செவ்வாய், 5 ஜூன், 2018

ஜப்பான் ஆராய்ச்சிக்காக போர்வையில் இறைசிக்காக 333 திமிங்கலங்கள் கொல்லப்பட்டன....

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?மின்னம்பபலம்: ஜப்பானில் ஆராய்ச்சி எனும் பெயரில் வணிகத்துக்காகத் திமிங்கலங்களைக் கொன்று குவித்த கொடூரம் அரங்கேறியுள்ளது. சென்ற ஒரு வருடத்தில், ஜப்பானில் ’ஆராய்ச்சிக்காக’ என்று மட்டும் 333 மின்க் (Minke) வகை திமிங்கலங்கள் கொல்லப்பட்டுள்ளன.
ஆராய்ச்சிக்காகத்தான் 333 திமிங்கலங்கள் கொல்லப்பட்டனவா?
எந்த ஆராய்ச்சிக்கு இவ்வளவு உயிர்கள் தேவைப்பட்டன?
ஆராய்ச்சி என்ற பெயரில் நடைபெற்ற வணிகச் சுரண்டலா?
ஒவ்வொரு வருடமும் அன்டார்டிக் கடலின் சுற்றுச்சூழலை ஆராய்வதற்காகவும், அதன் அமைப்பு மற்றும் இயக்கத்தைக் கண்டறியவும் ஜப்பானைச் சேர்ந்த கப்பல் மாலுமிகள் தெற்கு பெருங்கடலில் உயிரியல் மாதிரிகள் எடுக்கச் செல்வார்கள். இந்த முறையும் அப்படி ஆய்வுக்காக உயிரியல் மாதிரிகள் எடுக்கச் சென்றபோதுதான் நடந்தது இந்தக் கொடூரம்.
உயிரியல் மாதிரிகள் எடுக்கிறோம் என்ற பெயரில், அந்தக் கடல் பகுதியில் இருந்த 333 மின்க் (Minke) வகை திமிங்கலங்களைக் கொன்றழித்திருக்கின்றனர்.
இதுகுறித்து, சர்வதேசத் திமிங்கலங்களுக்கான அமைப்பைச் சேர்ந்த அறிவியல் குழுவினர் ஓர் அறிக்கையை வெளியிட்டனர். அந்த அறிக்கையின்படி கடந்த ஒரு வருட காலத்தில் மட்டும், அதாவது 2017-2018 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும், 333 திமிங்கலங்கள் கொல்லப்பட்டுள்ளன. அவற்றுள்,
* 122 திமிங்கலங்கள் கர்ப்பமாக உள்ள பெண் திமிங்கலங்கள்
* 114 திமிங்கலங்கள் இன்னும் முதிர்ச்சி அடையாத இளம் திமிங்கலங்கள்.
இப்படி ஆராய்ச்சி என்ற பெயரில் கொல்லப்படும் இந்தத் திமிங்கலங்கள் கறிக்காகச் சந்தைகளில் விற்கப்படுகின்றன. இதில் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய மற்றொரு செய்தி என்னவென்றால், இந்த ’மின்க்’ வகை திமிங்கலங்களில் மொத்தமாகப் பெண்களின் எண்ணிக்கையே 128 தான். வெறும் சந்தை லாபத்துக்காக மட்டுமே நடந்த இந்தக் கொடூரச் செயலால் அந்த இனமே அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சந்தை லாபத்துக்காக மட்டுமே அடுத்த 12 வருடங்களில் குறைந்தது சுமார் 4,000 திமிங்கலங்களை ஜப்பான் கொல்லக்கூடும் என ‘சிட்னி மார்னிங் ஹெரால்ட்’ (Sydney Morning Herald) நாளிதழ் கூறுகிறது.
கொன்றுதான் ஆராய வேண்டுமா?
திமிங்கலங்களைக் கொன்றதை நியாயப்படுத்திய ஆராய்ச்சியாளர்கள், “ஒரு திமிங்கலத்தின் வயதை வெறுமனே அந்தத் திமிங்கலத்தைப் பார்த்து மட்டுமே கண்டறிய முடியாது. அதனைக் கொன்றால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும்” என்று கூறுகிறார்கள். ஆனால், இவர்கள் கூறுவதை உலகிலுள்ள பல ஆராய்ச்சியாளர்கள் மறுக்கின்றனர். ஒரு திமிங்கலத்தின் வயதை அதன் உடல் அளவைக் கொண்டே எளிதாக அறிந்துகொள்ளலாம் என்கிறார்கள். ஏற்கெனவே வயது தெரிந்த ஒரு திமிங்கலத்தின் உடல் அளவை மற்ற திமிங்கலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து அதன் வயதைத் தெரிந்துகொள்ளலாம் எனக் கூறுகிறார்கள். அறிவியல் ஆராய்ச்சிக்காக ஒரு திமிங்கலத்தைக் கொல்ல வேண்டும் என்ற நிலை வந்தால், அது பலமுறை தவிர்க்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
ஒரு திமிங்கலத்தைக் கொல்லாமல் அதை ஆராய வழி இருக்கிறதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “ஒரு திமிங்கலத்தைப் பற்றி ஆராய, அதைக் கொல்வதைத் தவிர்த்து பல வழிகள் உள்ளன என்பது அறிவியலில் நிரூபிக்கப்பட்ட ஒன்று” எனக் கூறுகிறார் பிரபல கடல் பாதுகாப்பு உயிரியலாளர் லெ கெர்பர். (Leah Gerber)
இப்படிப் பல வழிகள் இருக்கையில், ஆராய்ச்சி என்ற பெயரில் சந்தை லாபத்துக்காக இவ்வளவு திமிங்கலங்கள் கொல்லப்பட்டுள்ளன, கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமில்லாமல் அந்த இனமே அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டிருகிறது.
ஜப்பானில் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளில் கடல் வளங்கள் அளவுக்கு அதிகமாகச் சுரண்டப்படுகின்றன. நிலத்தின் வளங்களை மீட்டெடுப்பதற்குக்கூட நமக்கு ஒரு வாய்ப்பிருக்கிறது. கடலின் வளம் மனித சக்திக்கு அப்பாற்பட்டது. அந்த வளங்களைப் பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் நம்மால் இயலவில்லை என்றால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.
சுற்றுச்சூழலில் எப்போதெல்லாம் ஒரு இனம் அழிக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் அந்தச் சுற்றுச்சூழலில் ஒரு மிகப் பெரிய மாற்றம் ஏற்படுகிறது என்பது வரலாறு நமக்குத் தரும் சான்று. அப்படி ஏற்படும் மாற்றம் நிச்சயமாக நல்ல மாற்றமாக இருக்காது என்பது அது நமக்குத் தரும் பாடம்.
- நரேஷ்

கருத்துகள் இல்லை: