வியாழன், 3 மே, 2018

மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் தற்கொலை: உருக்கமான கடிதம்

deneshdinamani :டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருநெல்வேலியில் பிளஸ் 2 மாணவர் ரயில்வே மேம்பாலத்தில் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மதுக்கடைகளை மூட முதல்வர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அந்த மாணவர் எழுதிய உருக்கமான கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர்.
திருநெல்வேலி வண்ணாரபேட்டை தெற்கு புறவழிச் சாலையில் ரயில்வே மேம்பாலத்தில் ஆண் சடலம் தூக்கிட்ட நிலையில் இருப்பதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. பாளையங்கோட்டை போலீஸார் உடனே அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அவர், சங்கரன்கோவில் வட்டம், குருக்கள்பட்டி அருகேயுள்ள கே.ரெட்டியபட்டியைச் சேர்ந்த மாடசாமி மகன் தினேஷ் நல்லசிவம் (17) என்பது தெரியவந்தது.

அவரது ஆடையில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், ' அப்பா, எனது இறப்புக்கு பிறகாவது மது குடிக்காமல் இருங்கள். எனக்கு நீங்கள் இறுதிச்சடங்கு செய்ய வேண்டாம். மணி அப்பாதான் (உறவினர்) இறுதிச்சடங்கு செய்யவேண்டும். இதுதான் என் ஆசை. அப்பா இனிமேலாவது குடிக்காமல் இருங்கள். அப்போதுதான் எனது ஆத்மா சாந்தி அடையும். இனிமேலாவது பிரதமர், முதல்வர் ஆகியோர் இந்தியாவில் உள்ள மதுபானக் கடைகளை அடைக்கிறார்களா என்று பார்ப்போம்' என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தினேஷ் நல்லசிவத்தின் தந்தை மாடசாமி, கேரளத்தில் கூலித்தொழிலாளியாக உள்ளார். அவரது தாயார் பாப்பா கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காலமானதைத் தொடர்ந்து, மதுரையில் உள்ள சித்தப்பா வீட்டில் தங்கியிருந்து உயர்நிலைப் படிப்பை முடித்துள்ளார் தினேஷ் நல்லசிவம். பத்தாம் வகுப்பில் 465 மதிப்பெண்கள் பெற்ற அவர், நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கியிருந்து பிளஸ் 1, பிளஸ் 2 படித்துள்ளார்.
நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த தினேஷ் நல்லசிவத்திற்கு பாளையங்கோட்டை அருகே வி.எம்.சத்திரத்தில் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்காக கே.ரெட்டியபட்டிக்கு வந்த தினேஷ் நல்லசிவத்திற்கும், மாடசாமிக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதன்பின்பு உறவினர் வீட்டுக்குச் செல்வதாக வீட்டில் இருந்து வெளியேறிய தினேஷ் நல்லசிவம், அங்கிருந்து திருநெல்வேலிக்கு வந்து தற்கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை: