வெள்ளி, 4 மே, 2018

தமிழகத்துக்கு 4 டிஎம்சி நீர் வழங்கவும் – கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம்

விகடன் : மே மாதத்துக்குள் தமிழகத்துக்கு 4 டிஎம்சி நீர் வழங்க வேண்டும்
என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், ஆணையை மீறும்பட்சத்தில் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி நீர்ப் பங்கீட்டிற்கான வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், காவிரி வழக்கில் வரைவு அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கிவிட்டது. பிரதமர், மத்திய அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். விரைவு திட்டம் தயாராக இருக்கிறது. அமைச்சரவையின் ஒப்புதல் பெற வேண்டியிருக்கிறது.

பிரதமர் கர்நாடகாவில் பிரசாரம் செய்வதால் திட்டத்துக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறமுடியவில்லை. வாரியத்துக்கான செயற்பாட்டு வரைவு அறிக்கை பிரதமருக்கு அனுப்பப்பட வேண்டியுள்ளது. இதனால் வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய 10 நாள்கள் அவகாசம் அளிக்க வேண்டும்” என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கர்நாடகாவில் தேர்தல் நடைபெறுவது பற்றி எங்களுக்குக் கவலையில்லை என்றனர். இதைத் தொடர்ந்து கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கூறினார்.
இதையடுத்து கோபம் அடைந்த நீதிபதிகள், காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க முடியாது. தமிழகத்துக்கு இந்த மாதம் 4 டிஎம்சி நீர் கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும். இந்த உத்தரவை மீறினால் கர்நாடக அரசு கடும் விளைவை சந்திக்கநேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
அப்போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், தமிழகத்துக்கு இடைக்காலமாக 4 டிஎம்சி நீர் வழங்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, காவிரி விவகாரத்தில் இதுவரை எடுத்த நடவடிக்கை பற்றி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
vikatan.com

கருத்துகள் இல்லை: