வெள்ளி, 8 ஜூன், 2018

கள்ளநோட்டு கும்பலோடு எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு? ஜே.அன்பழகன் சந்தேகம்!

கள்ள நோட்டுக் கும்பலுடன் முதல்வருக்குத் தொடர்பு?மின்னம்பலம் : சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெ.அன்பழகன், கள்ள நோட்டுக் கும்பலைச் சேர்ந்தவருடன் முதல்வர் இருக்கும் புகைப்படத்தை காட்டி, கள்ள நோட்டுக் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்று சந்தேகம் கிளப்பியுள்ளார்.
கோவை வேலாண்டிபாளையத்தில் ஜூன் 1ஆம் தேதி போலீசார் நடத்திய சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் இருந்து ரூ. 1 கோடியே 25 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து ஆனந்தன், கிதர்முகமுது மற்றும் சுந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கள்ள நோட்டுச் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கள்ள நோட்டு வழக்கில் முக்கியக் குற்றவாளி எனக் கூறப்படும் ஆனந்தன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் உள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவிவருகிறது. ‘கள்ள நோட்டு கும்பலுடன் எடப்பாடி’ என்ற தலைப்பில் தீக்கதிர் நாளிதழும் செய்தி வெளியிட்டுள்ளது.
திமுக எம்.எல்.ஏ.வான ஜெ.அன்பழகனும் இந்த விவகாரம் தொடர்பாக சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார். தலைமைச் செயலகம் முன்பு இன்று (ஜூன் 8) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ கைது செய்யப்பட்ட ஆனந்தன் என்பவர் முதல்வருடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அவர்களுக்குள் தொடர்பு இருக்கிறது என்பதற்கு ஆதாரமாகத் தீக்கதிர் நாளிதழில் செய்தி வந்துள்ளது.
இந்த செய்தியை சபாநாயகரிடம் காட்டி, முதல்வருக்கு இதில் என்ன சம்பந்தம் உள்ளது. கள்ளநோட்டு கும்பலுடன் அவர் ஈடுபட்டுள்ளாரா?. இல்லை, கள்ளநோட்டுக் கும்பல் மீது போலீசார் எடுக்கும் விசாரணைக்கு இது தடையாக இருக்குமா? என்பதைத் தெரிந்துகொள்வதற்காக சபையில் கேள்வி எழுப்ப முயற்சித்தேன். ஆனால், சபாநாயகர் அதற்கான முயற்சியை ஆரம்ப கட்டத்திலேயே தடுத்துவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கள்ளநோட்டுக் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை: