வியாழன், 7 ஜூன், 2018

கமலின் அட்டைக்கத்தி... பாஜகவின் அய்யாக்கண்ணு ?

மனுஷ்யபுத்திரன்
thetimestamil :கமல் கர்நாடகா சென்று காவிரிக்காக களமாடியதற்காக அய்யாக்கண்ணு சற்று முன் கமலுக்கு வீர வாளை பரிசளித்தார். ” எங்களுக்கு வேற யார் இருக்கா ? ” என்று கமல் முன்னால் அய்யாக்கண்ணு தளுதளுத்தது ஆபாசத்தின் உச்சம். இவ்வளவு நாள் காவிரிக்கச்க களத்தில் நின்ற கட்சிகளும் இயக்கங்களும் யார்? இன்னொரு விவசாய சங்க பிரதிநிதி ” தமிழகத்தை ஆண்ட எல்லா கட்சிகளும் காவிரி பிரச்சினையில் தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டன. அதனால்தான் கமலிடம் வந்திருக்கிறோம்” என்று அள்ளிவிட்டபோது கமல் யார், அவரை சந்திக்கும் இவர்கள் யார் என்பது தெளிவாக புரிந்தது. கடந்தகாலத்தில் கமல் காவிரிக்காக என்ன கிழித்தார்? இப்போது என்ன கிழிக்கிறார் என்று பார்ப்போம். அய்யாக்கண்ணு கமலுக்கு கொடுத்தது வீரவாள் அல்ல. அட்டைக்கத்தி.
கமல் முந்திரிக்கொட்டைத்தனமாக குமாரசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்கவேண்டிய நேரத்தில் குட்டையை குழப்பியதற்கு எல்லா பக்கத்திலும் இருந்தும் அடி விழுந்ததும் அய்யாக்கண்ணுவை கூட்டி வந்து தனக்கு சர்டிபிகேட் கொடுக்க வைக்கிறார். ” இரண்டு மாநில விவசாயிகளும் கலந்து பேசினால் காவிரி பிரச்சிசையில் அரசியல்வாதிகள் தலையிட முடியாது என்ற பேத்தல் வேறு. சிம்பு கர்நாடக மக்களிடம் ஒரு க்ளாஸ் தண்ணி கொடுங்கள் என்று சொன்ன கேணத்தனத்திற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.

அய்யாக்கண்ணு சிலமாதங்களுக்கு முன்பு விவசாயிகள் பிரச்சினைக்காக ரஜினியை போய் பார்த்தார். ரஜினி, அய்யாக்கண்ணுவிடம் ” நதிகளை இணைப்பதாக இருந்தால் தான் தருவதாக சொன்ன ஒரு கோடி ரூபாயை இப்போதே உங்களிடம் தருகிறேன்” என்றார். அய்யாக்கண்ணு அந்த முயற்சியில் எந்த அளவில் இருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் ரஜினி – கமல் என அய்யாக்கண்ணு அவர்களை விவசாயிகள் பிரச்சினைக்காக சந்திப்பதில் ஒரு அரசியல் தொடர்ச்சி இருக்கிறது.
மஹாராஷ்டிராவில் விவசாயிகள் பெரும் பேரணியாக திரண்டு மாநிலத்தையே ஸ்தம்பிக்க செய்தார்கள். மக்களின் ஆதரவு அந்தப்போரட்டத்திற்கு முழுமையாக இருந்தது. அரசு விவசாயிகளுக்கு பணிந்து கடன் தள்ளுபடி உட்பட பல கோரிக்கைகளை ஏற்றது ஆனால் அய்யாக்கண்ணு நடத்திய போராட்டங்கள் எத்தகையவை. ? டெல்லியில் அப்பாவி விவசாயிகள் சிலரை ஜந்தர் மந்தரில் வெய்யில் மாதக்கணக்கில் வாட்டி, அவர்களை நிர்வாணமாக ஓடவிட்டு மீடியா ஷோக்களை நடத்தினார். டெல்லிக்கு சென்று ஜந்தர் மந்தரில் அய்யாக்கண்ணுவை நேரடியாக பார்த்தேன். வடநாட்டு காவி சாமியார்கள் அவருடன் உட்கார்ந்திருந்தார்கள். அது அப்போதே எனக்கு கடும் உறுத்தலை ஏற்படுத்தியது. ஆர்.எஸ்.எஸ்சின் ரகசிய இணைய அணியான சென்னை மீம்ஸ் அந்தபோராட்டத்தை நாள் முழுக்க பதிவு செய்துகொண்டிருந்தது. அய்யாக்கண்ணுவின் கடந்தகால பா.ஜ.க தொடர்புகள் ஊரறிந்தது. சிறு அமைப்புகள் நடத்தும் பலவீனமான அடையாளப்போராட்டங்களை தொடர்ந்து ஊக்குவித்தால் பெரும் திரளாக விவசாயிகள் ஒன்றுகூட விடாமல் திசை திருப்பலாம் என்பது மத்திய அரசுக்கு தெரியும்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றியை பா.ஜ.கவின் ஏஜெண்டான ஓ.பன்னீர் செல்வத்தின் இமேஜை உயர்த்த தாரைவார்த்ததுபோல காவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தால் அந்த வெற்றியை பா.ஜ.கவின் இன்றைய ஏஜெண்டுகளான கமலுக்கும் ரஜினிக்கும் தாரை வார்த்துகொடுக்கத்தான் இவ்வளவு நாடகமும்.
மனுஷ்ய புத்திரன், எழுத்தாளர்; அரசியல் செயல்பாட்டாளர்.

கருத்துகள் இல்லை: