வெள்ளி, 8 ஜூன், 2018

சந்திரபாபு நாயுடு : திருப்பதியை அபகரிக்க மத்திய அரசு சதி!

minnambalam: சித்தூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட ஆந்திர
முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, திருப்பதி கோயிலை அபகரிக்க மத்திய அரசு சதி செய்ததாகக் குற்றம்சாட்டினார்.
கடந்த மார்ச் மாதம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் ஆந்திர முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு. ஆந்திர மாநில அரசின் செயல்களை பாஜகவினர் விமர்சித்துவந்த நிலையில், அவர்களை எதிர்த்துத் தெலுங்கு தேசம் கட்சியினரும் பேசத் தொடங்கினர். நேற்று (ஜூன் 7) ஆந்திர மாநிலம் சித்தூரில் நடந்த கட்சிக் கூட்டமொன்றில் கலந்துகொண்டார் சந்திரபாபு நாயுடு. அப்போது, அவர் மத்திய அரசின் சமீபகால நடவடிக்கைகளை விமர்சித்தார்.
“திருப்பதி திருமலை கோயிலுக்கு எதிரான எந்தச் சதியையும் வெற்றி பெற விட மாட்டோம். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இந்தக் கோயிலைக் கொண்டுவர முயற்சிகள் நடந்தன.
இதுபோன்ற சதிகள் வெற்றிபெற அனுமதிக்க மாட்டோம். 2003ஆம் ஆண்டு நடந்த தாக்குதலில், பாலாஜியின் அருளாலேயே நான் உயிர் பிழைத்தேன். இந்தக் கோயிலின் புனிதத்தைக் கெடுக்கும் எந்தச் செயலையும் அனுமதிக்க மாட்டேன்” என்று அவர் பொதுமக்களிடம் தெரிவித்தார்.
கடந்த மாதம் மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையானது திருப்பதி திருமலை கோயில் நிர்வாக அலுவலருக்குக் கடிதம் அனுப்பியது. அதில், திருமலை மற்றும் அது சார்ந்த கோயில்களை நினைவுச்சின்னங்களாக அறிவித்துப் பாதுகாக்கப்போவதாகக் கூறப்பட்டிருந்தது. இதற்கு ஆளும் தெலுங்கு தேசம் உட்படப் பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து, அமராவதியைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வுத் துறை அதிகாரிகள் தவறான முடிவெடுத்ததாக மத்திய அரசின் சார்பில் அறிவிப்பு வெளியானது. இது பற்றியே தனது பேச்சில் குறிப்பிட்டார் சந்திரபாபு நாயுடு.
சமீபத்தில் திருமலை கோயிலுள்ள ஆபரணங்கள் திருடு போனதாகப் புகார் தெரிவித்தார் அக்கோயிலின் தலைமை அர்ச்சகர் ஒருவர். அவரது கேள்விகளுக்குப் பதில் சொல்லாத திருமலை கோயில் நிர்வாகம், அந்த நபருக்குக் கட்டாய ஓய்வளித்தது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு துரோகம் இழைத்ததாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். “பாலாஜி ஆண்டவரின் பாதம் தொட்டு, ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்குவதாக உறுதியளித்தார் பிரதமர் மோடி. ஒரு முதலமைச்சராக டெல்லி சென்று, சிறப்பு மாநில அந்தஸ்து வேண்டுமெனக் கேட்டேன். மாநில வளர்ச்சிக்கான நிதியை ஒதுக்குமாறு கோரினேன். ஆனால், அவர்கள் தரவில்லை” என்று கூறினார்.
சந்திரபாபு நாயுடு தெரிவித்த கருத்துகளின் மூலமாக, தொல்பொருள் துறையின் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு நடந்தது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: