சனி, 5 மே, 2018

கந்துவட்டி, டிராவல்ஸ், நிறுவன தொழிலதிபர்களாக மாறிய போலீஸ்! ஸ்காட்லாண்டு போலீசை விட பலமடங்கு பணக்காரர்கள்

கந்துவட்டி, டிராவல்ஸ், நிறுவனங்களில் முதலீடு: தொழிலதிபர்களாக மாறிய போலீஸ்!இன்னைக்கு இவனுக காட்டுலதான் மழை, சமூக விரோதிகளிடம் கைகோர்த்து மாமூல் வாங்கி கொட்டோ கொட்டு என்று கொட்டி பினாமி பெயரில் வீடு பங்களா என செல்வ செலுப்பில் உள்ளார்
தினமலர் :தொழிலதிபர்களாக மாறிய போலீஸ்! திருப்பூரின் பாதுகாப்போ, 11 லட்சம் மக்களுக்கு, 600 போலீசார் என்ற விகிதாச்சார அவலத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலை போதாதென்று, போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரில் சிலர், வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்து, பல்வேறு தொழில்களிலும் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், திருப்பூரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. திருப்பூர் மாநகரில் வசிக்கும் மக்கள் தொகை ஏறத்தாழ 11 லட்சம் இங்குள்ள, 7000 நிறுவனங்களின் மூலமாக கடந்தாண்டில் மட்டும், 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அந்நியசெலாவணி ஈட்டப்பட்டுள்ளது.
உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த, நான்கு லட்சம் தொழிலாளர்கள் பனியன் நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். வேலைவாய்ப்பில் இந்நகரம் எந்தளவிற்கு பெருமை பெற்றிருக்கிறதோ, அதே அளவிற்கு விபத்து, குற்றங்கள் அதிகரிப்பிலும் முதன்மையாக உள்ளதை, மாநில குற்ற ஆவணக்காப்பக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.


நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போராட்டங்கள், அரசியல் நிகழ்வுகளால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, குற்றங்களை தடுக்க முடியாமல் திணறுகின்றனர், அதிகாரிகள்.திருப்பூர் மாநகரிலுள்ள 9 போலீஸ் ஸ்டேஷன்கள், ஆயுதப்படை, சிறப்பு பிரிவுகள் என அனைத்திலும் பணியாற்றும் ஒட்டு மொத்த போலீசாரின் எண்ணிக்கை வெறும், 750 பேர் மட்டுமே.

இதிலும், மருத்துவ விடுப்பு, போலீஸ் உயரதிகாரிகள் வீட்டில் எடுபிடி வேலை, டிரைவர் வேலை, நீதிமன்ற பணி என, ஏறத்தாழ, 20 சதவீத போலீசாரை கழித்துவிட்டால்... 600 போலீசார் மட்டுமே அன்றாடம் பணியில் இருப்பர். அதாவது, மாநகரிலுள்ள 11 லட்சம் மக்களுக்கு, இந்த 600 போலீசார் தான் பாதுகாப்பு.

அதுவும் இரவுப் பணி, பகல் பணி என, பிரிக்கப்பட்டுவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகி விடும்.முதலாளிகளான போலீஸ்இருக்கும் போலீசாரை வைத்து, 24 மணி நேரமும் வேலை வாங்கினாலே, குற்றங்களைத் தடுக்க முடியாது என்ற நிலை இருக்கையில், அதிகாரிகள் மற்றும் போலீசார் பலரது கவனமும் தற்போது, 'வருமானத்தின்' மீது திரும்பியுள்ளது.

திருப்பூரில் பணியாற்றும் போலீசாரில் பலரும் பனியன் தொழில் சார்ந்த சிறு நிறுவனங்களை நடத்துகின்றனர் அல்லது அவற்றில், தங்களது வருமானத்துக்கும் அதிகமான பணத்தை முதலீடு செய்துள்ளனர். இன்ஸ்பெக்டர் ஒருவர், ஆறு கார் மற்றும் ஒரு டூரிஸ்ட் வேன் வாங்கி டிராவல்ஸ் நிறுவனங்களுடன் இணைத்து தொழில் செய்கிறார்.மற்றொரு அதிகாரியோ, கந்துவட்டிக்கு கடன் வழங்கும் பிசினஸ் செய்து, தனக்கு கீழ் பணியாற்றும் போலீசாரையே வசூல் ஏஜன்ட்களாக மாற்றியுள்ளார்.

பேக்கரி நடத்துவது, நிதி நிறுவனம் நடத்துவது என, இன்னும் சில போலீசார் குட்டி முதலாளிகளாக மாறியுள்ளனர். இதனால், மாத ஊதியத்தை மட்டுமே நம்பி, நேர்மையாக பணியாற்றும் போலீசாருக்கு பணிப்பளுவும், மன அழுத்தமும் கூடிவிட்டது.
ஆளுங்கட்சியினருக்கு, 10 லட்சம், 15 லட்சம் என, வாரியிறைத்து விரும்பிய இடத்தைப் பிடித்த சில போலீஸ் அதிகாரிகள், தங்களது பணிக்காலத்தில், முதலீட்டுத் தொகையினைத் திரும்ப எடுப்பதிலேயே குறியாக உள்ளனர்.

உயரதிகாரிகள் கண்டித்து டிரான்ஸ்பர் செய்தாலும், அரசியல் ஆசியுடன் மீண்டும் அதே இடத்திற்கு வந்துவிடுகின்றனர். அந்த அளவிற்கு, திருப்பூர் போலீசில் அரசியல் தலையீடும் அத்துமீறிப் போய்விட்டது. 'டாஸ்மாக்' பார் வசூல்திருப்பூரில் மொத்தமுள்ள 202 டாஸ்மாக் கடைகளில், 35 கடைகள் கோர்ட் உத்தரவால் மூடப்பட்டுவிட்டன. மீதமுள்ள 167 கடைகளில், 126 கடைகளில் அனுமதியுடனும், பிற கடைகளில் சட்டவிரோதமாகவும் பார் நடத்தப்படுகிறது.

மதுக்கடை மதியம், 12.00 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு, 10.00 மணிக்கு மூடப்பட வேண்டும் என்பது அரசு உத்தரவு. ஆனால், காலை, 6.00 மணிக்கெல்லாம் திறக்கப்பட்டு சட்டவிரோதமாக, பாட்டிலுக்கு, 50 ரூபாய் கூடுதலாக வைத்து விற்கப்படுவது கண்கூடு. இதை அனுமதிப்பதற்காக, அந்தந்த ஸ்டேஷன் போலீசாருக்கு மாதம் தோறும் லட்சக்கணக்கில் மாமூல் வழங்கப்படுகிறது.

அதேபோன்று, டாஸ்மாக் அதிகாரிகளுக்கும் கப்பம் கட்டப்படுகிறது. இதன் மூலமாக, ரோந்து செல்லும் 'ஏட்டய்யா' முதல் மேலதிகாரிகள் வரை மாமூல் ஊழல் பாய்கிறது. ஆளுங்கட்சியினரும் இதில், காசு பார்ப்பதால் போலீஸ் உயரதிகாரிகள் செய்வது அறியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

கட்டப்பஞ்சாயத்து :

திருப்பூரில் சமீபகாலமாக வீடு புகுந்து திருட்டு, செயின் பறிப்பு, வழிப்பறி, கொள்ளை, மோசடி குற்றங்கள் அதிகரித்துவிட்டன. இது தொடர்பாக, போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் அளித்தாலும் உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்படுவதில்லை. புகாரைப் பெற்றுக்கொண்டு இழுத்தடிக்கின்றனர். குறிப்பாக, மொபைல் போன் திருட்டு, வாகனத் திருட்டால் பாதிக்கப்படும் மக்கள் அனுபவிக்கும் அவஸ்தை கொஞ்சநஞ்சமல்ல. சிவில் விவகாரங்களை இழுத்துப்போட்டு, நாள் கணக்கில் ஏன் வாரக்கணக்கில்கூட கட்டப்பஞ்சாயத்து நடத்தி பண ஆதாயம் காண்பதில் காட்டும் ஆர்வத்தை, சில அதிகாரிகள், அப்பாவி ஜனங்களின் மீது காட்டுவதில்லை என்பது பரவலான குற்றச்சாட்டு.

சமீபத்தில், இரு தரப்பினர் இடையே நேரிட்ட சொத்து விவகாரத்தை, ஓட்டலில் ரூம் போட்டு கட்டப்பஞ்சாயத்து செய்த போலீஸ் அதிகாரி, ஒரு கோடி ரூபாயை பிரதிபலனாக பெற்றது தொடர்பான புகார், தமிழக அரசின் உள்துறைக்கும், மாநில டி.ஜி.பி.,க்கும் சென்று, விசாரணையும் நடந்துள்ளது என்கின்றனர் உளவு போலீசார்.

'குட்கா'விலும் மாமூல் :

மேலும், உளவு போலீசார் கூறுகையில், கட்டப்பஞ்சாயத்து தவிர, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையிலும், திருப்பூர் போலீசார் அதிகளவில் மாமூல் பெறுகின்றனர். இங்கு லட்சக்கணக்கான வடமாநிலத்தவர்கள் பணியாற்றுவதால், 'குட்கா' தேவை அதிகமாக உள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து மூட்டை, மூட்டையாக கடத்தி வரப்படும் குட்கா, திருப்பூரிலுள்ள ரகசிய குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டு சில்லறை வியாரிகளுக்கு போகிறது.

இந்த வியாபாரத்தில் தலையிடாமல் இருப்பதற்காகவும், மாதாமாதம் குறிப்பிட்ட ஸ்டேஷன் போலீசாருக்கு மாமூல் தரப்படுகிறது' என்கின்றனர். இவ்விவகாரத்தை சிறப்பு புலனாய்வுத்துறை தோண்டினால், சென்னை போலீசில் நடந்த குட்கா ஊழல் போன்று, திருப்பூரிலும் பெரிய அளவிலான தொடர்புகள் அம்பல மாகும் வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர் வியாபாரிகள். 'பிரஸ்' பெயரில் 'பிளாக்மெயில்' :
போலீசாரின் முறைகேடுகளுக்கு இணையாக, திருப்பூரில் ஊடகவியலாளர்கள் போர்வையில், 'பிளாக்மெயில்' ஆசாமிகள் பணம் பறிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தொழில் தகராறு, டாஸ்மாக் பார், மசாஜ் சென்டர், குட்கா வியாபாரிகள், சமூக விரோத செயலில் ஈடுபடும் நபர்களை மிரட்டி, பணம் பறிக்கின்றனர். அரசுத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'பிரஸ் ஸ்டிக்கருடன் வாகனத்தில் வலம் வரும் மோசடி நபர்கள், லஞ்ச முறைகேட்டில் ஈடுபடும் சில அதிகாரிகளை மிரட்டி மாத மாமூல் பெறுகின்றனர். நான் பொறுப்பேற்றபோது, அப்படியொரு மாமூல் பட்டியலை, எனக்கு முன்பிருந்த அதிகாரி வழங்கிச் சென்றார். நேர்மையான ஊடக வியலாளர்களுக்கு, இவர்களால் அவப்பெயர் ஏற்படுகிறது. மிரட்டலால் பாதிக்கப்படும் அதிகாரிகள் வெளிப்படையாக போலீசில் புகார் அளிக்க வேண்டும். பொள்ளாச்சியில் சிறை அதிகாரியை மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டதைப் போன்ற நடவடிக்கை பாய வேண்டும். எமது அலுவலகத்தில் கேமரா பொருத்தி கண்காணித்து வருகிறோம்' என்றார். லஞ்ச ஒழிப்பு அதிகாரி கூறுகையில், 'லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரியின் அலுவலக 'டிராயரை' சோதனையிட்டபோது, கோப்புகளுக்கிடையே சிறிய துண்டு காகிதத்தையும் கைப்பற்றினோம். அதில், 'பிரஸ்'பெயரில் மாத மாமூல் பெறும் பிளாக்மெயில் நபர்களின் பெயர்கள் இருந்தன' எனக்கூறி, அந்த ஆவணத்தையும் அனுப்பி வைத்தார்.


கலெக்டர், கமிஷனர் சொல்வது என்ன?
திருப்பூர் கலெக்டர் பழனிசாமி கூறுகையில், ''பிரஸ், மீடியா பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது இதுவரை புகார் வரவில்லை.
கந்துவட்டி, டிராவல்ஸ், நிறுவனங்களில் முதலீடு: தொழிலதிபர்களாக மாறிய போலீஸ்!
வந்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தவிர, 'போலி பிரஸ்' நபர்களை, பி.ஆர்.ஓ., அலுவலகம் மூலமாக கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மோசடி நபர்களால் பாதிக்கப்படுவோர் நேரடியாக என்னிடமோ அல்லது போலீஸ் கமிஷனரிடமோ புகார் அளிக்கலாம்,''என்றார். திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் நாகராஜனிடம் கேட்டபோது, ''பிரஸ் பெயரில் மிரட்டலில் ஈடுபடும் நபர்கள் குறித்து இதுவரை எமக்கு எந்த புகாரும் வரவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்''என்றார்.


-நமது நிருபர் --

கருத்துகள் இல்லை: