திங்கள், 4 ஜூன், 2018

சரியும் பாஜக! ஆய்வு முடிவுகள்... மத்திய - மேற்கு இந்தியாவில் - 6

 மத்திய - மேற்கு இந்தியாவில் சரியும் பாஜக! ஆய்வு முடிவுகள் - 6 மின்னம்பலம் ::வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய மக்கள் யார் பக்கம் நிற்கப் போகிறார்கள், அவர்களின் மனதின் குரல் என்ன என்பதை அறிந்துகொள்ள, டெல்லியைச் சேர்ந்த சமூக வளர்ச்சிக்கான ஆய்வு மையம், லோக் நீதி என்ற ஒப்பீட்டு ஜனநாயகத்துக்கான ஆய்வு நிறுவனம் ஆகியவை ABP செய்தி நிறுவனத்துக்காக மூன்று கட்டங்களாக ஆய்வுகளை நடத்தின. அந்த ஆய்வு முடிவுகளை மின்னம்பலத்தில் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
அதன்படி கடந்த பகுதியில், தென்னிந்தியாவிலும் வடஇந்தியாவிலும் பாஜக, காங்கிரஸ் அணிகள் மக்களிடம் பெற்றுள்ள செல்வாக்கையும், அதேநேரம் இந்தக் கட்சிகளிடம் சாயாத மற்ற கட்சிகள் மக்களிடம் பெற்று வரும் அதிக செல்வாக்கையும் பார்த்தோம்.
அடுத்ததாக மேற்கு இந்தியா, மத்திய இந்தியா ஆகிய பகுதிகளில் மக்களின் குரலும், விரலும் யாரைச் சுட்டுகின்றன என்பதை ஆய்வு முடிவுகளின் வழியில் நின்று அலசுவோம்

மேற்கு மற்றும் மத்திய இந்தியா!
இந்த மண்டலத்தில் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த நான்கு மாநிலங்களிலுமே இப்போது பாஜகவே ஆளும் கட்சியாக இருப்பதால், இந்த மண்டலத்தில் பாஜகவின் பலம் சற்று முன்னேறியே காணப்படுகிறது. ஆனாலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் குஜராத்தில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கடுமையாகப் போரிட்டது. ஆட்சியைப் பிடிக்க முடியவில்லையே தவிர, குஜராத்தில் காங்கிரஸ் எழுச்சியாக எழுந்து நிற்கிறது. இது வெறும் கருத்தியலாக மட்டுமல்ல, கள ஆய்வின் முடிவுகளிலும் வெளிப்படுகிறது.
லோக் நீதியின் முதல் கட்ட ஆய்வான மே 2017 வாக்கில் இந்த மண்டலத்தில் பாஜகவுக்கான செல்வாக்கு என்பது 56% என்று இருந்தது. அதாவது பாதிக்கும் மேற்பட்ட மக்கள் பாஜகவை ஆதரிக்கிறார்கள் என்ற நிலைமை இருந்தது. ஆனால், இரண்டாம் கட்ட ஆய்வு நடைபெற்ற ஜனவரி 2018 காலகட்டத்தில் நம்ப முடியாத அளவுக்கு பாஜகவின் ஆதரவு சதவிகிதம் 8 புள்ளிகள் குறைந்து 48% ஆக சுருங்கியது.
இந்தக் கால கட்டத்தில்தான் அதாவது 2017 டிசம்பரில்தான் குஜராத் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில் மொத்தமுள்ள 182 இடங்களில் பாஜக 99 இடங்களைப் பிடிக்க, காங்கிரஸ் 77 இடங்களைப் பிடித்து எழுச்சி பெற்றது. இதனால்தான் ஜனவரி 2018 காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட ஆய்வில் பாஜகவின் பலம் 56%இல் இருந்து 48% ஆகக் குறைந்தது.
ஆயினும் கடந்த ஐந்து மாத காலமாக இதையே தக்கவைத்துக் கொண்டிருக்கிறது பாஜக. மூன்றாம் கட்ட ஆய்வு நடந்த மே 2018லும் ஆதரவு சதவிகிதம் 48 புள்ளிகளாகவே இருக்கிறது பாஜகவுக்கு.
இந்த நான்கு மாநிலங்களிலும் ஆளுங்கட்சியாக பாஜகவே தொடர்ந்து இருப்பதால் ஏற்பட்ட ஆட்சிக்கு எதிரான அதிருப்தியாக இருக்கலாம். ஆனால், முன்னணியில் இருந்தபோதும் இறங்குமுகத்தில் இருக்கிறது பாஜகவின் நிலைமை.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸின் வளர்ச்சி குஜராத்தைப் போலவே இருக்கிறது. மேலும் மராட்டியத்தில் இருக்கிறதா இல்லையா என்று தெரியாத பாஜக - சிவசேனா கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கடுமையான சவாலைக் கொடுக்கும் என்று தெரிகிறது.
அதனால்தான் அண்மையில் டெல்லியில் நிருபர்களைச் சந்தித்த பாஜக அகில இந்திய தலைவர் அமித் ஷா, “மராட்டியத்தில் சிவசேனாவுடனான கூட்டணியை நாங்கள் விரும்புகிறோம்’’ என்று கசப்புகளைத் தாண்டியும் கதவுகளைத் திறக்க முயல்கிறார்.
அவரது இந்த அறிவிப்புக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. பாஜக ஆளும் இந்த நான்கு மாநிலங்களிலும் காங்கிரஸின் செல்வாக்கு கணிசமான வேகத்துடன் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்பதுதான் அக்காரணம்.
லோக் நீதி முதல் கட்ட ஆய்வான மே 2017 காலகட்டத்தில் இம்மாநிலங்களில் காங்கிரஸுக்கான செல்வாக்கு 32% ஆக இருந்தது. அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து எட்டு மாதங்களில் எட்டு சதவிகிதம் வளர்ந்து ஜனவரி 2018 வாக்கில் 40% ஆக உயர்கிறது. அதற்குப் பின்னான ஐந்து மாதங்களிலும் காங்கிரஸின் செல்வாக்கு மத்திய, மேற்கு இந்தியாவில் 3 புள்ளிகள் அதிகரித்து இப்போது 43% ஆக இருக்கிறது.
ஆக, பாஜகவின் கோட்டை எனப்படக் கூடிய மத்திய, மேற்கு இந்தியாவில் இப்போது தேர்தல் வைத்தால் பாஜகவுக்கு 48% , காங்கிரஸுக்கு 43% என்றும் நெருக்கமான நிலையிலிருக்கின்றன இரண்டு அணிகளும். குஜராத்தில் காங்கிரஸுக்கு ஏற்பட்ட எழுச்சிதான் பாஜகவுக்கும் காங்கிரஸுக்குமான இடைவெளியை மத்திய - மேற்கு இந்தியாவில் குறைத்து நெருக்கமான போட்டியை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் லோக் நீதி ஆய்வின் களப் புலனாய்வாளர்கள்.
தென்னிந்தியாவில் நாம் பார்த்த மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் மேற்கு, மத்திய இந்தியாவில் தலைகீழாக இருக்கிறது. லோக் நீதியின் மூன்று ஆய்வுகளிலும் முறையே 12%, 12%, 9% என்று மற்ற கட்சிகளின் செல்வாக்கு மிகவும் குறைவாகவே இருக்கிறது.
ஆக, மேற்கு - மத்திய இந்தியாவில் பாஜகவை எட்டிப் பிடித்துவிடும் தூரத்தில் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது காங்கிரஸ். பாஜக, காங்கிரஸ் அணி அல்லாத கட்சிகளுக்கு இந்த மண்டலத்தில் பெரிய வேலை இருப்பதாகத் தெரியவில்லை.
அடுத்து நாம் இந்தியாவின் கிழக்குப் பக்கம் யாருக்கு வெளிச்சம் என்பதை டெல்லியைச் சேர்ந்த சமூக வளர்ச்சிக்கான ஆய்வு மையம், லோக் நீதி என்ற ஒப்பீட்டு ஜனநாயகத்துக்கான ஆய்வு நிறுவனம் ஆகியவை ABP செய்தி நிறுவனத்துக்காக நடத்திய ஆய்வுகளின் வழியில் நின்று பார்க்கலாம்.
(ஆய்வு தொடரும்)
தொகுப்பு: ஆரா
ஆய்வு முடிவுகள்-1
ஆய்வு முடிவுகள்-2
ஆய்வு முடிவுகள்-3
ஆய்வு முடிவுகள்-4
ஆய்வு முடிவுகள்-5

கருத்துகள் இல்லை: