வியாழன், 3 மே, 2018

காவிரி ..இரண்டு வார அவகாசம் .. மத்திய அரசு முடிவு ... மே 16 வரை .. பின்பு கோடை விடுமுறை நீதிமன்ற விடுமுறை

காவிரி வழக்குகள்:  இன்று விசாரணை!மின்னம்பலம்: உச்ச நீதிமன்றத்தில் காவிரி தொடர்பான வழக்கு இன்று காலை 10.45 மணிக்கு மூன்றாவது வழக்காக விசாரணைக்கு வரவுள்ளது.
ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அவகாசம் முடிந்த நிலையில் கர்நாடகத் தேர்தலைக் காரணம் காட்டி மேலும் மூன்று மாதங்கள் அவகாசம் கேட்டது மத்திய அரசு. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் மே 3ஆம் தேதிக்குள் காவிரி தொடர்பான வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
காவிரி வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் கேட்டு மத்திய அரசு இடைக்கால மனு ஒன்றை நேற்று (மே 2) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. வரும் 16ஆம் தேதி வரை அவகாசம் கோரிய இந்த மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரணை செய்யும்படியும் தலைமை நீதிபதி அமர்வின் முன்பு மத்திய அரசு முறையிட்டது. ஆனால், அவசர வழக்காக ஏற்று விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நாளை காவிரி தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வரும்போது, இந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு இன்று (மே 3) மூன்றாவது வழக்காக விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கானது இன்று காலை 10.45 மணிக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று (மே 2) டெல்லி சென்ற தமிழக முதல்வர், தமிழ்நாடு இல்லத்தில் இந்த வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார். மத்திய அரசு கால அவகாசம் கோரினால் மற்றுமொரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கவும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: