திங்கள், 30 ஏப்ரல், 2018

ஒருதலைக் காதல்; மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி: இளைஞரைத் தாக்கி போலீஸில் ஒப்படைத்த மக்கள்

tamilthehindu: ஒருதலைக் காதல் விவகாரத்தால் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவியின் கழுத்தை அறுத்துக் கொலை முயற்சி செய்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாகத் தாக்கி போலீஸில் ஒப்படைத்தனர்.
ஒருதலைக் காதல் விவகாரத்தால் இளம்பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தாமரை விடுதியில் தங்கியிருந்தவாறு தோட்டக்கலைத் தொடர்பான பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பயின்று வருகிறார் சுதா (23) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் வேலூர் மாவட்டம் கதம்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்.
இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) காலை 10 மணியளவில் விடுதியிலிருந்து வெளியே வந்த மாணவியை, விடுதிக்கு வெளியே நின்றிருந்த இளைஞர் ஒருவர், திடீரென்று மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்தார். உடனே மாணவியின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியில் இருந்தவர்கள், இளைஞரை கற்களால் சரமாரியாகத் தாக்கினர். இதைத்தொடர்ந்து அந்த இளைஞர் மாணவியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதையடுத்து விடாமல் அவரைப் பின் தொடர்ந்த பொதுமக்கள், சுற்றிவளைத்துப் பிடித்து அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனிடையே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த மாணவியை, விடுதியைச் சேர்ந்த மற்ற மாணவிகள் மீட்டு சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இளைஞரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், அவரும் வேலூர் மாவட்டம் கதம்பம்பட்டியைச் சேர்ந்த நவீன் (27) என்பதும், பொறியியல் பட்டதாரியான அவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருவதும் தெரியவந்துள்ளது.
மேலும் கடந்த 3 ஆண்டுகளாக ஒருதலையாக அந்த மாணவியைக் காதலித்து வந்ததும், அதை அவர் ஏற்காததும் தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நவீன், அவரை கொலை செய்யும் முயற்சியுடன் இன்று சிதம்பரம் வந்து, அவரை கழுத்தறுத்துக் கொலை முயற்சியில் ஈடுபட்டபட்ட போது, பொதுமக்களிடம் சிக்கி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை: