சனி, 3 செப்டம்பர், 2016

பெண்களை சீரழித்து 100 கோடி சம்பாதித்த தம்பதி! டெல்லி அதிர்ச்சி

vikatan.com :தலைநகர் புதுடெல்லியில் புகழ்பெற்ற இடங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், டெல்லியைப் பற்றித் தெரிந்த அனைவரும் கேள்விப்பட்டுள்ள ஒரு பெயர் ‘ஜி.பி.ரோடு’. பாலியல் தொழிலுக்குப் பெயர்போன இடம் அது. இங்கு, சுமார் 1,000 பெண்கள் இந்தத் தொழில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். முகலாய ஆட்சிக்காலத்தில் பணக்காரர்களுக்கு அந்தப்புரமாக இருந்த ஜி.பி.ரோடு, பிரிட்டிஷ் ஆட்சியின்போது முறையாக்கப்பட்டு, தற்போது ‘கோத்தா’ என்று அழைக்கப்படுகிறது. இந்த கோத்தா கட்டடங்கள், பகல் நேரத்தில் சாதாரண மார்க்கெட்போல் காட்சியளிக்கும். மாலை நேரத்திலிருந்து விபசாரப் பகுதியாக மாறிவிடும்.
டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் நேற்று நடத்திய அதிரடிச் சோதனையில் இங்கு எட்டு பேர் கைதுசெய்யப்பட்டனர். அதில், ஹுசைன் என்பவரும் அவரது மனைவி சாயிரா பேகமும் அடக்கம். இவர்கள் இருவரும்தான் இந்தத் தொழிலைக் கடந்த 20 வருடங்களாக நடத்திவருகின்றனர்.
டெல்லி ஜி.பி.ரோடு பகுதியில் நடக்கும் பாலியல் தொழிலில் இவர்களுடைய நெட்ஒர்க்தான் மிகவும் பெரிது. இங்கு, இவர்களுக்கு ஆறு ‘கோத்தா’ சொந்தமானதாக இருக்கிறது. அதில், இவர்கள் ஒவ்வொரு கோத்தாவுக்கும் ஒரு நபரைவைத்து தொழில் நடத்திவந்தனர். அவர்களுக்கு வரும் லாபத்தில் 15 சதவிகித கமிஷன் கொடுத்து வந்தனர். அந்த ஆறு பேரும் போலீஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டனர்.
இவர்கள் மூலம் சுமார் 5,000 பெண்கள் இந்தத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட சாயிரா பேகம் தனது முதல் கணவரால் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டார். அவர், சில வருடங்களில் இறந்துபோக... அதில் ஈடுபட்டு வந்த ஹுசைனுடன் பழக்கம் ஏற்பட்டு அவர்கள் கல்யாணம் செய்துகொண்டு இந்தத் தொழிலை ஒன்றாக நடத்திவந்தனர். இதன்மூலம் இவர்கள் சுமார் 100 கோடி ரூபாய் சம்பாதித்து உள்ளனர். மேலும், டெல்லி மற்றும் பெங்களூருவில் சொகுசு வீடு மற்றும் கார்களுடன் நவீன வாழ்க்கையை நடத்திவந்துள்ளனர். இவர்கள் நேபாள், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் பல மாநிலங்களில் இருந்தும்  பெண்களை அழைத்துவந்து இந்தத் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர். அவர்களை மிகவும் சிறிய அறைகளில் போதிய உணவளிக்காமல் அடைத்து, போதைப் பழக்கங்களுக்கு அடிமையாக்கிக் கொடுமைப்படுத்தி உள்ளனர்.
சில வருடங்களுக்கு முன்பு விபசாரம் செய்த குற்றத்துக்காகச் சிறைத்தண்டனை பெற்ற சாயிரா மற்றும் ஹுசைன் சிறிது காலத்திலேயே வெளியில் வந்து மீண்டும் இதில் ஈடுபட்டனர். ஆனால், இந்த முறை போலீஸார் குற்ற தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- க.ராஜவேலு

கருத்துகள் இல்லை: