புதன், 31 ஆகஸ்ட், 2016

100வது நாள் இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆட்சி பாலன்ஸ் சீட் !


minnambalam.com : 2016ஆம் ஆண்டு, மே 23ஆம் தேதி மாலை 12 மணி, சென்னை நூற்றாண்டு விழா அரங்கில், தமிழக முதல்வராக 6வது முறையாக ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார்.அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இரண்டாவது முறையாக அதிமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் 100வது நாளில் அடியெடுத்துவைக்கிறது.
இதற்காக தலைமைச் செயலகத்தில், வண்ண அலங்கார விளக்குகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சட்டப்பேரவை வாயிலில் குலைதள்ளும் வாழை மரங்கள், வண்ணவண்ணமலர்கள் என்று தலைமைச் செயலகம் முழுவதும் கண்கொள்ளா காட்சியளிக்கிறது. இன்று பேரவைக் கூட்டத்துக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சபாநாயகர் தனபால்,தலைமைச் செயலாளர் மற்றும் அமைச்சர்கள் என அனைவரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அம்மா அவர்களின் 100 நாள் நல்லாட்சி... அம்மா அவர்களின் சாதனைகளே அதற்கு சாட்சி... என்ற வாசகத்துடன் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் 100 நாள் சாதனை கொண்டாடப்படுகிறது. நிலையான ஆட்சி, நிரந்தர ஆட்சி என்று 100 நாள் சாதனைகளென தலைப்பிட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலப்பத்திரிகைகள் அனைத்திலும், முழுப்பக்க விளம்பரம் செய்தி மக்கள் தொடர்புத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
100வது நாள் சாதனை கொண்டாடும்வேளையில், அதிக ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் என்ற டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் சாதனையை, தமிழகமுதல்வர் ஜெயலலிதா முறியடித்துவிட்டார் என்ற கொண்டாட்டமும் சேர்ந்துள்ளது.
சாதனைகள்
அதிமுக அரசின் 100 நாள் சாதனைகள் என்ற பட்டியலை அரசே வெளியிட்டுள்ளது.
சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளுக்குச் செலுத்தவேண்டிய பயிர்க்கடன், நடுத்தர மற்றும் நீண்டகாலக் கடன் முற்றிலும் தள்ளுபடி.
அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டம்.
கைத்தறி தொழிலாளர்களுக்கு கட்டணமில்லா மின்சாரம் 200 யூனிட்டாக உயர்வு.
விசைத் தொழிலாளர்களுக்கு கட்டணமில்லா மின்சாரம் 750 யூனிட்டாக உயர்வு.
தாலிக்கு தங்கம் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் தங்கம் 4 கிராமிலிருந்து 8 கிராமாக உயர்வு.
டாஸ்மார்க் கடைகளின் நேரம் குறைப்பு மற்றும் 500 கடைகள் மூடப்பட்டுள்ளது.
மின் பற்றாக்குறை மாநிலமாக இருந்த தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றி சாதனை.
தமிழ்நாட்டுக்கு 563 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்வகையில், கூடங்குளம் அணுமின் நிலைய முதல் அலகு நாட்டுக்கு அர்ப்பணிப்பு.
டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் மற்றும் சம்பா சாகுபடித் திட்டம்.
சென்னை மெட்ரோ ரயில் திட்ட வழித்தடம், வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர், விம்கோ நகர் வரை விரிவாக்கம்.
அம்மா திட்ட முகாம் மூலம் ஒரு லட்சத்து 99 ஆயிரம் மனுக்களுக்கு உடனடித் தீர்வு.
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதிக்கு நிதி ஒதுக்கீடு.
17 அமைப்புசாரா நல வாரியங்களில் பதிவுசெய்த பயனாளிகளுக்கு ரூ.40 கோடியில் நலத்திட்ட உதவிகள்
பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டைகள்.
விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு ஓய்வூதியம் உயர்வு.
மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிக்கு வழங்க நிதி ஒதுக்கீடு.
விலையில்லா ஆடு, மாடுகள் வழங்க நிதி ஒதுக்கீடு.
இணையவழி சேவைகளை குடிமக்கள் பெறுவதற்கு தமிழக காவல்துறையின் கைப்பேசி செயலி.
சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களின்கீழ் 47 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் என 25 பட்டியல்களை தமிழக அரசு வெளியிட்டு, அதிமுக அரசு 100 நாள் சாதனைகளைபட்டியலிட்டு கொண்டாடி வருகிறது.
வேதனைகள்
எந்த நாட்டில் மக்கள் அச்சமின்றி, நிம்மதியாக உறங்க முடிகிறதோ அதுதான் மிகவும் நல்ல நாடு. இந்த வரையறையை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், தமிழகம்எந்தவகையான மாநிலம் என்பதை யாரும் புரிந்துகொள்ள முடியும்.. நாளொரு கொலை, பொழுதொரு கொள்ளை என குற்றங்கள்தான் தமிழகத்தின் அடையாளங்களாகஇருக்கிறது என்று திமுக, பாமக மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
மென் பொறியாளர் சுவாதி, கடந்த ஜுன் 24ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாகசெங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை நந்தினி, ஜூலை 4ஆம் தேதி இரவில், வங்கி ஏ.டி.எம்.மிலிருந்து பணம் எடுத்துவிட்டு வீடு திரும்பியபோது,செயின்பறிப்பு கொள்ளையனால் சுவற்றில் மோதி பலியானார்.
ஜூலை 16ஆம் தேதி தேனி மாவட்டம், கடமலைக்குண்டு பழங்குடியினப் பெண்களை, வனத்துறையினர் சோதனை என்றபெயரில் பாலியல் தொந்தரவு செய்து, அவர்களின்குடும்பத்தினரை ஜெயிலில் அடைத்த கொடூரம்.
சேலத்திலிருந்து கடந்த 8ஆம் தேதி இரவு சென்னை வந்த சேலம் விரைவுத் தொடர்வண்டியில் ரூ.343 கோடி பணம் எடுத்து வரப்பட்ட பெட்டியின் மேற்கூரை துளையிடப்பட்டு,ரூ.5.75 கோடி கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இதுவரை இப்படி ஒரு துணிகரக் கொள்ளை நடந்ததே இல்லை.
சேலம் பரபரப்பு அடங்குவதற்குள்ளாக, சென்னை சைதாப்பேட்டை நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள சென்னை முதலாவது சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஜா சுப்பிரமணியம்வீட்டின் பூட்டை உடைத்து 400 பவுன் தங்க நகைகள் உட்பட ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிப்பு.
கடலூர் மாவட்டம், நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள நகைக் கடையில், சுரங்கப்பாதை அமைத்து ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள்கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
'என்னை அடித்தார்கள். பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யச் சொல்கிறார்கள்' என்று அதிமுக தலைமைமீது அதே கட்சியைச்சேர்ந்த எம்.பி. சசிகலா புஷ்பா மாநிலங்களவையில் பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்தார்.
சிறுவாணி ஆற்றில், கேரள அரசு அணை கட்ட முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு மாவட்ட விவசாயிகளின்தொடர் போராட்டம்.
டெல்டா மாவட்டங்களில் உள்ள 15 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களைப் பாதுகாக்க, காவிரியில் தண்ணீர் திறந்துவிட மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம். தமிழகம் முழுவதும் நடைபெற்ற சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஆயிரக்கணக்கில்விவசாயிகள் பங்கேற்பு.
கரூரில் தனியார் பொறியியல் கல்லூரிக்குள்ளேயே மாணவி அடித்துக் கொலை. கன்னியாகுமரி மாவட்டத்தில், தேவாலயத்துக்குள் பள்ளி ஆசிரியை வெட்டிக் கொலை என,தமிழகத்தில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது.

கருத்துகள் இல்லை: