வெள்ளி, 4 மே, 2018

திடீர் கோடீஸ்வரனான மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்... அம்பானிகளுக்கு பலத்த போட்டியாளர்?

savukkuonline.com: போர் தொடங்கட்டும் என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததைப் போல, மொழி பெயர்ப்புக் கட்டுரைகள் இன்று முதல் வெளியிடப்படுகின்றன.  கூடுமான வரை, மொழி நடை உறுத்தாமல், எளிய தமிழில் கட்டுரைகளை தருவதற்கு முயன்றுள்ளோம்.   குறைகளையும், நிறைகளையும் சுட்டிக் காட்டவும்.
எங்களது இந்த முயற்சிக்கு உங்களது ஆதரவு மட்டுமே உத்வேகம், பலம், ஊக்கம் எல்லாமும்.  உங்கள் கருத்துக்களை, சமூக வலைத்தளங்களிலும், இந்தத் தளத்திலும் தாராளமாக வழங்குங்கள். இக்கட்டுரைகளின் இணைப்பை பகிருங்கள்.   இந்த தரவுகளை பலரிடம் கொண்டு சேர்ப்பது, நம் அனைவரது கடமை.
எங்கள் பிழைகளையும், குறைகளையும் திருத்திக் கொள்ள திறந்த மனதுடன் உள்ளோம்.    உங்கள் ஆதரவு மட்டுமே எங்களுக்கான ஊக்கம்.
#PackUpModi தொடரின் முதல் கட்டுரையை உங்களுக்கு வழங்குவதில் சவுக்கு பெரும் மகிழ்ச்சி கொள்கிறது.


நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசில் அமைச்சராக சேர்ந்த பின்னர், இதுவரை வெளி உலகுக்குத் தெரியாத ஒரு ஒப்பந்தத்தில்,  பாஜக மூத்த தலைவரான பியுஷ் கோயல் ஈடுபட்டுள்ளார்.  அவருக்கும் அவரது மனைவிக்கும் சொந்தமான ஒரு தனியார் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் அவர் அமைச்சராக உள்ள மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் தொழில் செய்து வரும் பில்லியனர் அஜய் பிரமல் என்பவருக்குச் சொந்தமான நிறுவனத்திற்கு 1000 மடங்கு அதிக பிரிமியத்துக்கு விற்பனை செய்துள்ளார்.
இந்த விற்பனை செப்டம்பர் 2014ல் நடைபெற்றுள்ளது. அதாவது, கோயல் மத்திய அமைச்சராக இருந்த நான்கு மாத காலத்தில் இது நடைபெற்றுள்ளது.
கோயலின் இந்த சொத்து பரிவர்த்தனை கேள்விக்குரியது. ஏனெனில், கோயலின் இந்த – ஃபிளாஷ்நெட் இன்ஃபோ சொல்யுசன்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட்- எ்னற நிறுவனமோ, அதனுடைய விற்பனை விவரமோ 2015 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் அவர் ஒரு மத்திய அமைச்சர் என்ற வகையில் பிரதமரின் அலுவலகத்தில் அவர் தாக்கல்செய்த சொத்துகள் மற்றும் கடன்களின் கட்டாய அறிக்கையில் பிரதிபலிக்கவில்லை.
பிரமல் குழுமம் மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளில் வர்த்தக நலன்களைக் கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல் மேற்கண்ட துறைகளில் முதலீடுகளையும் செய்து வந்ததால் இந்த விற்பனை கேள்விக்குறியதாகுவதோடு, முரண் நலன்களையும் ஏற்படுத்துகிறது.  இந்த பங்கு விற்பனை நடைபெற்ற காலகட்டத்தில் கோயல் மின்சாரம், நிலக்கரி மற்றும்  புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் மத்திய இணை அமைச்சராக (தனி பொறுப்பு) இருந்தார்.
பிரமல் குழுமத்துடனான அவரது இந்த ஒப்பந்தம் சமீப வாரங்களில் வெளிச்சத்துக்கு வந்த கோயலின் கார்ப்பொரேட் இந்தியாவுடனான  “நெருக்கம்“ குறித்த இரண்டாவது நிகழ்வாகும். இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், அமைச்சர் கோயல் தனது வர்த்தக உறவுகளை  வெளிப்படையாக காட்டாமல் இருந்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு வரை பியுஷ் கோயல் இயக்குநராக இருந்த ஷிர்டி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடனான அவரது தொடர்புகள் பற்றியும் அந்நிறுவனம் 2014ல் பல நூறுகோடி ரூபாய் கடனை செலுத்தாது பற்றியும்  கேள்வி எழுப்பியபோது , தற்போது மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரித் துறை அமைச்சராக உள்ள கோயல் தனக்கும் அந்த நிறுவனத்துக்கும் கடந்த எட்டு ஆண்டுகளாக எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர்களுடைய பிரச்சினைகளுக்கு அவர் பொறுப்பில்லை என்றும் கூறி ஓர் அறிக்கை வெளியிட்டார்.
ஆயினும், அவர் வெளியிடாத தகவல் என்னவெனில் இயக்குநர் பொறுப்பிலிருந்து அவர் விலகிய பின்னரும் அவரும், அவரது மனைவியும் அந்த நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களாக இருந்துள்ளனர்.  ஷிர்டியுடனான தனது தொடர்புகள் முடிவடைந்துவிட்டதாக அவர் அறிவித்த பிறகு ஐந்து ஆண்டுகளில் அவர்கள் வைத்திருந்த ஒரு நிறுவனத்தின் மூலமாக அவர்களுக்குச் சொந்தமான சுமார் 4.2 சதவீத பங்குகளை மட்டும் விற்பனை செய்திருந்தார்.
பிரதமர் அலுவலகத்துக்கு தெரியாமல் நடந்த பரிவர்த்தனை  
கோயல் மற்றும் அவரது மனைவி  ஆகிய இருவரும்  2000 ஆம் ஆண்டில் ஃப்ளாஷ்நெட் நிறுவனம் ஆரம்பித்து,  இருவரும் சேர்ந்து  99.9% பங்குகளை வைத்திருந்தனர்.  ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் (அசோஸியேஷன் ஆஃப் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ்)ன் ஆவணங்களின்படி, அவர் 2010ல் மேலவை உறுப்பினராக ஆன சிறிது காலம் கழித்து ராஜ்ய சபை செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் சட்டப்பூர்வமான பட்டியலில் “ஃப்ளாஸ்நெட்-ல் “கட்டுப்படுத்தும் அளவுக்கான பங்குகள் வைத்திருப்பதை” கோயல் ஒப்புக் கொண்டார்.
ஆயினும், பிரதமர் அலுவலகத்தில் 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் தாக்கல் செய்த சொத்து விவரங்களில், ஃப்ளாஷ்நெட்-ல் அவரது உரிமையைப் பற்றியோ, அல்லது அவரும் அவரது மனைவியும் தங்களது பங்குகளை பிரமல் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு மாற்றிவிட்ட உண்மையையும் குறிப்பிடாமல் தவிர்த்தார்.
2014 ஜுலை 24 தேதியிட்ட அவரது அறிவிப்பு அவரது பங்குகளின் மொத்த மதிப்பு 101,300 ரூபாய் “அன்கோட்டட் செக்யுரிடீஸ்  (புக் வேல்யு) என குறிப்பிடுகிறது. அவர் துல்லியமான அறிவிப்பைச் செய்துள்ளதாக கருதினால், அந்த நேரத்தில் அவருக்குச் சொந்தமான ஃப்ளாஸ்நெட் பங்கான 53.95 சதவீத மதிப்பையும் சேர்த்திருக்க வேண்டும்.

Flashnet இயக்குநர் அறிக்கையிலிருந்து

ஃப்ளாஷ்நெட் தகவல் இயக்குநரின் அறிக்கையில் செப்டம்பர் 29 அன்று பங்குகள் மாற்றப்பட்டிருப்பதைக் காட்டும் ஒரு படம்.
நிறுவன பங்குதாரர்களுக்கு 2015 மார்ச் 31 அன்று சமர்ப்பிக்கப்பட்ட இயக்குநரின் அறிக்கையின் படி,  பியுஷ் கோயலது பங்குகள் பிரமல் எஸ்டேட்ஸ் நிறுவனத்துக்கு 2014 செப்டம்பர் 29 அன்று மாற்றப்பட்டன. அவரது மனைவிக்குச் சொந்தமான 45.95 சதவீத பங்குகளும் மாற்றப்பட்டன.
இதில் வேடிக்கை என்னவெனில், 2015 மார்ச் 31 அன்று பிரதமர் அலுவலகத்தில் தெரிவித்த தனது சொத்துப்பட்டியலில் – ஃப்ளாஷ்நெட்-ல் தனது பங்குகளை விற்றுள்ள அதே நேரத்தில்- தனது சொத்துக்களின் மொத்த மதிப்பு 101,300 ரூபாய் – புத்தக மதிப்பில்  (Book Value) செலுத்தப்படாத பத்திரங்களின் மொத்த மதிப்பு என பியுஸ் கோயல்  குறிப்பிடுகிறார்.
இந்த விவரங்களை “த ஒயர் “ ஆங்கில ஆன்லைன் தளம் பகிர்ந்த ஒரு பட்டய கணக்காயர் (சார்டர்ட் அக்கவுண்டன்ட்) கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்பினார். ”பங்ககுள் செப்டம்பர் 29, 2014 அன்று விற்கப்பட்டிருந்தால் பியுஷ் கோயலின் சொத்து விற்பனைக்கு முன்னும்,  விற்பனைக்குப் பின்னரும் அவரது பங்குகளின் மதிப்பில் ஏன் எந்தவித மாறுபடும் இல்லை?”
மத்திய அமைச்சர்கள் தங்களது பெயரில் உள்ள சொத்துக்கள் மற்றும் முதலீடுகள்,  அவர்களது மனைவிகள் மற்றும் அவர்களைச் சார்ந்திருக்கும் உறவினர்களின் பெயரில் உள்ள சொத்துக்கள் மற்றும் முதலீடுகளை வெளியிட வேண்டும். இது அதிகபட்ச வெளிப்படைத்தன்மைiய உறுதி செய்வதற்காக செய்யப்படுகிறது. குறிப்பாக அது ஒரு வலுவான கருத்து வேற்றுமையாக  தோன்றும்போது.
கோயலின் 2016 ராஜ்ய சபா வேட்புமனுவுடனான பிரமாண வாக்குமூலத்தில்  (Affidavit) பிரமல் நிறுவனத்துக்கு விற்கப்பட்ட பங்குகளின் மதிப்பு குறிப்பிடப்படவில்லை.
மின்சக்தி  துறையில் பிரமல் நிறுவனம்
பிரமல் குழு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழிலில் 2013ம் ஆண்டு  நுழைந்தது. மின்சாரம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ள ஏபிஜி அஸெட் மேனேஜ்மென்ட்  (APG Asset Management) -உடன் 2014 ஜுலையில் ஒரு ஒப்பந்தம் போட்டது.
வேறு வார்தைகளில் கூறினால், கோயல் தனது நிறுவனத்தை தான் மத்திய இணை அமைச்சராக இருந்த அதே துறையில் தொழில் செய்து வரும் மற்றொரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கு விற்றுவிட்டார். அந்த நிறுவனம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஈடுபடப் போவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளது.
கோயலின் நிறுவனத்தை வாங்கிய அதே ஆண்டு – 2014-15 நிதியாண்டில் பிரமல் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சுமார் 119 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அறிக்கை வெளியிட்டது.  இத்தகைய நஷ்டத்தை சந்தித்த ஒரு நிறுவனம், இப்படியொரு நெருக்கடியான காலகட்டத்தில் பல கோடிகளை கொடுத்து, எதற்காக பியுஷ் கோயலின் நிறுவனத்தை வாங்க வேண்டும் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.
ஃப்ளாஷ்நெட்டின் மதிப்பு
மாற்றப்பட்ட பங்குகளின் மதிப்பு குறித்த “த ஒயர்” கேட்ட கேள்விகளுக்கு  கோயலோ, பிரமல் நிறுவனமோ பதிலளிக்கவில்லை. ஆனால் ஜுன் 12, 2014 தேதியிட்ட பிரமல் எண்டர்பிரைஸ் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் பியுஸ் கோயல் மற்றும் அவரது மனைவிக்குச் சொந்தமான ஃப்ளாஷ்நெட் நிறுவனத்தின் மொத்த 50,070 பங்குகளை – ஒரு பங்கின் விலை 10,000 ரூபாய்க்கு மிகாமல், அதிகபட்சமாக ஒரு பங்கின் விலை 9,990 ரூபாய் பிரிமியம் மதிப்பில் – அல்லது ஏறத்தாழ 1000 சதவீதம் கூடுதல் மதிப்பில் வாங்க அதிகாரமளித்தது.

FlashNet பங்குகளை வாங்குவதற்கான பிரமல் எஸ்டேட்ஸ் நிறுவனத்தின் போர்டு தீர்மானம்
பிரமல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் அடுத்த ஆண்டுக்கான  ஆண்டறிக்கையின்படி, ஒரு பங்கின் விலை 9,586 ரூபாய் வீதம் ஃபிளாஸ்நெட்-ல் இருந்த கோயல் குடுமபத்தினரின் பங்குகளை மொத்தம் ரூ 48 கோடிக்கு வாங்கப்பட்டதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

31 மார்ச் 2015 வரையிலான பிரமல் எஸ்டேட்ஸ் நிறுவனத்தின் நிதி அறிக்கை
கோயல் தரப்பில் பதில் எதுவும் சொல்லாத நிலையில், உண்மையிலேயே அவருக்கு எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.
விற்பனையின்போது – நிறுவனங்களின் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்ட லாப, நஷ்ட அறிக்கையின்படி- ஃப்ளாஷ்நெட் நிறுவனம் ரூ 34 லட்சம் லாபம் (வரிக்கு பிறகான லாபம்) காட்டியது.

31 மார்ச் 2014 வரையிலான பிரமல் நிறுவனத்தின் ஆண்டறிக்கை
விற்பனை செய்யப்பட்ட ஆறு மாதங்கள் கழிந்து, மார்ச் 2015 முடிவடைந்த நிதியாண்டு தொடர்பான தாக்கல்களின்படி, அந்நிறுவனம்  அதனுடைய மொத்த மதிப்பு ரூ 10.9 கோடி என அறிவித்தது.

Aasan Info Solutions (India) Private Ltd நிறுவனத்தின் 31 மார்ச் 2015 வரையிலான ஆண்டறிக்கை
கோயல் ஃப்ளாஷ்நெட் நிறுவன இயக்குநராக நவம்பர் 25, 2004 முதல் மே 26, 2014 வரை – மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற நாள் வரை- பணியாற்றினார். அவரது மனைவி சீமா கோயல் ஏப்ரல் 2009 முதல் மே 26, 2014 வரை ப்ளாஷ்நெட் நிறுவனத்தில்  இயக்குநராக பணியாற்றினார்.  ஆயினும், இந்த ஜோடி இயக்குநர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தபிறகும் கூட தொடர்ந்து 99 சதவீத பங்குகளை வைத்திருந்தது.  இந்த விபரங்களை பியுஷ் கோயல் எந்த இடத்திலும் வெளியிடவில்லை.
அனைத்து ராஜ்ய சபா எம்.பி.க்களும் தாங்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட 90 நாட்களுக்குள் தங்களுடைய சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விரிவான பட்டியலை வெளியிட வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் அதில் ஏற்படும் மாற்றங்களை – வருவாய் ஆதாயமுள்ள இயக்குநர் பதவி மற்றும் நிறுவனங்களில் பங்குகளைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பண நலன்களை அறிவிக்க வேண்டும். அஷோசியேஸன் ஆஃப் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் தகவலின்படி, ஃப்ளாஷ்நெட்-ல் 2011ல் தனது கட்டுப்பாட்டில் இருந்த பங்குகள் குறித்தும், 2015ல் முடிவடைந்த நிதியாண்டுக்கு மேற்படி நிறுவனத்திலிருந்து பெற்ற இயக்குநருக்கான ஊதியம் குறித்தும் கோயல் குறிப்பிட்டிருந்தார். தன்னுடைய சொத்துகள் குறித்த மேம்படுத்தப்பட்ட தகவல்கள் என்ற வடிவில் ஃப்ளாஷ்நெட் பங்கு விற்பனை குறித்து , ஏதுமிருப்பின், அவர் என்ன அறிவித்தார் எனத் தெரியவில்லை. அவை ராஜ்ய சபா வெப்சைட்டில் பொதுமக்களின் பார்வைக்கு  இந்நாள் வரை வைக்கப்படவில்லை.  இந்த கட்டுரை தி வயர் தளத்தில் வெளியான பிறகும் கூட, இந்த விபரங்களை பொது வெளியில் பியுஷ் கோயல் வெளியிட முயற்சி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோயலின் நிறுவனத்தை வாங்கியது, அதன் விலை மற்றும் பங்குகளின் மதிப்பீட்டு முறை, மற்றும் கோயல் தம்பதியினருடனான அவரது தொடர்பு உள்ளிட்ட விவரங்களைக் கேட்கும் கேள்விகளுக்கு அஜய் பிரமல் பதிலளிக்கவில்லை. விரைவில் பதிலளிக்கப்படும் என்று  என பிரமல் குழுமத்தின் கார்பொரேட் தொடர்பு பிரதிநிதி டிம்பிள் கபுர் கூறினார். ஆனால் இது வரை, எந்தத் தகவலும் வரவில்லை.
கோயலின் ஃப்ளாஷ்நெட் நிறுவனம் பிரமலுக்கு விற்கப்பட்டது குறித்து உங்களது அலுவலகத்துக்கு தெரியுமா – அந்த வருமானம் பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரின் சொத்துகள் மற்றும் கடன்கள் அறிவிப்பில் காணப்படவில்லை- என பிரதமரின் முதன்மைச் செயலாளரை “த ஒயர்“ கேட்டது. ஆனால் இதுவரை பதில் கிடைக்கவில்லை.
செப்டம்பர் 2014ல் பிரமல் எஸ்டேட்ஸ் நிறுவனத்தால் வாங்கப்பட்ட பின்னர், ஃப்ளாஷ்நெட்-ன் பெயர் ஆஸான் இன்ஃபோ சொல்யுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என மாற்றப்பட்டது. 2017 நிதியாண்டில் அந்நிறுவனம் ரூ 14.78 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அறிவித்தது.
ஃப்ளாஷ்நெட் விற்பனை செய்யப்பட்டபோது, அஜய் பிரமல், அவரது மனைவி ஸ்வாதி, நந்தினி பிரமல் மற்றும் ஆனந்த் பிரமல் ஆகியோர் பிரமல் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இயக்குநர்களாக இருந்தனர். கோயல் நிறுவனத்துடன் பரிவர்த்தனை முடிவடைந்த சில தினங்களில் – அக்டோபர் 2014, அந்த நான்கு பிரமல்ககளும் ஏதோ ஒரு சில காரணங்களுக்காக (இயக்குநர்) குழுவிலிருந்து விலகினர்.
ஷிர்டி இண்டஸ்ட்ரீஸில் கோயலின் பங்கு
பெரும்பாலும் பொதுத் துறை வங்கிகளில் கடனாகப் பெற்ற ரூ 650 கோடியை கட்டத் தவறிய ஷிர்டி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகளை பியுஷ் கோயல் வைத்திருந்தார். நேஷனல் கம்பெனி லா டிரிபுயுனலால் ஷிர்டிக்கு இறுதியாக 60 சதவீத “சலுகை” – வங்கிகளின் பாஷையில் சொன்னால் “தள்ளுபடி“ – வழங்கப்பட்டது. கடன்களை திருப்பிச் செலுத்தாத புரமோட்டர்ஸ் அந்த நிறுவனத்தின் கட்டுப்பாடுகளை தம்  வசம் வைத்திருக்க தடைசெய்யும் விதிமுறைகளை மீறி முதன்முறையாக ஷிர்டியின் புரமோட்டர்ஸ் அந்நிறுவனத்தை கட்டுப்படுத்தும் உரிமையை வைத்திருக்க அனுமதிக்கப்பட்டனர்.

அஜய் பிரமல்.
2013 வரை, ஷிர்டியில் கோயலின் பங்குகள் ஷாஜல் ஃபைனான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறுவனம் மூலம் வைக்கப்பட்டிருந்தன. ஷிர்டி இண்டஸ்ட்ரீஸில் கோயல் 2008 முதல் 2010 வரை சேர்மனாகவும், நான் எக்ஸிக்யுடிவ் டைரக்டராகவும் இருந்தார். அந்த சமயத்தில்தான் ஷிர்டி நிறுவனம் பணம் செலுத்த முடியாமல் சிரமப்படத் தொடங்கியது. பின்னர் 2014ல் முறையாக வங்கிக் கடனை செலுத்தத் தவறியது.
ஷிர்டி மற்றும் அதன் புரமோட்டர்ஸ்களுடன் கோயலின் உறவு குறித்து த ஒயர் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து, கோயல் சார்பில் பாரதிய ஜனதா கட்சி ஓர் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ”ஷிர்டி இன்டஸ்ட்ரீஸில் ஜுலை 2010க்கு பிறகு கோயலுக்கு எந்த தொடர்பும் இல்லை. அதனால், அந்நிறுவனத்தில் 2010க்கு பிறகு ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு கோயல் எந்த வகையிலும் பொறுப்பல்ல. அந்த நிறுவனம் சந்தித்த துயரங்கள் 2013ம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியின்போது தொடர்புடையவை. ஷிர்டி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் கோயலுக்கு கடந்த 8 ஆண்டுகளாக எந்த வித தொடர்பும் இல்லை. அந்நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு அவர் எந்த வகையிலும் பொறுப்பில்லை. அவர் கையாண்ட அமைச்சகங்கள் எதுவும் அந்நிறுவனத்தை கையாளவில்லை” என கூறப்பட்டிருந்தது.
ஆயினும், 2013 ஆம் ஆண்டு இறுதிவரை கோயலின் ஷாஜல் நிதி நிறுவனம் ஷிர்டியின் 7,25,000 பங்குகளை வைத்திருந்தது. அதாவது மொத்தம் வெளியிடப்பட்ட 1,73,07,000 பங்குகளில், அவை 4.18 சதவீதமாகும்.
ஷாஜல் நிதிநிறுவனம் மூலம் ஷிர்டியின் மற்றொரு கடனை திருப்பிச் செலுத்தாமல் தவறிழைத்த நிறுவனமான ஆஸிஸ் லாஜிஸ்டிக்ஸ்-ன் பங்குகளை கோயல் வைத்திருந்தார்.
பிப்ரவரி 2009ல், ஷீமா மற்றும் பியுஷ் கோயல் ஷாஜல் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் இயக்குநர்களாக ஆயினர். செப்டம்பர் 2009ல் அந்நிறுவனத்தின் உரிமையாளர்களாயினர். இதைத் தொடர்ந்து, ஷாஜல் ஃபைனான்ஸ் நிறுவனம் ஷிர்டி குழுமத்தைச் சேர்ந்த லாப் கேப்பிடல் சர்வீசஸ் என்ற நிறுவனத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டது.
பியுஸ் கோயலின் மனைவி கடனை திருப்பிச் செலுத்தாமல் தவறிழைத்த ஷிர்டி புரமோட்டர்களுக்குச் சொந்தமான ஆசிஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவத்திலிருந்து பெறப்பட்ட பாதுகாப்பற்ற கடனின் பயனாளி (Unsecured loan) ஆவார். தற்போது அத்தொகை ரூ1.59 கோடி ஆகும்.
எரிசக்தித் துறை  மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சராக இருந்த பியுஷ் கோயல், அதே துறை சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும், பிரமல் நிறுவனத்துக்கு தன் நிறுவன பங்குகளை விற்பனை செய்கிறார்.   அந்த நிறுவனம் ஏற்கனவே நிதி நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.   அப்படியொரு நிதி நெருக்கடியில் அந்நிறுவனம், எதற்காக, 10 ரூபாய் மதிப்புள்ள பியுஷ் கோயலின் பங்குகளை, 9990 ரூபாய் கூடுதலாக செலுத்தி, 50,070 பங்குகளை எதற்காக வாங்க வேண்டும் என்பதுதான் கேள்வி.  அந்த பரிவர்த்தனையை வயர் கட்டுரை வெளியாகும் வரை, பியுஷ் கோயல் வெளியே சொல்ல வில்லை என்றுதான் கேள்வி.
நன்றி தி வயர் இணைய இதழ்

கருத்துகள் இல்லை: