புதன், 6 ஜூன், 2018

நீட்: அடுத்த காவு!

நீட்: அடுத்த காவு!
மின்னம்பலம் :நீட் தேர்வுக்கு பலியாகும் உயிர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் பத்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜஸ்லீன் கவுர் சால்ஜா என்பவர் தோல்வி அடைந்தார். மதிப்பெண்களைப் பார்த்ததில் இருந்து விரக்தி அடைந்த அவர் நேற்று (ஜூன் 5) காலை 10 மணிக்கு இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு, மயூரி குஷால் டவர்ஸ் என்ற இடத்துக்கு சென்றுள்ளார். அங்குள்ள வணிக வளாகத்தின் மீது ஏறி பத்தாவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதன் மூலம், மகள் தற்கொலை செய்து கொண்டது பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, ஜஸ்லீன் தந்தை ரன்வீர் சிங், போலீஸில் புகார் அளித்தார். நீட் தேர்வு முடிவுகள் வெளியானதிலிருந்து ஜஸ்லீன் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும், காலையிலிருந்து யாரிடமும் பேசவில்லை என்றும் கூறினார். வாடிய முகத்துடன் நண்பர்களைப் பார்க்கச் செல்வதாகக் கூறிவிட்டு வெளியே சென்றார் என தெரிவித்தார்.
இது குறித்துக் காவல் துறையினர் கூறுகையில், ஜஸ்லீன் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததற்கு அவரது பெற்றோர் திட்டவில்லை. மன வேதனையில் வீட்டை விட்டுச் சென்ற அவர் தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
விழுப்புரம்

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், விழுப்புரம் செஞ்சி அருகே மேல்சேவூரைச் சேர்ந்த கீர்த்திகா என்ற மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்போது அவர் ஆபத்தான நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
நீட் தேர்வின் காரணமாக விழுப்புரத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி விஷம் அருந்தித் தற்கொலை செய்துகொண்டார். டெல்லியைச் சேர்ந்த மாணவன் பிரணவ் மேகந்திரதா, எட்டாவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: