வெள்ளி, 4 மே, 2018

தமிழ் மாணவர்களுக்கு மட்டுமே வெளிமாநில நீட் தேர்வு மையம் .. மத்திய அரசின் மாநில வெளியுறவு கொள்கை?.. தமிழ்நாடு தனிநாடா?

விகடன்:  இரா.தமிழ்க்கனல்: நீட் தேர்வையே முழுவதுமாக ரத்துசெய்ய வேண்டும்
எனப் போராடிவரும் தமிழக மாணவர்களுக்கு, வெளி மாநிலங்களில் ஒதுக்கப்பட்டுள்ள மையங்களில் தாம் தேர்வை எழுதியாக வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று ஆணை இட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் மாநில உரிமையும் சமூக நீதியும் பறிக்கப்பட்டுள்ளது என்றும் மாணவர்களுக்குக் கடும் சிரமங்களைக்கூட உச்சநீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் பல்வேறு அரசியல் தலைவர்களும் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அத்தலைவர்களின் கருத்துகள்:
எல்லாத் தரப்பிலும் இருந்தும் சமூக அநீதி - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி
``தமிழ்நாட்டு மாணவர்கள் 90 ஆயிரம் பேர் தேர்வு எழுத, தமிழ்நாட்டில் மையங்கள் அமைக்க முடியாது; மற்ற வெளிமாநிலங்களுக்குத்தான் தேர்வு எழுதச் செல்ல வேண்டும் என்று இன்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது சமூகநீதிக்கு விரோதமான எவ்வளவு பெரிய அநீதித் தீர்ப்பு? இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஒரே நேரத்தில் தமிழ்நாட்டில் 12 லட்சம் பேர் எழுதும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வு நடைபெறும் வசதிகள் உள்ள மண்ணில், 90 ஆயிரம் பேர் எழுதும் சி.பி.எஸ்.இ. தேர்வுக்கு மையங்களை அமைக்க முடியாதா? பிறகு ஏன் இங்கு சி.பிஎஸ்.இ.? மற்ற மாநிலங்களுக்குச் சென்று தேர்வு எழுத, ஏழை, எளிய மாணவர்கள், பெற்றோர்களால் இயலுமா?  எல்லாத் தரப்பிலுமிருந்து தொடர்ந்து தமிழ்நாட்டுக்குக் கேடு இழைக்கப்படுகிறது;  இனி மாணவர்கள், பெற்றோர்கள் அமைதியாக இருக்க முடியுமா? என்னே கொடுமை!”
மாணவர்களின் சிரமத்தைக் கண்டுகொள்ளவில்லை - இ.கம்யூ. மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன்
``நீட் தேர்வை வெளிமாநிலங்களில் எழுத வேண்டும் என்றும் தமிழகத்தில் தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும்கூட ஏற்க இயலாது என்றும் ஏற்கெனவே வெளிமாநிலங்களில் ஒதுக்கப்பட்ட தேர்வுமையங்களை நீக்கமுடியாது என்றும் உச்சநீதி மன்றம் கூறியிருப்பது ஏற்கக்கூடியதாக இல்லை. தமிழக மாணவர்களின் உணர்வுகளை நீதிமன்றம் கணக்கில்கொண்டதாகத் தெரிவில்லை. இவையாவும் ஒட்டுமொத்தமாக தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வியின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகவே தெரிகிறது. தமிழக அரசும் மத்திய அரசைப்போலவே மாணவர்களின் சிரமங்களையோ, உணர்வுகளையோ கணக்கில்கொண்டு செயல்படுவதாகத் தெரியவில்லை. இவையாவும் கண்டனத்திற்குரியது”.
மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கும்தாம்! - தமிழக காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக்கரசு
``தமிழகத்தில் நீட் தேர்வு எழுதவேண்டிய தமிழ்நாட்டு மாணவர்களுக்கு, கர்நாடகா, ராஜஸ்தான், கேரளா போன்ற மாநிலங்களில் தேர்வு மையத்தை ஒதுக்கியிருப்பது கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் வேறு மாநிலங்களில் தேர்வு எழுத ஆணையிட்டிருப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும். இதன்மூலம் தமிழகம் கடுமையான வஞ்சிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தடுத்துநிறுத்துவதற்கு தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்காதது மிகுந்த கண்டனத்திற்குரியது. இது குறித்து கருத்துக்கூறிய தமிழக கல்வியமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மத்திய இடைநிலை கல்வி வாரிய மாணவர்களுக்குத்தான் இது பொருந்தும் என்று கூறியிருந்தார். ஆனால், தற்போது மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் உள்ள மாணவர்களுக்கும் இது பொருந்தும் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. இதன்மூலம் உச்சநீதிமன்றம் தமிழக மாணவர்களுக்கு நீதி வழங்க மறுத்திருப்பது மிகுந்த வேதனைக்குரியது.
தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்பிற்கான கனவை மத்திய அரசு நிரந்தரமாகத் தகர்த்திருக்கிறது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்கள், தேர்வு மையங்களை வேறு மாநிலங்களுக்கு ஒதுக்கியிருப்பதால் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். தமிழக மாணவர்கள் பெரும் துயரத்திற்கும், சிரமத்திற்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்கள். மத்திய - மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் உச்சநீதிமன்றத்தை அணுகி தமிழக மாணவர்கள் தமிழகத்திலேயே நீட் தேர்வு எழுதிட நடவடிக்கை எடுக்க வேண்டும்”.
50 டிகிரி வெப்பத்தை மாணவர்கள் தாங்குவார்களா? - பா.ம.க. முன்னாள் மைய அமைச்சர் அன்புமணி
``உச்சநீதிமன்றத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. நடைமுறைக்குச் சாத்தியமற்ற செயலை மாணவர்கள் செய்தேதீர வேண்டும். மத்திய அரசு கட்டாயப்படுத்துவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களில் சுமார் 200 பேருக்கு மட்டுமே வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள இரு தேர்வு மையங்களின் கொள்ளளவை தலா 100 இருக்கைகள் வீதம் அதிகரித்தால் போதுமானது. ஆனால், சமூக நீதியை நிலைநிறுத்துவதற்கான இந்த நடவடிக்கையைக்கூட செய்வதற்கு மத்திய அரசின் கல்வி வாரியம் தயாராக இல்லை. மாறாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்து தடை வாங்கியுள்ளது. இது சமூக அநீதி.
தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கேரளத்துக்கும், இராஜஸ்தானுக்கும் சென்று நீட் சென்று தேர்வு எழுதுவது எளிதான காரியம் அல்ல. தொடர்வண்டியில் இரு நாள்கள் பயணம் செய்துதான் இராஜஸ்தான் செல்ல வேண்டும். பயணச் செலவு, தங்குமிடச் செலவு ஆகியவற்றை ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களால் தாங்க முடியாது. இதையெல்லாம் விட இராஜஸ்தானில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை  நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழக மாணவர்களால் இதை நிச்சயமாக தாங்கிக்கொள்ள முடியாது. இதனால் அவர்களுக்கு உடல்நலன் சார்ந்த பிரச்னைகள் ஏற்படலாம். இதையெல்லாம் கருத்தில்கொள்ளாமல் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இராஜஸ்தான் சென்றுதான் தேர்வெழுத வேண்டும் என்று மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பதும், அதில் உள்ள நடைமுறை சிக்கல்களைக் கருத்தில் கொள்ளாமல் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்வதும் சமூகநீதியைக் குழிதோண்டி புதைக்கும் செயல்களாகும். இந்த விஷயத்தில் தமிழக அரசு காட்டிய அலட்சியம் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. இதில் எதையும் செய்ய முடியாது எனக் கைவிரித்து விட்டது. தமிழக ஆட்சியாளர்களுக்கு எந்தவித கடமையுணர்வும், பொறுப்பும் இல்லை என்பதையே இது காட்டுகிறது.
இராஜஸ்தானில்தான் நீட் தேர்வு எழுதவேண்டுமென்றால் பல மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்படும் வாய்ப்புள்ளது. எனவே, தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் அதிகாரிகளும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரைத் தொடர்புகொண்டு தமிழக மாணவர்களுக்குத் தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யும்படி வலியுறுத்த வேண்டும்.
அது சாத்தியமில்லை என்றால் சம்பந்தப்பட்ட மாணவர்களை அரசு செலவில் விமானத்தில் இராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்று, வசதியான இடத்தில் தங்கவைத்து திரும்ப அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவர்களை அழைத்துச் சென்றுவர பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரி தலைமையில் குழு ஒன்றையும் தமிழக அரசு அமைக்க வேண்டும்".

கருத்துகள் இல்லை: