திங்கள், 29 ஆகஸ்ட், 2016

திருமாவளவனை குறிவைத்து கடித தாக்குதல் தொடுக்கும் ராமதாஸ்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டத்தை
இன்று கூட்டியிருக்கிறார் திருமாவளவன். ' மீண்டும் சாதி ஆயுதத்தைக் கையில் ஏந்தவே என் மீது அவதூறு செய்கிறார் ராமதாஸ்' என நிர்வாகிகளிடம்
ஆதங்கப்பட்டிருக்கிறார் அவர். 
தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட அரசியல் கட்சித் தலைவர்களுக்கு, கடந்த வாரம் ஒரு கடிதம் எழுதியிருந்தார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். அந்தக் கடிதத்தில், ' சாதி ஒழிப்பு, புரட்சி என்ற போர்வையில் பிற சாதிப் பெண்களை காதலிக்கும்படி  தமது சமுதாய இளைஞர்களை தூண்டி விடுவதை முழுநேரத் தொழிலாக சில தலைவர்கள் வைத்திருக்கின்றனர். இளைஞர்களைத் தூண்டிவிடும் வகையில் இவர்கள் பேசிய பேச்சுக்கள் பொது அரங்கில் ஏற்கனவே வெளியாகியுள்ளன. இப்போது பிறசாதிப் பெண்களை காதலில் வீழ்த்துவது தங்களின் குலப்பெருமை என்பதைப்போல பேசி, அச்செயலை நியாயப்படுத்தியிருக்கிறார் ஒரு தலைவர்.

அவர் பேசிய மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளை இந்த கடிதத்தில் மறுபதிப்பு செய்வதே பாவச்செயல்தான். ஆனாலும்,  அந்த வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் கயமையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக அவரது உரையின் ஒரு பகுதியை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்' என விவரித்துவிட்டு, 
அந்த தலைவர் பேசியதாகச் சொல்லப்படும் வார்த்தைகளைப் பதிவு செய்துவிட்டு, ' இது இளைஞர்களை நல்வழிப்படுத்தும் உரையா? இவை பெண் இனத்தை இழிவுபடுத்தும் வார்த்தைகள் அல்லவா? இதைவிட மோசமான வார்த்தைகளை எந்த தலைவராவது பேச முடியுமா?  கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இந்த உரை அடங்கிய வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், பெண்ணுரிமை பேசும் பெரியார் வழி வந்த தலைவர்களோ, பொதுவுடமை பேசும் தலைவர்களோ, பெண்ணியவாதிகளோ இதைக் கண்டிக்க முன்வராதது மிகவும் வருத்தமளிக்கிறது' என ஆதங்கப்பட்டிருந்தார் ராமதாஸ். 
திருமாவளவனை மையப்படுத்தியே ராமதாஸின் கடிதம் அமைந்ததைக் கண்டு கொதித்துப் போயுள்ளனர் வி.சி.கவினர். இதுகுறித்து கட்சி நிர்வாகிகளிடம் பேசிய திருமாவளவன், "மிக அற்பமான அரசியல் நடத்துகிறார் ராமதாஸ். சாதியை முன்னிறுத்தி மக்களைப் பிளவுபடுத்துவது யார் என்பதை மக்கள் அறிவார்கள். கோகுல்ராஜ் கொலை தொடர்பாக, நான் பேசிய வார்த்தைகளில் சிலவற்றைக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த மேடையில் சாதியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, கொலைவெறியைத் தூண்டிவிடுபவர்களுக்கு எதிராக நான் பேசிய வார்த்தைகள் அவை. ஏதோ நான் பல மாதங்களாகப் பேசி வருவதைப் போன்ற ஒரு தொனியை ஏற்படுத்துகிறார் ராமதாஸ். சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு போன்றவற்றை முன்னிலைப்படுத்தியே கட்சி நடத்தி வருகிறோம். எத்தனையோ தலித் கட்சிகள் தோன்றி  மறைந்துவிட்டாலும், களத்தில் நாம் இன்னமும் நீடித்திருக்கிறோம். என்னைப் போலவே, தலித் மக்களுக்காக கட்சி நடத்தும் தலைவர்கள் பலர் இருந்தாலும், என்னை ராமதாஸ் குறிவைக்க ஒரே காரணம்தான் உள்ளது. 
என்னை வலுவாக எதிர்ப்பது போன்ற தோற்றத்தைக் காட்டினால்தான், வடபுலத்தில் சாதி அரசியலைத் தீவிரப்படுத்த முடியும் என ராமதாஸ் நினைக்கிறார். தர்மபுரி கலவரத்தைத் தூண்டிவிட்டபோது, நான் பேசாத ஒன்றைப் பேசியதாக மக்கள் மத்தியில் அவதூறு பரப்பினார். நான் அப்படிப் பேசியதாக எந்த ஆதாரத்தையும் அவரால் வெளியிட முடியவில்லை. அரசியல் கட்சிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில்கூட, ஆதம்பாக்கத்தில் ஆசிட் வீச்சால் உயிரிழந்த வித்யா என்ற பெண்ணைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இந்தப் பெண் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அப்படியானால், அனைத்து சமூகங்களிலும் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்து நடக்கிறது என்பதை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.  என் மீதான எதிர்ப்பைக் கூர்மைப்படுத்தி, சாதி அரசியலை வலுவாக்குவதற்குத் திட்டமிடுகிறார் ராமதாஸ். இதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. எந்தக் கொள்கைக்காக நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை மக்கள் அறிவார்கள்" என கொந்தளிப்போடு பேசியிருக்கிறார் திருமாவளவன்ஆ.விஜயானந்த் விகடன்.com

கருத்துகள் இல்லை: