வெள்ளி, 4 ஜூலை, 2014

டெல்லி–ஆக்ரா அதிவேக புல்லெட் ரெயில் சோதனை ஓட்டம் ! Delhi Agra semi high speed bullet train flags off !


பாராளுமன்றத்தில் 8–ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள ரெயில்வே பட்ஜெட்டில் அதிவேக ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்னோட்டமாக டெல்லி–ஆக்ரா இடையே அதிவேக ‘செமி புல்லட்’ ரெயில் சோதனை நேற்று நடந்தது.
இதற்காக 5,400 குதிரை சக்தி திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்ட ரெயில் 10 பெட்டிகளுடன் புறப்பட்டது. இதில் 2 ஜெனரேட்டர்களும் பொருத்தப்பட்டு இருந்தது.
இந்த ரெயில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்தது. டெல்லி ரெயில் நிலையத்தில் காலை 11.15 மணிக்கு புறப்பட்ட ரெயில் 200 கி.மீ தொலைவில் உள்ள ஆக்ராவை 90 நிமிடங்களில் சென்றடைந்தது.
வழக்கமாக மற்ற சூப்பர் பாஸ்ட் ரெயில்கள் 2 மணி நேரத்தில் செல்கின்றன. இந்த செமி புல்லட் ரெயில் 1½ மணி நேரத்தில் ஆக்ரா செல்கிறது. இதன் மூலம் பயண நேரம் 30 நிமிடம் குறைகிறது.

டெல்லி–ஆக்ரா இடையே 16 இடங்களில் வேக கட்டுப்பாடு பகுதிகள் மற்றும் வளைவுகள் உள்ளன. ‘செமி புல்லட்’ ரெயிலுக்காக இந்த பகுதிகளில் தண்டவாளங்கள் மேம்படுத்தப்பட்டன. 27 இடங்களில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டன.
இந்த ரெயில் சென்ற போது அனைத்து ரெயில்வே லெவல் கிராசிங்குகளிலும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த வழித்தடத்தில் இதே வேகத்தில் வருகிற நவம்பர் மாதம் முதல் செமி புல்லட் ரெயில் விடப்படுகிறது. இதே போல் டெல்லி–கான்பூர், டெல்லி–சண்டிகர் இடையேயும் அதிவேக ‘செமி புல்லட்’ ரெயில் விடப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் ஏற்கனவே அதிவேக ரெயில்கள் சென்று வருகின்றன. இனி அவை செமி புல்லட் ரெயில்களாக மாற்றப்படும்.
தற்போது டெல்லியில் இருந்து மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலுக்கு இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் 150 கி.மீ. வேகத்தில் செல்கிறது. இது தான் நாட்டிலேயே அதிவேக ரெயிலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: