செவ்வாய், 5 ஜூன், 2018

பி.ஆர்.பாண்டியன் : கமல்ஹாசனின் துரோகம்… மன்னிக்க முடியாத செயல்!

protestநக்கீரன் :   கமல்ஹாசன் - குமாரசாமி சந்திப்பு குறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில், ‘’காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது குறித்து மத்திய அரசு காலம் கடந்து அரசிதழில் வெளியிட்டுள்ளதோடு மட்டுமில்லாமல் நிரந்தர தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் ஆணையம் உரிய காலத்தில் அமைப்பதில் மத்திய நீர்வள ஆணையம் மெத்தனப்போக்கோடு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்கு கொடுக்க மாட்டேன் என்று தேர்தல் அறிக்கை வெளியிட்டவர் தான் கர்நாடக முதல்வர் குமாரசாமி .


ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு தற்போது குமாரசாமி அமைதி காத்து வரும் நிலையில் கமல் சந்திப்பிற்கு பின் குமாரசாமியும் இணைந்து தீர்ப்பைய முடக்கும் வகையில் பேச்சுவார்த்தை என்ற கருத்தை வெளியிட்டு காவிரி பிரச்சினையை உள் நோக்கோடு திசை திருப்புவது தமிழக நலனுக்கு எதிரான செயல் ஆகும்.
சட்டப் போராட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கமல் சந்திப்பால் 40 ஆண்டு காலம் போராடி பெற்ற சட்ட அங்கீகாரம் பறிபோகும் சூழல் உருவாக்கி விட்டது.
தனது திரைப்படத்திற்கு கர்நாடகாவில் தடை ஏற்ப்படுமோ என்ற அச்சத்தில் காவிரி உரிமையை பழி கொடுத்து விடக் கூடாது. இந்நடவடிக்கை நீதி மன்றத்தை அவமதிப்பதாகும்.

குமாரசாமி நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற மறுப்பாரேயானால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையால் ஆட்சிக்கே ஆபத்து ஏற்படும் என்பதை அவர் உணர்ந்து தான் மவுனம் காத்து வந்தார்.

கமல் சந்தித்து பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலம் கடத்த குமாரசாமிக்கு வாய்ப்பளித்து உள்ளார்.
தாங்கள் காவிரி தீர்வு காண விரும்புவீர்களேயானால் குடியரசு தலைவரை உடன் சந்தித்து UP சிங் மீது புகார் மனு அளிப்பதோடு, உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக நீர் வள ஆணையம் ஏற்று உரிய காலத்தில் செயல்படுத்துவதை குடியரசு தலைவர் உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தலாம்.
எனவே தமிழக அரசு ஆக்கப்பூர்வமான சட்ட வழிமுறையை பின்பற்றி மேலாண்மை ஆணையம் அமைத்து ஜூன் 12ல் மேட்டூர் அணை திறந்து இவ்வாண்டு குறுவை சாகுபடியை மேற்கொள்ளலாம் என எதிர் பார்த்து விவசாயிகள் காத்துள்ள நிலையில் கமல்ஹாசனின் துரோக சுயநலநடவடிக்கை மன்னிக்க முடியாத செயல் என எச்சரிக்கிறேன். ''

கருத்துகள் இல்லை: