சனி, 5 ஜூலை, 2014

கட்டடம் வெடி வைத்து தகர்க்க திட்டம்? இடிந்த கட்டிடத்திற்கு அருகிலும் இடிக்கபடவேண்டிய கட்டிமாம் ?

சென்னை மௌலிவாக்கத்தில் இடிந்து விழுந்த 11 மாடிக் கட்டடத்தின் அருகே உள்ள மற்றொரு கட்டடத்தை வெடி வைத்து தகர்க்க அரசு அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. மௌலிவாக்கத்தில் பிரைம் சிருஷ்டி நிறுவனம் 150 அடி உயரத்துக்கு 11 மாடிகளில் இரு அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி வந்தது. இதில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு கடந்த 28-ஆம் தேதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 61 பேர் கட்டட இடிபாடுகளிடையே சிக்கி இறந்தனர். காயமடைந்த 27 பேர் மீட்கப்பட்டனர்.
இடிந்து விழுந்த கட்டடத்தின் அருகே உள்ள மற்றொரு கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரண்டு நாள்களாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் அந்தக் கட்டடம் பலவீனமாக இருப்பதும், கட்டடத்தில் தூண்கள் மற்றும் இரும்புக் கம்பிகள் தடிமன் குறைவாக இருப்பதும், தரமற்ற பொருள்களால் அந்த கட்டடம் கட்டப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதனால் அந்தக் கட்டடத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அந்தக் கட்டடம் இடிந்து விழுந்தால் பாதிப்பு ஏற்படும் எனக் கருதி முன்னெச்சரிக்கையாக சுமார் 50 மீட்டர் சுற்றளவுக்கு அபாயக் குறியீடுகள் பொறித்தனர். அடுத்த நடவடிக்கையாக அந்த கட்டடத்தை இடிப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
இதில் நவீன முறையில் 11 மாடிக் கட்டடத்தையும் ஒவ்வொரு மாடியாக வெடி வைத்து இடிப்பது குறித்து கட்டுமான நிபுணர்களுடன் ஆலோசனை செய்து வருகின்றனர். ஏற்கெனவே மும்பையில் இப்படிப்பட்ட கட்டடம் எவ்வித பிரச்னையும் இன்றி வெடி வைத்து இடிக்கப்பட்டதால், இந்த கட்டடத்தை இடித்து விடலாம் என்ற எண்ணம் அதிகாரிகளிடம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் தற்போது கட்டட விபத்து குறித்து போலீஸ் மற்றும் ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் விசாரணை முடிந்த பின்னரே, அந்தக் கட்டடத்தின் வளாகத்துக்குள் செல்ல முடியும் என்பதால் அது வரை கட்டட இடிப்பு திட்டத்தை அதிகாரிகள் ஒத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: