ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

இந்தியாவுக்கு அமெரிக்கா : பொருளாதாரத் தடைக்கு தயாராகுங்கள்!’’ ஈரான் விவகாரத்தில் மீண்டும் மிரட்டல்

tamil.thehindu.com :  ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என இந்தியாவுக்கு அமெரிக்கா மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது. நவம்பர் 4-ம் தேதிக்குப் பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடும் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
கச்சா எண்ணெய்யை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இராக், சவுதி அரேபியாவை தொடர்ந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் அனுப்பும் 3வது பெரிய நாடு ஈரானாகும்.
இந்த நிலையில், ஈரான் உடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தது.
ஈரான் ஒரு நாளைக்கு 24 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்கிறது. அதன் பிறகு உலக அளவில் ஈரானை தனிமைப்படுத்தும் வேலைகளை அமெரிக்கா செய்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.

இதனால் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய்யைப் பிற நாடுகள் வாங்குவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் ட்ரம்ப் எடுத்து வருகிறார். இதனால் ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தி முன்பைவிடக் குறைந்து, கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்துள்ளது. தேவை அதிகரிப்பின் விளைவாக விலையும் அதிகரித்துள்ளது.
ஈரானில் அதிக அளவு கச்சா எண்ணெய் வாங்கும் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா நேரடியாக மிரட்டல் விடுத்தது. எனினும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன.
இந்த நிலையில், ஈரான் விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பொருளாதார விவகாரங்களுக்கான துணை அமைச்சர் மணிஷா சிங் தெரிவித்ததாவது:
‘‘ஈரான் விஷயத்தில், மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஈரான், தவறான நோக்கத்துடன் அணுசக்தி திட்டங்களை செயல்படுத்துவதை அமெரிக்கா சகித்துக் கொள்ளாது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளோம்.
நவம்பர் 4-ம் தேதியுடன் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் எனக் கூறியுள்ளோம். இதனை ஏற்றுக் கொள்ளாத நாடுகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம். கண்டிப்பாக அந்த நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும். இந்த விஷயத்தில் எந்த சமரசத்துக்கும் இடம் கிடையாது’’ எனக் கூறினார்.
ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் விலக்கு அளிக்கும்படி, அமெரிக்காவுடன் இந்தியா பேச்சு நடத்தி வருகிறது. அமெரிக்காவின் மிரட்டலை அடுத்து ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவைக் கணிசமாக குறைக்க இந்தியா தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறு குறைக்கும்பட்சத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.
அதுட்டுமின்றி ஈரானிடம் இருந்து டாலர் அல்லாமல் நேரடியாக ரூபாயைத் தந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. இனிமேல் மற்ற நாடுகளிடம் இருந்து டாலரில் இறக்குமதி செய்ய வேண்டும் என்பதால் இந்திய ரூபாயின் மதிப்பிலும் சரிவு ஏற்படலாம் எனத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை: