டி.எல்.சஞ்சீவிகுமார் : சமீப காலமாக ஆசிய சிங்கங் களைப் பற்றி வரும் தகவல்கள் கவலை அளிப்பதாக
உள்ளன. சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே சிங்கங்கள் இருக்கும் கிர் காடு களில்,
கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 250 சிங்கங்கள் இறந்து விட்டதாகக்
கூறப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த நிலை யில்தான் நவீன
தொழில்நுட்பத்தின் மூலம் கிர் காடுகளில் உள்ள சிங்கங்களை பாதுகாக்க களம்
இறங்கியிருக்கிறார் இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சியாளரான
மீனா வெங்கட். அவர் ‘தி இந்து’வுக்காக அளித்த சிறப்புப் பேட்டி:
தற்போது கிர் காடுகளில் எத்தனை சிங்கங்கள் உள்ளன?
உலகிலேயே ஆசிய சிங்கங்கள் 411 மட்டுமே இருக்கின்றன. அவை இருப்பது கிர்
காடுகளில் மட்டுமே. சிங்கங்களில் ஆப்பிரிக்க சிங்கங் கள், ஆசிய சிங்கங்கள்
என இரு வகை உண்டு. நம்மிடம் இருப்பவை ஆசிய சிங்கங்கள். பல நூறு ஆண்டு
களுக்கு முன்பு இவை கிரேக்கம், சிரியா, மத்திய கிழக்கு நாடுகள் தொடங்கி வட
மற்றும் மத்திய இந்தியா வரை பரவியிருந்தன. ஆனால், மனிதனின் பேராசைக்கு அவை
இரையாகிவிட்டன. இப் போது எஞ்சியிருப்பவை இவை மட்டுமே.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 250 சிங்கங்கள் இறந்துவிட்டதாக வரும் தகவல் உண்மையா? அப்படி எனில் எப்படி இறந்தன?
உண்மைதான். ஆனால், கடந்த 2005-ம் ஆண்டின் கணக்கெடுப் பின்படி சிங்கங்களின்
எண்ணிக்கை 359. 2010-ல் அவை 411 ஆக அதிகரித்துள்ளன. எனவே, மூப்பு காரணமாக
நிறைய சிங்கங்கள் இறந்தன என்பதே உண்மை. தவிர, அறிவியல்பூர்வமாகவே சிங்கங்
களில் இனப் பெருக்க விகிதாச் சாரம் குறைவுதான். ஏனெனில், புலிகளைப் போலவே
சிங்கங் களும் தூண்டப்பட்ட சினை முறை யிலேயே (Induced ovulation) கர்ப்பம்
தரிக்கின்றன. அதாவது ஒரு பெண் சிங்கம் எத்தனை முறை உறவு கொண்டாலும் அது,
தான் நினைத் தால் மட்டுமே கர்ப்பம் தரிக்கும். அதன் அடிப்படையில்
சிங்கங்களின் பெருக்கம் என்பது சிக்கலான விஷயமே.
ஆனாலும், நான்கு சிங்கங்கள் ரயில் விபத்துக்களிலும், சாலை விபத்துக்கள்,
பண்ணை மின் வேலி தாக்குதல்களில் தலா 3 சிங்கங் களும் இறந்துள்ளன. சில
சிங்கங் கள் கிணறுகளில் விழுந்து இறந்துள்ளன. இவை பாதுகாக் கப்பட்ட
வனப்பகுதிகளில் நடக்க வில்லை. ஏனெனில் அங்கெல்லாம் மேற்கண்ட விபத்துக்கான
காரணி கள் இல்லை.
சிங்கங்கள் வேட்டையாடப்படும் நிகழ்வுகள் ஏதேனும் நடந்தது உண்டா?
ஒன்றுகூட மனிதனால் கொல்லப் படவில்லை. வனப்பகுதிக்கு வெளியே செல்லும்
சிங்கங்களை கண்காணிப்பதும், பாதுகாப்பதும் எங்களுக்கு சிரமமாக இருக்கிறது.
குறிப்பாக, கம்பீரமான சிங்கங்கள் ரயிலில் அடிப்பட்டு சிதைவதை கற்பனைகூட
செய்ய முடிய வில்லை. சமீபத்தில்தான் வனத் துறை கேட்டுக்கொண்டதால் மேற்கு
ரயில்வே இந்தப் பகுதியில் ரயில் களின் வேகத்தைக் குறைத்துள்ளது.
யானை - மனித மோதல்களைப்போல சிங்கம் - மனித மோதல்கள் நடக்கின்றனவா?
யானைகள் அளவுக்கு இல்லை. இங்கே நீண்டகாலமாக மனிதர்கள் சிங்கங்களுடன் ஓரளவு
இணக்கமாகவே வாழ்கின்றனர். சிங்கங்கள் மிக அரிதாகவே மனிதர்களைத் தாக்கும்.
அவை நம்மை பொருட்படுத்துவதே இல்லை. ஆனால், கால்நடைகள் மீதான தாக்குதல்தான்
பிரச் சினையாக இருக்கிறது. கால்நடை கள் கொல்லப்படும்போது அவற்றின்
மதிப்பில் ஒரு பகுதியை வனத்துறை நஷ்டஈடாக கொடுத்துவிடும். ஆனாலும், இதில்
கவலைக்குரிய விஷயம் என்ன வெனில், கால்நடைகள் தாக்கப் படும்போது சிங்கங்கள்
மனிதர் களின் வெறுப்புக்குரிய ஒன்றாகி விடுகின்றன. சிங்கங்களின் பாதுகாப்பு
அம்சங்களில் மனிதர் களின் நேசமே முதன்மையானது இல்லையா?
சிங்கங்களை பாதுகாக்க என்ன தொழில்நுட்பத்தை பயன்படுத்து கிறீர்கள்?
இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிலையம் மூலம் முனைவர் ஜுஹாலா ஒருங்கிணைப்பிலான
எங்கள் குழு சிங்கங்களுக்கு செயற் கைகோள் உதவியுடன் இயங்கும் ரேடியோ
காலர்களை பொருத்தி வருகிறது. இதன் மூலம் சிங்கங் களின் பல்வேறு
பழக்கவழக்கங் கள், நடமாடும் பகுதிகள், இனப் பெருக்க நடவடிக்கைகளை அறிய
முடிகிறது. சிங்கங்கள் நோய்வாய்ப் பட்டாலோ, அவற்றுக்கு அச்சுறுத் தல்
ஏற்பட்டாலோ அடுத்த சில நிமிடங்களில் எங்களுக்கு சிக்னல் வந்துவிடும்.
411 சிங்கங்கள் என்பது மிகவும் கவலைக்குரிய எண்ணிக்கை இல்லையா... வேறு ஏதேனும் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறீர்களா?
கவலை அளிக்கும் விஷயம் தான். அதுவும் உலகிலேயே ஒரே ஓர் இடமான கிர் காட்டில்
மட்டுமே ஆசிய சிங்கங்கள் இருக்கும் நிலையில் நிலநடுக்கம், வெள்ளம்,
காட்டுத் தீ என இயற்கை பேரிடர் ஏற்பட்டால் மொத்த இனமே அழிந்து விடும்.
அதனால்தான், சமீபத்தில் இங்கிருந்து சில சிங்கங்களை மத்திய பிரதேசத்தின்
குனோ வனவிலங்கு சரணாலயத்துக்கு இடப் பெயர்ச்சி செய்து அங்கு மறு உருவாக்கம்
செய்யும் திட்டத்துக் கான அனுமதியை குஜராத் வனத்துறை பெற்றுள்ளது.
விரைவில் அந்தத் திட்டம் தொடங்கப்படும். இதன் மூலம் சிங்கங்களின் இரண்டாம் தலைமுறை சாத்தியப்படும்.
சிங்கங்களுக்கு வேறு ஏதேனும் அச்சுறுத்தல்கள் உண்டா?
காட்டின் அரசன் சிங்கம் மட்டுமே. மற்ற காட்டு உயிரினங்களால் சிங்கத்துக்கு
அச்சுறுத்தல் கிடையாது. ஒரே அச்சுறுத்தல் மனிதனின் நடவடிக்கை மட்டுமே.
என்னை ஒன்றும் செய்யாது..
முனைவர் மீனா வெங்கட். சிங்கங்களின் தோழி, ஆராய்ச்சியாளர், பாதுகாவலர்.
‘உலகின் கடைசி சிங்கங்கள்’ என்கிற தலைப்பில் இவரது உதவியுடன் பி.பி.சி.
வெளியிட்ட டாக்குமெண்டரி, சிங்கங்கள் வரலாற்றில் முக்கிய இடத்தைப்
பெறுகிறது. அதில் மீனா வெங்கட் காட்டில் உள்ள சிங்கங்களின் மிக அருகில்
சென்று உரையாடுவார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஏனோ அவை என்னை ஒன்றும்
செய்யாது என்று என் உள்ளுணர்வு சொல்கிறது” என்கிறார். இதில் நமக்கும் ஒரு
பெருமை உண்டு. ஏனெனில், மீனா வெங்கட் ஒரு தமிழர்.tamil.thehindu.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக