செவ்வாய், 18 செப்டம்பர், 2018

இரட்டைமலை சீனிவாசனின் நினைவு தினம்!

இரட்டைமலை சீனிவாசனின் நினைவு தினம்!மின்னம்பலம் : தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே எழுந்த முன்னோடி ஆளுமைகளுள் ஒருவராகவும், சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கிய இரட்டைமலை சீனிவாசனின் நினைவு தினம் இன்று.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகில் உள்ள கோழியாளம் என்ற கிரமத்தில், ஜூலை 7ஆம் தேதி, 1859ஆம் ஆண்டு பிறந்தவர் இரட்டைமலை சீனிவாசன். விவசாயக் குடும்பத்தில் பிறந்த சீனிவாசனின் குடும்பம் சாதியக் கொடுமைகளாலும், குடும்ப வறுமையினாலும் தஞ்சைக்கும், பின்னர் கோவைக்கும் குடிபெயர்ந்தது. தஞ்சையில், பள்ளிப் படிப்பை மீண்டும் தொடர்ந்த அவர், கல்லூரிப் படிப்பைக் கோவையில் முடித்தார். 1887ஆம் ஆண்டில் ரெங்கநாயகி அம்மாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் 4 ஆண் குழந்தைகள் பிறந்தனர்.

ஒதுக்கப்பட்ட மக்கள் கோவில்களில் நுழையக் கூடாது; குறிப்பிட்ட தெருவில் செருப்பணிந்து செல்லக் கூடாது; ஒதுக்கப்பட்ட பெண்கள் மேலாடை அணியக் கூடாது என்பதும் தான் அப்போதைய இந்தியாவில் பின்பற்றப்பட்ட கொடுமையான விதிமுறைகள். இந்தப் போக்கு தற்போது முற்றிலும் நீங்கிவிட்டது என்றாலும், நவீனகால தீண்டாமை முறை ஒதுக்கப்பட்ட மக்களைச் சமூகத்திலிருந்து ஒதுக்கியே வைத்துள்ளது.
சமூக சீர்திருத்தவாதியும் வழக்குரைஞருமான இரட்டைமலை சீனிவாசன், ஆதி திராவிட மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்து, பறையன் இதழ் என்ற இதழையும் நடத்தியவர். இவர் தொடங்கிய பறையன் இதழ், தமிழ்ச் சமூகத்தில் மிகப்பெரிய சலனத்தை ஏற்படுத்தியது. 1893ஆம் ஆண்டு தொடங்கி 1900 ஆம் ஆண்டு வரை வெளிவந்த பறையன் இதழில், சமூக ஒடுக்கு முறை சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை வெளிச்சமிட்டுக் காட்டினார்.
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியவர் அண்ணல் அம்பேத்கர். அதேபோன்று தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவர்களின் உரிமைக்காக 100 ஆண்டுகளுக்கு முன்பே களத்தில் இறங்கிப் போராடியவர்தான் இரட்டை மலை சீனிவாசன். மிகவும் ஒதுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, ஒதுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் உழைத்தவர், இரட்டைமலை சீனிவாசன்.
தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைச் சார்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்ட இரட்டை மலை சீனிவாசன், சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டு, 1939ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். இவர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகளும், தீர்மானங்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாக இடம்பெற்றன.
"அனைத்து மக்களும் சாதிய பாகுபாடின்றி மக்கள் எந்த வீதியிலும் நடக்கலாம். தாழ்த்தப்பட்ட மக்களை, பள்ளர், பறையர் என்று அழைக்காமல் ஆதிதிராவிடர்கள் என்று அழைக்க வேண்டும். மது ஒழிப்புத் தீர்மானம், ஆலய நுழைவுத் தீர்மானம்"
போன்ற சமூக சீர்திருத்தங்களை இவர் சட்டப்பேரவையில் எழுப்பி, 2000 ஆண்டுக் கால அடிமை விலங்கை உடைத் தெறிய பாடுபட்டார்.இரட்டைமலை சீனிவாசனின் மற்றுமொரு முக்கிய தீர்மானம் மதுக்கடைகளை மூடவேண்டுமென்பது. கலால் வரி அதிகமாகக் கிடைப்பதால் ஆங்கில அரசு இந்தியா முழுவதும் நிறைய மதுக்கடைகளைத் திறந்து வைத்திருந்தது. இதில் உழைக்கும் மக்களான அடித்தட்டு மக்களின் பணம் உறிஞ்சப்படுவதாக சீனிவாசன் கருதினார். அறவே கடையை மூடச் சொன்னால் மூட மாட்டார்கள் என்பதால் குறைந்தபட்சம் விடுமுறை நாட்களிலாவது மதுக்கடைகளை மூடவேண்டும் என்று 1929ஆம் ஆண்டு சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதை அரசும் ஏற்றுக்கொண்டது.
லண்டனில் 1930 - 1932 ஆகிய இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டில் ஒதுக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாக அம்பேத்கருடன் கலந்து கொண்டார் இரட்டை மலை சீனிவாசன். ஒடுக்கப்பட்ட மக்களின் விகிதாச்சார அளவுக்கு ஏற்ப கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உரிய உரிமை அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்காளர் தொகுதி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இவர் ஆற்றிய உரைகள், தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினையை சர்வதேச கவனம் பெறச் செய்தன.
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை மூலமே சமூக விடுதலைச் சாத்தியம் என்று நம்பி தன்னையே அர்ப்பணித்துப் பாடுபட்ட இரட்டைமலை சீனிவாசன், 1945ஆம் ஆண்டு, செப்டம்பர் 18ஆம் தேதி பெரியமேடு என்னும் இடத்தில் இயற்கை எய்தினார்.
ஒதுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடிய இரட்டைமலை சீனிவாசனுக்கு 2000ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிட்டு, மத்திய அரசு அவரை கவுரவப்படுத்தியது.

கருத்துகள் இல்லை: