடே என்று ஒருவர் கோவாவின் விடுதலைக்காகப் போராடினார்; அவர் போர்ச்சுகல் சிறையில் இருக்கிறார்; அவரது விடுதலைக்கு இந்தியா முயற்சித்து வருகிறது என்பது தெரிந்திருக்க வேண்டும்.
சரி, அண்ணாதான் கேட்கிறார், போப் ஏன் அதைச் செய்ய வேண்டும்? இத்தனைக்கும் பார்த்தவுடன் அசந்துபோகக்கூடிய ஆகிருதியைக் கொண்டவரல்ல அண்ணா.
முடிவில் 1969ல் விடுதலையானார் மோகன் ரானடே. அப்போது அண்ணா உயிரோடு இல்லை. அவரை தில்லி சர்வதேச விமான நிலையத்தில் இந்திராவும் நாஞ்சில் மனோகரனும் வரவேற்றனர். பிறகு, மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியில் வந்து அஞ்சலி செலுத்தினார் ரானடே.
இப்படிப்பட்ட ஒரு தலைவரைத்தான் 'நொண்ணா', என்றும் 'கோமாளி' என்றும் ஒரு கும்பல் சொல்லிக்கொண்டு திரிகிறது.
----------------------------------
P.S. தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் நெருக்கமாகப் பேசக்கூடிய ஒருவர், அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, அண்ணா நீண்டகாலம் உயிரோடு இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கேட்டார். அதற்கு மு. கருணாநிதி, "தி.மு.க. தேசிய அளவிலான கட்சியாகியிருக்கும். அண்ணா உலக அளவில் பிரபலமான தலைவராகியிருப்பார்" என்றார்.
புகைப்படங்கள்: 1. போப் ஆறாம் பவுலுடன் சி.என். அண்ணாதுரை. 2. மோகன் ரானடே 2014ல்.
நன்றி. முரளிதரன் காசி விசுவநாதன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக