வியாழன், 20 செப்டம்பர், 2018

சட்டீஸ்கர் : அதிர்ச்சி நிறைந்த கதைகளால் நிரப்பப்பட்ட பஸ்தார் சாலை !

ஆகஸ்ட் 6, 2018 அதிகாலையில் மாவட்ட ரிசர்வ் படையினரால் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது மாவோயிஸ்டுகளா? அப்பாவி பொதுமக்களா? தி லீஃப்லெட் இணையதள பத்திரிகையாளர் கிரித்திகா அகர்வாலின் நேரடி ரிப்போர்ட்!
View image on TwitterMadkam Hidme, killed by Chhattisgarh Police, alleging she was a Maoist guerrilla from 'Kistaram Platoon no Villagers allege she was tending to paddy in her village Gompad when she was taken by police, raped, and then shot in cold blood + சுக்மாவில், ஆகஸ்ட்6, 2018 வினவு :அதிகாலையில் மாவட்ட ரிசர்வ் படையினரால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த என்கவுண்டரில் 15 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக நக்சல் எதிர்ப்புப் படை டி.ஐ.ஜி டி.எம். அவஸ்தி கூறினார். ஆனால் கோம்பத், நல்கடோங், வெல்போச்சா, கிண்டர்பாத் மற்றும் எடகட்டா கிராம மக்கள் அதனை மறுக்கின்றனர். அங்கு நடத்தப்பட்ட பயங்கரத்தை அவர்கள் விவரிக்கின்றனர்.அங்கு விசாரிக்கச் சென்ற ஒரு உண்மை கண்டறியும் குழுவுடன் இணைந்து பத்திரிகையாளர்களோடு சென்ற, தி லீஃப்லெட் இணையதளத்தின் கிரித்திகா அகர்வால்,பாதுகாப்பு என்ற பெயரில் குற்றமற்றவர்கள் மீதான கண்ணுக்குத் தெரியாத மற்றும் இதுவரை கேட்டறியாத அநீதியான வன்முறைகளை கிராம மக்களிடம் கேட்டு பதிவு செய்துள்ளார்.
 அன்புக்குரியவர்களின் இழப்பு, சிதைக்கப்பட்ட உடல்களின் நினைவுகள் மற்றும் பதிலில்லா கேள்விகள் என இழப்புகள் மற்றும் அதிர்ச்சிகளால் நிறைந்த கதைகளால் பஸ்தாருக்கு (Bastar) செல்லும் சாலை நிரப்பப்பட்டுள்ளது.
மாவட்ட ரிசர்வ் படையால் (District Reserve Guards) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க என்கவுண்டரில் 15 மாவோயிஸ்டுகள் 2018, அகஸ்டு, 6-ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டதாக நக்சல் எதிர்ப்புப்படை டி.ஐ.ஜி.  டி.எம் அவஸ்தி கூறினார். ஆனால் அக்கிராம மக்கள் தங்களுக்கு நேர்ந்த பயங்கரத்தை விவரிக்கின்றனர். 

பஸ்தார், உலகின் மிகவும் இராணுவமயமான பகுதிகளில் ஒன்று.
பசுமையான தண்டகாரண்யா காடுகளின் பின்னணியில் சுக்மாவிலிருந்து (Sukma)கொண்டா(Konta) வரைக்கும் சுமார் 80 கிலோமீட்டர் தூரம் பரவியிருக்கும் மத்திய ரிசர்வ் படை மற்றும் காவல்துறையினரின் முகாம்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது கடினம். வாகனங்கள் செல்லத்தக்க சாலைகளின் எல்லைகளை நெருங்க நெருங்க முகாம்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இந்தியா முழுவதிலிருந்தும் வந்திருக்கும் சி.ஆர்.பி.எப் வீரர்கள் துப்பாக்கிகளை தங்களது முதுகில் தொங்கவிட்டு அணிவகுத்துச் செல்வது போர் பகுதிக்கு வந்துவிட்டது போல தெரியும்.பெயர்கள் மற்றும் அலைபேசி எண்களை தொடர்ந்து பதிவு செய்வதையும் சில நேரங்களில் அடையாள அட்டைகளை கேட்பதையும் பார்த்தால் கண்காணிப்பிற்குள் இருப்பதைப் போலவும் ஏதோ வரக்கூடாத இடத்திற்கு வந்ததைப் போலவும் ஒரு அச்சஉணர்வு ஏற்படுவது தவிர்க்க முடியாதது.




காட்டில் மாவோயிஸ்டுகள் இருக்கிறார்கள் என்பதை வெட்டிச் சாய்க்கப்பட்ட இத்தகைய மரங்கள் குறிக்கின்றன.
இந்துஸ்தான் டைம்ஸின் அறிக்கைப்படி சத்தீஸ்கரில் தற்போது 31 சி.ஆர்.பி.எப் படைப்பிரிவுகள் குவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு படைப்பிரிவும், அடர்ந்த காடுகளில் சண்டையிடும் திறன் படைத்த கோப்ரா (CoBRA)படையணிகளையும் உள்ளடக்கிய 1000 படையணிகளுக்கும் மேல் கொண்டது. மாவோயிஸ்டுகளின் எல்லைப்பகுதிகள் மற்றும் அப்பகுதி மக்களது கலாச்சாரங்களை தெரிந்துக்கொlள்வதற்காக முறையாக பயிற்சியளிக்கப்படாத பஸ்தார் பழங்குடி மக்களை கொண்டு உருவாக்கப்பட்ட பஸ்தாரியா படைப்பிரிவு கடந்த 2017-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.2018, ஆகஸ்டு மாத இறுதியில் இன்னும் ஏழு படைப்பிரிவுகள்குவிக்கப்பட இருந்தன. ஆந்திரப்பிரதேசத்தின் ‘வேட்டை நாய்கள் (Greyhound)’ வரிசையில் சத்தீஸ்கரும் சொந்தமாக ‘கருஞ்சிறுத்தை (Black Panther)’ என்றழைக்கப்படும் சிறப்பு நக்சல் எதிர்ப்புப் படையை பெற உள்ளதாக 2018, மே 21-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார்.
’சத்தீஸ்கர் உலகிலேயே மிகவும் இராணுவமயமாக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும்’ – இப்பகுதிக்கு செல்லும் எவரிடமிருந்தும் நழுவமுடியாத உண்மை இது.
கோம்பாத் கிராமம், மேக்தா பஞ்சாயத்து
வாகனங்கள் செல்லும் சாலைகூட கோம்பாத்(Gompad) கிராமத்தில் கிடையாது. அனைத்து சாலைகளும் கொண்டா கிராமத்தோடு முடிந்து விடுகின்றன. அதன் பிறகு மாவோயிஸ்டுகளின் எல்லை தொடங்குகிறது. கடைசி வாகனச் சாலையின் எல்லையிலிருந்து அடர்ந்த பசுமையான காட்டினை கடந்து 20-25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது கோம்பாத். ஆறுகள், வயல்வெளிகள், காட்டுப்பகுதிகள் மற்றும் சகதியான பாதைகள் என மழைக்காலத்தில் அந்த 20-25 கிலோமீட்டர் தொலைவைக் கடக்கவே வெளியாட்களுக்கு 6 மணி நேரம் பிடிக்கும். கீழே விழுந்திருக்கும் மரங்கள்தான் நக்சல்கள் இருப்பதற்கான பொதுவான அடையாளம். கோம்பாத்திலிருந்து ஐந்து கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் இருக்கும் கிராமம்தான் நல்கடாங். இதன் அருகாமையில்தான் மோதல் கொலைகள் நடந்ததாகச் சொல்லப்படும் இடம் உள்ளது.




பிளாஸ்டிக் பையால் சுற்றப்பட்ட நிலையில் உடல்கள்.
நடத்தப்பட்ட 15 மோதல் கொலைகளாக சொல்லப்படுவதில் தலா ஆறு பேர் கோம்பாத்தையும் நல்கடாங்கையும் சேர்ந்தவர்கள். மேலும், வெல்போச்சாவை சேர்ந்த ஒருவர், எடகாடாவை சேர்ந்த ஒருவர் மற்றும் கிண்டர்பாத்தை சேர்ந்த மற்றொருவர் என அனைவரும் சுக்மா மாவட்டத்தின் ’கொண்டா’ போலீசு நிலைய எல்லைக்கு உட்பட்டவர்கள். சொல்லப்படும் மோதல் கொலைகள் நடந்த இடத்திற்கு அருகிலிருக்கும் நல்கடாங் கிராமம் கோண்டாவிலிருந்து 20-25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. மிகப்பெரிய நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையாக இதைக் குறிப்பிடுகிறார் சிறப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளரான டி.எம் அவஸ்தி. “காலை 7 மணிக்குப் பிறகு ஒருமணி நேரம் இருதரப்பிற்கும் துப்பாக்கிச்சூடு நடந்தது. துப்பாக்கிச்சூடு தொடங்கிய பிறகு மற்றொரு குழுவையும் அங்கு அனுப்பினோம். அங்கே நாங்கள்15 உடல்களையும் 16 ஆயுதங்களையும் கைப்பற்றினோம்” என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார். “அங்கே மொத்தம் 170 பாதுகாப்புப் படையினர் இருந்தனர். ’கொண்டா’விலிருந்து ஒரு படைக்குழுவும் பீஜியிலிருந்து 2 படைக்குழுக்களும் சென்றன. மூன்று மாவட்ட ரிசர்வ் பாதுகாப்புப் பிரிவுகளும்(District reserve Guards) ஒரு சிறப்பு நடவடிக்கைப் படையினரும்(Special Task Force) அதிலிருந்தனர்” என்று அவர் ’தி லீப்லெட்டுக்கு’(The Leaflet) அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
ஆனால் இச்சம்பவம் கிராம மக்கள் கூறுவது இதற்கு முற்றிலும் வேறுபட்டது. நடந்தேறியது ஒரு போலி மோதல் கொலைதான் என்றும் கொலையானவர்கள் அனைவரும் சாதாரண கிராம மக்கள், அதிலும் பெரும்பாலானோர் சிறுவர்கள்தான் என்றும் கிராம மக்கள் கூறுகின்றனர்.
2018,  அகஸ்டு, 6 – கோம்பாத் கிராம மக்கள் மறக்க முடியாத நாள்
அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினரின் இருப்பு என்பது கிராம மக்களை பொறுத்தவரையில் ஒரு பெரும் பயங்கரத்தின் இருப்பாகும். ஆகஸ்டு மாதம் 5-ஆம் தேதி காலையில் கோம்பாத் கிராமத்தின் உள்ளேயும் சுற்றிலும் பாதுகாப்புப் படையினர் நுழைந்துவிட்டார்கள் என்ற செய்தி அப்பகுதி முழுதும் பரவியது. பாதுகாப்புப் படையினரால் நக்சல் என்று பொய்யாக முத்திரைகுத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்படவோ கைது செய்யப்படவோ கூடும் என்பதால் கிராமங்களில் இருந்து காடுகளுக்குள்ளோ அல்லது பக்கத்து கிராமங்களுக்கோ ஓடி ஒளிந்து கொள்வது ஆடவரின் வழக்கம். இந்த அச்சமே பஸ்தாரின் ஆன்மாவை ஆக்கிரமித்துள்ளது.
பஸ்தார் பகுதிவாழ் பெண்களின் அனுபவம் ஆண்களைக் காட்டிலும் வேறாக இருப்பதை கண்டிப்பாக இங்கே குறிப்பிட வேண்டும். பாதுகாப்புப் படைகள் கிராமங்களுக்குள் நுழைந்தவுடன் கிராமத்தையும், வீடுகளையும், குழந்தைகளையும், வயதானவர்களையும், கால்நடைகளையும் மேலும் அவர்களிடம் என்னவெல்லாம் இருக்கின்றனவோ அனைத்தையும் பெண்கள்தான் அங்கேயே இருந்து பாதுகாக்க வேண்டி இருக்கிறது.




சுட்டுக் கொல்லப்பட்ட முச்சாகி முகேஷின் தாய் முச்சாகி சுக்ரி.
“பெண்களையும் சிறுமிகளையும் தவறான நோக்கில் அவர்கள் தொடுவார்கள். பாதுகாப்புப்படைகள் கிராமத்திற்குள் நுழைகிறார்கள் என்ற செய்தி கிடைத்ததுமே கிராமப் பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொள்ள முயல்கிறோம். அவர்கள் எங்களது வீட்டிற்குள் பலாத்காரமாக நுழைந்து எங்களது கால்நடைகளை கொன்று சமைத்து சாப்பிட்டனர்” என்கிறார் நல்கடாங்கை சேர்ந்த ஒரு வயது குழந்தையின் தாய் ஒருவர்.
துயரம் நிகழ்ந்த அன்று 10-11 பேர் தங்களது மகன்களுடன் ’கோம்பாத்’திலிருந்து ’நல்கடாங்’கிற்கு தப்பிச்சென்று அங்கு வயல்களில் உள்ள குடிசைகளில் தங்கியிருந்தனர். நல்கடாங் மற்றும் எடகட்டா  கிராமங்களை சேர்ந்த வேறு சிலரையும் சேர்த்து மொத்தம் 40 பேர் அங்கு இருந்ததாக கிராமத்தினர் கூறினர்.
திடீரென்று பாதுகாப்புப்படைகள் தங்களை சூழ்ந்து கொண்டதாக தாக்குதலில் இருந்து தப்பிய நேரில் பார்த்த சாட்சியான கார்த்தி கோசா கூறினார். ”நாங்கள் எங்களது கைகளை உயரத்தூக்கி எங்களிடம் ஆயுதம் எதுவுமில்லை என்று காட்டினாலும் அவர்கள் தடியாலும் துப்பாக்கிக் கட்டையாலும் தாக்கி பின்னர் எங்கள் மீது துப்பாக்கிச்சூட்டை நடத்தினர்” என்று கோசா கூறினார்.
“தப்பி ஓடுகையில் என்னுடைய காலிலே குண்டுபட்டுக் காயமானேன். பின்னர் எப்படியோ ஆற்றில் குதித்து தப்பி விட்டேன். ஆனால் என்னுடைய 12 வயது மகன் கார்த்தி அயடாவை அவர்களது துப்பாக்கி குண்டுக்கு பலி கொடுத்து விட்டேன்” என்று சுக்கா வேதனையுடன் கூறினார்.
கார்த்தி அயடாவுடன் போலி மோதல் கொலையானவர்களில் ஒரு வயது குழந்தையின் தந்தையும் வார்டு தலைவருமான சோயம் சந்திராவும் ஒருவர். தான் ஒரு வார்டு தலைவர் என படைவீரர்களை நோக்கி அவர் கத்தினாலும் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் முதல் ஆளாய் அவரை சுட்டுக்கொன்று அவரது தலையை மண்வெட்டியால் அடித்து நொறுக்கி விட்டனர் என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். அவர்களுடன் இறந்தவர்களில் கோம்பத் கிராமத்தைச் சேர்ந்த சோயம் சீதா, கார்த்தி ஹித்மா, மாத்வி நந்தா மற்றும் மாத்வி தேவா ஆகியோரும் அடங்குவர்.




படையினாரால் சுட்டுக் கொல்லப்பட்ட கார்த்தியின் தந்தை சுக்கா, அவரது காலிலும் பாதுகாப்புப் படையினரின் தோட்டா பாய்ந்துள்ளது.
காலில் குண்டடிபட்ட சுக்காவுக்கு இன்னும் சிகிச்சை கிடைக்கவில்லை. 20-25 கிமீ தொலைவில் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்றால் நக்சல் என்று முத்திரை குத்தி காவல்துறை கைது செய்துவிடும் என அவர் அஞ்சுகிறார்.
இறந்துபோன சிறுவன் கார்த்தி அயடா படித்து வந்த போர்டா கேபின் பள்ளியில் ஆசிரியர்கள் கிடையாது. கடந்த ஆண்டு 3-ஆம் வகுப்பு படித்து வந்த அவன் வேறு அருகாமை பள்ளி எதுவும் இல்லையென்பதால் ஏனையோரைப் போலவே பாதியிலேயே பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டான் என கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.
சுகாதார நிறுவனமோ, பள்ளிக்கூடமோ, அங்கன்வாடியோ, மின்சாரமோ எந்த வசதியும் கிடையாது. குடிமக்கள் என்பதற்கான எந்த அடையாள அட்டையும் இல்லை. இதுவரை ஓட்டே போடாத அவர்களில் சிலர் மட்டுமே ஆதார் அட்டையை பெற்றுள்ளனர். உயிரிழந்த சோயம் சந்திராவும் அவர்களில் ஒருவர்.
நல்கடாங், துயரம் நடந்த இடம் அருகே உள்ள கிராமம்
தற்போது நடைபெற்ற போலி மோதல் படுகொலை சம்பவத்தில் முக்கா என்றழைக்கப்படும் முச்சாகி முகேஷின் தாயார் முச்சாகி சுக்ரிஇதற்கு முன்னர் கணவனது உயிரை ’சல்வா ஜுடும்’ எப்படி பறித்தது என்பதைக்கூறினார். பாதுகாப்புப்படை கிராமத்தை முற்றுகையிட்டவுடன் தன்னுடைய குழந்தைகளுடன் காட்டை நோக்கி தப்பி ஓடும்போது வயிற்று வலியால் பின்னடைந்த அவரது கணவர், அவர்களுடன் தாம் பின்னர் வந்து சேர்ந்து கொள்வதாகக் கூறியுள்ளார். ஆனால் அவர் வந்து சேரவில்லை. பாதுகாப்புப்படை அவரை சுட்டுக் கொன்றது. அவரது இறுதிச் சடங்கை செய்யக்கூட அவரது குடும்பம் அனுமதிக்கப்படவில்லை.தற்போதைய தாக்குதலில் அவரது மகனையும் இழந்துவிட சோகம் அவரைத் தொடர்கிறது.
அல்ஜசீராவின் அறிக்கையின்படி 2009-ன் ஆண்டு, அக்டோபர்2-ம் தேதி அன்று மத்திய அரசின் பாதுகாப்புப்படைகள் கோம்பத் கிராமத்தை தாக்கியதில் 9 பேர் பலியானார்கள். எட்டு வயது சிறுமியைக் கொன்றது, ஒரு 18 மாத குழந்தையின் விரல்களை குரூரமாக வெட்டியது, அவனது தாயை சித்திரவதை செய்து கொன்றது, அவனது தாத்தா பாட்டியை சுட்டுக் கொன்றது என அனைத்தும் அவற்றில் அடங்கும். அதே நாளில் ரோந்துப்படை மேலும் 2 இளைஞர்களை சுட்டுக் கொண்றது. ஸ்க்ரோல் இணையதள தகவலின்படி கொலையானவர்களின் எண்ணிக்கை 16.




முச்சாகி தேவாவின் தாய் முச்சாகி சன்னி தமது ரேசன் அட்டையைக் காட்டுகிறார்.
சல்வா ஜூடும் நிகழ்த்திய கொடுமைகளை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்தவர்களில் முச்சாகி சுக்ரியும் ஒருவர். தன்னுடைய கணவரை கொன்றது நக்சல்களா இல்லை பாதுகாப்புப்படையா என்பது தனக்கு தெரியாது என்று சொல்லுமாறு கட்டாயப்படுத்தி சல்வா ஜூடுமின் தலைவரான பி.விஜய் தன்னை ஒரு மாதம் சிறை வைத்ததை அவர் நினைவுகூர்கிறார்.எப்படிப்பட்ட அச்சுறுத்தல்கள் வந்தாலும் தன்னுடைய மகனுக்கு நீதி கிடைக்கநீதிமன்றம் செல்லவே அவர் விரும்புகிறார். நல்கடாங்கை சேர்ந்த கொல்லப்பட்ட அறுவரில் ஐவர் சிறுவர்கள் என்கின்றனர் கிராம மக்கள்.
ஆனால் இறந்தவர்களில் 13 பேர் பதினேழுவயதுக்கும் மேற்பட்டவர்கள் என்று கூறுகிறார், சுக்மா காவல்துறை கண்காணிப்பாளரான அபிஷேக் மீனா. எலும்பை ஆய்வு செய்து பார்த்ததில் பெரும்பாலானோரின் வயது 18-லிருந்து 20 ஆக தெரிகிறது என்றும் மாவோயிஸ்டுகளும் அவர்களது பெற்றோர்களும்கூட அதையேதான் சொல்லுகிறார்கள் என்றும்அவர் கூறினார். ஆனால் பெற்றோர்கள் அதை மறுக்கிறார்கள்.
கிராம மக்கள் சொல்லும் வயதை விட கொல்லப்பட்டவர்களின் வயது அதிகமாக இருப்பதை அவர்களது குடும்ப அட்டை உறுதி செய்கிறது என்று அபிஷேக் மீனா கூறினார். ஆனால் லீப்லெட் இணையதளம் ஆய்வு செய்த இரண்டு குடும்ப அட்டை வேறு பார்வையை கொடுக்கிறது.
முச்சாகி சுக்ரியின் மகனான முச்சாகி முக்காவின் வயது 2013-ஆம் ஆண்டு பதிவு செய்யப்படும் போது 8. அதே போல 2014-ஆம் ஆண்டு பதிவு செய்யப்படும்போது முச்சாகி சன்னியின் மகனான முச்சாகி தேவாவின் வயது 7.
போலி மோதலில் கொல்லப்பட்ட மற்றொரு சிறுவனான ஹிட்மாவின் வயது 14 என்கின்றனர் கிராம மக்கள். தங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ள இருந்த ஒரே நம்பிக்கை ஹிட்மா மட்டுமே என்று கதறுகிறார் பார்வையற்ற அவனது தந்தை லக்மா. ஹிட்மாவை சுட்டப்பிறகும் அவன் உயிருடன்தான் இருந்தான் என்றும் தண்ணீர் கேட்டும் பாதுகாப்பு படைவீரர்கள் அவனுக்கு கொடுக்கவில்லை என்றும் லக்மாவின் சகோதரர் மட்கம் உங்கா கூறினார்.




சுட்டுக் கொல்லப்பட்ட 12 வயது சிறுவன் கார்த்தியின் புகைப்படம்.
மட்கம் லக்மாவும் அந்த போலி மோதல் படுகொலையில் கொல்லப்படும்போது அவனது வயது 16-17 இருக்கும் என்று கிராம மக்கள் கூறுகின்றனர். அவனது அம்மாவும் பார்வையற்றவர். இரண்டு கால்களின் கீழ்பகுதியும் நொறுங்கிய நிலையில்தான் அவனது உயிரற்ற உடலை பார்த்ததாக அவனது சகோதரர் கூறினார். முச்சாகி தேவாவின் வயது என்ன என்று கேட்டபோது, மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக போர்டா கேபின் பள்ளியில் படித்ததாகவும் பின்னர் அவன் நின்று விட்டதாகவும் அவனது நண்பன் கூறினான். நல்கடாங்கை சேர்ந்த கொல்லப்பட்ட அறுவரில் முச்சாகி லக்மா மட்டுமே 30 வயதுநிரம்பியவர் என்று கிராம மக்கள் கூறினர்.
தண்டேவாடா ஆம் ஆத்மி கட்சி தலைவரும் பழங்குடி பள்ளி ஆசிரியருமான சோனி சோரியும் ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து வந்த வழக்குரைஞர்களும்தான் கிராம மக்களை தூண்டி விட்டதாக அபிஷேக் மீனா குற்றஞ்சாட்டினார். ஆனால் காங்கிரசு தலைமையிலான தகவல் அறியும் குழுவிடம் கூட மக்கள் பேசுவதற்கு தயங்கியதாகவும் அபிஷேக் மீனா கூறினார். ஆனால் அந்தக் குழுவில் அங்கத்தினராக இருக்கும் எங்களுக்கு சோனி ஷோரியிடமிருந்தோ அல்லது ஆந்திர வழக்குரைஞர்களிடமிருந்தோ எவ்வித மிரட்டலோ அச்சுறுத்தலோ வரவில்லை.
கைதுகள்
முதலில் அகஸ்டு 6-ஆம் தேதி கிராமத்தைச் சேர்ந்த 4 பேரைக் கைது செய்தது போலீசு. ஆனால் டி.எம். அவஸ்தி தனது பத்திரிகை செய்தியில், இரண்டு பேரை மட்டுமே கைது செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். குண்டடிபட்ட துதி புத்ரி என்ற பெண்ணும் மாவோயிஸ்ட் தலைவர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு தலைக்கு 5 இலட்சம் அறிவிக்கப்பட்ட மார்த்தம் தேவா ஆகிய இருவரை மட்டுமே குறிப்பிடுகிறது போலீசு.
அபிசேக் மீனா, லீஃப்லெட் இணையதளத்துடன் தொலைபேசியில் பேசுகையில், தங்களுக்குக் கிடைத்த தகவலின்படி சுமர் 25-30 மாவோயிஸ்டுகள் அப்பகுதியில் இருந்ததாகத் தெரிவித்தார். அனைவரும் மாவோயிஸ்டுகளா என்று கேட்டதற்கு அண்டா மற்றும் லக்மா இருவரைத் தவிர மற்றவர்கள் மாவோயிஸ்டுகள்தான் என பதிலளித்தார். அவர்கள் சங்கமாவின் உறுப்பினர்கள் என்றும் அவர்கள் நீண்ட நாள் மாவோயிஸ்டுகள் அல்ல என்பதால் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
ஆனால் இது  தீவிரமான சந்தேகங்களை எழுப்புகிறது. அவர்கள் இருவர் மட்டுமே மாவோயிஸ்டுகள் அல்ல என்பது எப்படி தெரிந்தது? ‘தேடப்பட்ட மாவோயிஸ்டு’ மரத்தம் தேவாவின் தலைக்கு 5 இலட்சம் அறிவித்தது குறித்து கேட்டபோது, ஒரு தவறு நேர்ந்து விட்டதாக அவர் கூறினார். அதாவது கோம்பத்தை சேர்ந்த தேவாவை கைது செய்வதற்கு பதிலாக தவறுதலாக நல்கடாங்கை சேர்ந்த புரட்சிகர மக்கள் குழுவின் (Revolutionary People’s Council) வேறொரு தேவாவை கைது செய்துவிட்டதாகவும், அவரும் தேடப்பட்டு வந்த குற்றவாளி எனினும், தலைக்கு பணம் அறிவிக்கப்படாதவர் எனக் கூறினார்.




ஹித்மாவின் தந்தை லக்மா.
துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதும் அந்த இடத்திற்கு கிராமப் பெண்கள் கூட்டமாக ஓடியதால் படுகொலையானோர் எண்ணிக்கை குறைந்ததாக முச்சாகி முகேஷின் தமக்கை ஹித்மே கூறினார். கர்ப்பிணி பெண் ஒருவர் உட்பட பெண்கள் எப்படி பாதுகாப்புப்படையினரால் அடித்து நொறுக்கப்பட்டனர் என்பதை லிங்கராம் கொடோபி என்ற பழங்குடி செயற்பாட்டாளர் ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
இது ஒரு அப்பட்டமான போலி மோதல் கொலை என்று சோனி சோரி குற்றஞ்சாட்டுகிறார். மக்கள் யுத்தக்குழுவைச் சேர்ந்த சிலர் மட்டுமே இருந்ததாகவும் ஆனால் கொல்லப்பட்ட அனைவரும் அப்பாவியான கிராம மக்களே என்றும் சோனி சோரி குற்றம் சாட்டினர். “நான் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தாரிடம் பேசினேன். குறைந்தது அறுவர் சிறுவர்கள். சட்டத்தின் ஆட்சிக் குறித்த எந்த தோற்றமும் இல்லாதபோது நாம் எப்படி அரசியலமைப்பை பற்றி பேச முடியும்?” என்று அவர் கேட்கிறார்.
மக்கள் போர்ப் படை:
மக்கள் போர்ப்படையைச் சேர்ந்த பதின்ம வயதின் இறுதிகளில் அல்லது இருபதுகளில் இருப்பவர்கள்தான் அடிப்படையான மாவோயிஸ்ட் படையினர். மாவோயிஸ்டுகள் உருவாக்கிய இணை அரசாங்கத்தைக்கட்டிக்காப்பது, பாதுகாப்பு படைவீரர்களிடம் இருந்து கிராம மக்களை காப்பது மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு சில வேலைகளை செய்து கொடுப்பதுதான் அவர்களின் பணி. அவர்களது ஆயுதங்கள் பெரும்பாலும் வில் அம்பு மட்டுமே. சில நேரங்களில் துப்பாக்கிகளையும் பயன்படுத்துகிறார்கள்.
நல்கடாங்கில் மற்றொரு நாள்
கடந்த ஆகஸ்ட் 18, 2018 அன்று கிராமத்தை விட்டு வெளியேறி அருகில் உள்ள டூமா கிராமத்திற்குச் செல்லுமாறும், அடுத்தநாள் அங்கு நக்சல்கள் வருவதாக தங்களுக்குத் தகவல் கிடைத்திருப்பதாகவும், அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்பதால் உடனடியாக காலி செய்யும்படி பாதுகாப்புப் படையினர் மிரட்டியுள்ளனர்.
மறுநாள் சில குடும்பங்கள் கிராமங்களுக்கு திரும்பியதும் அவர்களிடமிருந்து அரிசியையும் பயறு வகைகைளையும் பாதுகாப்புப்படையினர் திருடித் தின்றுள்ளனர். மேலும் அவர்களது நெடுநாள் சேமிப்புப் பணத்தையும் திருடியிருக்கின்றனர். “இது புதுவிதமான வழக்கம். பொதுவாக கிராமத்தவர்களை அடிப்பதைத்தான் செய்வார்கள். இது சல்வா ஜூடும் காலகட்ட நடைமுறைகளை நினைவுபடுத்துகிறது” என்கிறார் சோனி சோரி.
மட்கம் ஹிட்மேயின் கறைப்படியாத நக்சல் சீருடை
பாதுகாப்புப் படையினரின் வெறியாட்டங்கள் கோம்பத் கிராமத்திற்கு ஒன்றும் புதிதல்ல. 2016, ஜூன் 15-ஆம் தேதி பாதுகாப்புப்படையினர் நடத்திய வெறியாட்டம் கோம்பத் கிராமத்தினரால் என்றுமே மறக்க முடியாது. கிராமத்திற்குள் பாதுகாப்புப்படையினர் நுழைந்த அன்று மட்கம் லக்ஷ்மி கோதுமை கதிரடித்து கொண்டிருந்தார். அப்பொழுது தூங்கிக்கொண்டிருந்த அவரது மகள் மட்கம் ஹிட்மேவை தூக்கிக்கொண்டு கிராமத்து மக்கள் எதிர்ப்பையும் மீறி பாதுகாப்புப் படையினர் காட்டிற்கு சென்ற பிறகு நெகிழி பையில் போர்த்தப்பட்ட நக்சல் சீருடையணிந்த அவரது உயிரற்ற உடல்தான் கிடைத்தது. ஆனால் அவரை கடத்திச் செல்லும்போது லுங்கி, மேற்சட்டை, வளையல்கள் அணிந்திருந்ததாக கிராம மக்கள் கூறினார்கள். அதே சமயத்தில் அவருக்கு அணியப்பட்ட சீருடை பெரிதாகவும் கலையாமலும், அவரது உடலில் உள்ள துப்பாக்கிக் குண்டுகளைவிட குறைவான துளைகளுடனும் இருந்தது. என்கவுண்டரின்போது ஹிட்மேயின் சீருடை கொஞ்சம் கூட கறைப்படியாமல் இருந்தது எப்படி என்று கேட்கிறார் மூத்த பத்திரிக்கையாளரானஇராகுல் பண்டிதா.

மேட்கம் லக்ஷ்மியின் போராட்டம் அன்று காலையிலேயே தொடங்கிவிட்டது. முடிவில் சத்தீஸ்கரின் உயர்நீதிமன்றம் ஹிட்மேயின் உடலை மறு உடற்கூறாய்வு நடத்த உத்தரவிட்டது. ஆனால் உடற்கூறு ஆய்வு முடிந்து ஆய்வுகளும் ஒப்படைத்த பிறகும் கடைசித் தீர்ப்பு இன்னும் வந்தபாடில்லை.
2018, ஆகஸ்டு 19-ஆம் தேதி கோம்பத் கிராமத்திலிருந்த இந்திய தேசியக்கொடியை சோனிசோரியிடம் திரும்பியளித்தார் மட்கம் லட்சுமி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சோனி சோரியின் தலைமையில் இந்தியா முழுதும் இருந்து 200 நபர்கள் கோம்பத் கிராமத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றினர். அந்த கொடிமட்கம் லக்ஷ்மியால் ஏற்றப்பட்டது. கோம்பத் கிராம மக்களும் இந்திய குடியரசின் குடிமக்கள் என்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகள் அவர்களுக்கும் கிடைக்கும் என்ற அடிப்படையில்தான் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
“வன்முறை எதுவும் குறைந்தபாடில்லை. மாறாக, முன்னிலும் அதிகரித்து விட்டது. பழங்குடி மக்கள் இந்திய குடிமக்களாக அங்கீகரிக்கப்படவில்லை. என்னுடைய மகளுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. இந்த அரசு வெகு இயல்பாக தற்போது 15 உயிர்களைப் பறித்துவிட்டது” என தேசியக் கொடியை திருப்பிக் கொடுக்கையில் மட்கம் லட்சுமி சோனி சோரியிடம் கூறியுள்ளார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில் குளத்தில் மீன் பிடித்துவிட்டு நான்கு பெண்களுடன் திரும்பி கொண்டிருந்த கோம்பத் கிராமத்தை சேர்ந்த 35 வயதான சோயம் ராமேவின் தொடையில் பாதுகாப்புப்படையினர் சுட்டனர். அவர் ஒரு நக்சல் என்று காவல்துறை குற்றம் சாட்டியது. போதுமான மருத்துவ வசதிகள் இல்லாததால் 20 நாட்களாக குண்டினை எடுக்காமல் மருத்துவமனைக்காக அலைந்துள்ளனர். மேலும் விறகு வெட்டும்போது வெட்டிக்கொண்டதாக கூறும்படி காவல்துறை மிரட்டியதாக சோனி சோரியிடம் அவர் கூறினார். ஆனால் சுக்மாவில் காவல்துறை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சோயம் ராமே ஒரு நக்சலைட் என்பதாலேயே என்கவுண்டர் செய்யப்பட்டதாக கூறியது. சிகிச்சைக்குப் பிறகு சோயம் ராமேவும் அவரது கணவரும் இன்னமும் வீடு திரும்பவில்லை.
மாவட்ட ரிசர்வ் படை : மற்றொரு சல்வா ஜூடும்?
மாவட்ட ரிசர்வ் படைகள் முதலில் கங்கெர் மற்றும் நாராயன்பூரில் 2008­-ம் ஆண்டு நிறுவப்பட்டன. பின்னர் தண்டேவாடாவில் 2015-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. மேலும் சுக்மா, கொண்டாகோன் மற்றும் பிஜப்பூர் ஆகிய இடங்களில் 2013-2014 ஆண்டு வாக்கில் நிறுவப்பட்டன. மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்த பெரும்பாலும் மண்ணின் மைந்தர்களான பழங்குடி மக்களாலே அப்படைகள் அமைக்கப்பட்டன. பகுதி மக்களின் மனநிலை, மொழியைப் புரிந்துகொண்டு தமது பணிகளை மேற்கொள்ள இத்தகைய படை அவசியம் என இழிபுகழ் முன்னாள் ஐ.ஜி கல்லுரி கூறியுள்ளார்.
தற்போது 600-க்கும் அதிகமான மாவட்ட ரிசர்வ் படையினர் சுக்மாவில் இருப்பதாக அபிஷேக் மீனா லீப்லெட் இணையதளத்திற்கு செல்பேசி வாயிலாக தெரிவித்தார்.
மாவட்ட ரிசர்வ் படை என்பது சிறப்புக் காவல்துறை அதிகாரிகள் படைக்கு இணையானது. சல்வா ஜுடும் நடைமுறையில் இருந்த சமயத்தில் பஸ்தாரில் நிறுவப்பட்டு பின்னர் நந்தினி சுந்தர் எதிர் சத்தீஸ்கர் மாநில அரசு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது.




இந்த தேசியக்கொடியால் தங்களுக்கு பயன் ஏதுமில்லை எனக் கூறி சோனி சோரியிடம் தேசியக் கொடியை திருப்பியளித்துள்ளார் மக்டம் லக்‌ஷ்மி.
“பெயர்கள் மட்டும்தான் மாற்றப்பட்டுள்ளன. அவர்களது பாத்திரங்கள் மாறவில்லை. பெயர்களை மாற்றுவதால் உங்களால் குணத்தை மாற்ற முடியுமா? மாவட்ட ரிசர்வ் படை வேண்டாமென்று பெரும்பாலான கிராம மக்கள் கூறியுள்ளனர்” என்று சோனி சோரி கூறினார். பழங்குடி மக்களுக்கு எதிரான வன்முறைகளுக்காக இழிபுகழ் பெற்றது மாவட்ட ரிசர்வ் படை. பிஜப்பூர் மாவட்டத்தில் 2015-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் நடந்த மிகப்பெரிய பாலியல் வன்முறையில் அவர்கள் நேரடியாக ஈடுபட்டது கவனத்தில் கொள்ளத்தக்கது.
போலி மோதல் கொலை என்று தாங்கள் கூறுவதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலுங்கானா குடிமக்கள் உரிமைக் குழு (The Civil Liberties Committee of Andhra Pradesh Telangana) உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடுத்துள்ளது. வழக்கு தொடுத்தவர்களையும் எதிராளிகளையும் கூடுதல் தகவல்கள் அளிக்க சொல்லி உச்சநீதிமன்றம் வழிகாட்டியுள்ளது.
தி லீஃப்லெட் இணையதளத்தின் பத்திரிகையாளர் கிரித்திகா அகர்வால் உண்மை கண்டறியும் குழுவினருடன் சென்று சேகரித்த கள நிலவர அறிக்கையின் சுருக்கப்பட்ட தமிழாக்கம்.
தமிழாக்கம் :  வினவு செய்திப் பிரிவு
மூலம்: In the Gompad trail: An account of 15 ‘en

கருத்துகள் இல்லை: