வெள்ளி, 2 செப்டம்பர், 2016

மனிதாபிமானம் வேண்டும்! கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை!

வறட்சிக் காலத்தில் தமிழகத்துக்கு திறந்துவிட்ட தண்ணீரின் அளவுபற்றி கர்நாடக அரசு, நீதிமன்றத்தில் முழு அறிக்கையை வரும் திங்கட்கிழமைக்குள் தாக்கல்செய்ய வேண்டும் என்று, கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. மேலும் மனிதாபிமான அடிப்படையில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
காவிரி நதி நீர் ஆணையம் கூடுவதற்கு இன்னும் 12 நாட்கள் இருப்பதால் தற்போது பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிரைக் காப்பாற்றுவதற்காக கர்நாடக அரசு தினமும் 2 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவை தமிழக அரசு தாக்கல் செய்தது.
இந்தநிலையில், காவிரி நதி நீர் ஆணையத்தைக் கூட்ட வலியுறுத்தி, தமிழக அரசு தாக்கல் செய்த மனுமீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி டி.கே.ஜெயின் மற்றும் மதன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் 19ஆம் தேதி கூட்டுவதுபற்றி தெரிவிக்கப்பட்டது. இந்த விசாரணையின்போது, காவிரி நதி நீர் ஆணைய கூட்டத்துக்கு இடைப்பட்ட காலத்தில் சம்பா பயிரை காப்பாற்றுவதற்காக தினமும் கர்நாடக அரசு 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற தமிழக அரசின் மனுமீதான விசாரணையும் நேற்று நடந்தது. இதில், தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி வாதிட்டார். அவர், தனது வாதத்தின்போது ‘கர்நாடக அரசு தமிழகத்துக்கு வறட்சிக் காலத்தில் தண்ணீர் திறந்துவிட மறுத்துவருகிறது. இதனால் வழக்கமாக ஆண்டுதோறும் சம்பா மற்றும் குறுவை சாகுபடி பயிருக்காக மேட்டூர் அணை ஜுன் மாதம் 12ஆம் தேதி திறக்கப்படும். ஆனால் தண்ணீர் இல்லாததால் அணை திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் காவிரி டெல்டா பகுதியில் உள்ள 9 மாவட்டங்களில் பயிரிடப்படும் சம்பாவை அடுத்து, குறுவை சாகுபடியும் தாமதமாகி வருகிறது. இந்த நிலையில், பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணைய கூட்டம் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த இடைப்பட்ட காலமான 12 நாட்களும் சம்பா பயிரைக் காப்பாற்ற தினமும் 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும்’ இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கர்நாடக சார்பில் மூத்த வழக்கறிஞர் அனில்குமார் வாதாடும்போது, ‘தமிழகத்துக்கு தற்போது 6 டி.எம்.சி. தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது. கர்நாடகத்தில் தற்போது 9 மாவட்டங் களில் 42 வட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழகத்துக்கு ஒரு டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட்டால் கர்நாடகத்தில் பயிரிடப்பட்டுள்ள 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் பாதிக்கப்படும். எனவே, தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட முடியாது’ என்று கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘கர்நாடகத்தில் உள்ள பில்லிக்குண்டில் இருந்து தமிழகத்துக்கு வறட்சிக் காலத்தில் இதுவரை திறந்துவிடப்பட்ட தண்ணீர் அளவுபற்றி முழுமையான அறிக்கையை வரும் திங்கட்கிழமைக்குள் கர்நாடக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், ‘தற்போது மனிதாபிமான அடிப்படையில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடலாம்’ என்றும் அறிவுறுத்தியுள்ளது.  மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை: