மவுலிவாக்கம் கட்டிட விபத்து நடந்த இடத்திலிருந்து 150 அடி சுற்றளவில்
வசிப்பவர்கள் உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி பொதுப்பணித் துறை விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து
இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
சென்னை அருகே உள்ள மவுலிவாக்கத்தில் கடந்த 28-ம் தேதி 11 மாடி கட்டிடம்
இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 61 பேர் பலியாகினர். இந்த
விபத்து குறித்து பொதுப்பணித் துறை பொறியாளர்கள் குழு விரிவாக ஆய்வு
நடத்தி, அறிக்கையை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளித்துள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தபோது, அதன் பின்பக்கம் உள்ள 3 வீடுகளும் நொறுங்கியுள்ளன.
தற்போது பாதுகாப்பற்ற நிலையில் உள்ள மற்றொரு 11 மாடி கட்டிடமும் எந்த
நேரத்திலும் இடிந்துவிழும் நிலையில்தான் உள்ளது. எனவே, அந்த அடுக்குமாடி
குடியிருப்பு குடியிருக்க லாயக்கற்றது எனக்கூறி “சீல்” வைக்கப்பட்டுள்ளது.
அந்த கட்டிடத்தின் அருகே யாரும் செல்ல வேண்டாம் என்றும்
எச்சரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற அந்த கட்டிடத்தின் பின்பக்கமும்
வீடுகள் உள்ளன.
மொத்தத்தில் இடிந்து விழுந்த கட்டிடம் மற்றும் அதனருகில் உள்ள மற்றொரு 11
மாடி கட்டிடத்தைச் சுற்றி 150 அடி தூரத்தில் உள்ள வீடுகளில் இருப்பவர்கள்
உடனடியாக காலி செய்ய வேண்டும் என்றும், அந்த இடத்தை முழுமையாக ஆய்வு செய்து
பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை யாரும் அந்தப் பகுதியில் வசிக்கக்
கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தப் பகுதியில்
இருப்பவர்கள் வீட்டை காலி செய்து வருகின்றனர்.
பொதுவாக 11 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்டும்போது அதற்கான
தூண்களும், கான்கிரீட் ‘பீம்’களும் குறிப்பிட்ட அளவில் வலுவாக அமைக்கப்பட
வேண்டும். விபத்து நடந்த இடத்தில் கட்டப்பட்டிருந்த கட்டிட தூண்கள் ஒன்றரை
அடி அகலத்துக்கு இரண்டரை அடி அகலம் இருந்திருக்க வேண்டும். ஆனால், கார்
நிறுத்துமிடம் மற்றும் முதல் தளத்தில் ஒரு அடி அகலத்துக்கு ஒன்றரை அடி
அகலத்திலும், அதற்கு மேல் உள்ள தளங்களில் முக்கால் அடி அகலத்துக்கு ஒன்றரை
அடி அகலத்திலும் தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன.
அதுபோல 11 மாடி கட்டிடத்தில் அமைக்கப்படும் தூண்களுக்கு இடையே உள்ள
இடைவெளிக்கு தகுந்தாற்போல கான்கிரீட் ‘பீம்’கள் வலுவாக அமைக்கப்பட
வேண்டும். அதன்படியும் இந்த கட்டிடத்தில் “பீம்”கள் அமைக்கப்படவில்லை. 2
அடி முதல் 3 அடி வரை அகலத்தில் “பீம்”கள் அமைப்பதற்குப் பதிலாக ஒன்றரை
அடியில்தான் “பீம்”கள் அமைத்துள்ளனர்.
கட்டிட விபத்து நடந்த இடத்தில் குளம் இருந்ததாக தெரியவில்லை. போரூர்
ஏரியின் பாசன பகுதியாக இருந்திருக்கிறது. விபத்து நடந்த கட்டிடத்தின்
அடித்தளம் மிகவும் வலுவாகத்தான் இருந்தது. ஒரு மில்லி மீட்டர் அளவுகூட
கட்டிடம் தரைக்குள் இறங்கவில்லை. அடித்தளத்தில் ஒரு சிறிய விரிசல்கூட
இல்லை. எனவே, இந்த விபத்துக்கு மண்ணின் தன்மை காரணம் இல்லை என
தெரியவந்துள்ளது.
ஜல்லி, சிமெண்ட், மணல் ஆகியவை கொண்ட கான்கிரீட் கலவை சரியான அளவில்
இருந்ததா என்று மாதிரி எடுத்து ரசாயனப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தப் பரிசோதனையின் முடிவில்தான் கான்கிரீட் கலவையில் அளவுக்கு அதிகமாக
மணல் கலக்கப்பட்டதா அல்லது கலப்பட மணல் எதுவும் பயன்படுத்தப்பட்டதா? என்பது
உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிவாரணம்: அதிகாரி விளக்கம்
மவுலிவாக்கம் கட்டிட விபத்து காரணமாக மறைமுகமாக பாதிக்கப்பட்டுள்ளோருக்கான
நிவாரணம் குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: இது போன்ற பெரிய
விபத்து நடக்கும்போது மறைமுகமாகப் பாதிக்கப்படுவோருக்கும் அரசுதான்
நிவாரணம் வழங்கும். அதன்படி, மவுலிவாக்கம் கட்டிட விபத்து நடந்த இடத்தைச்
சுற்றி குறிப்பாக விபத்து நடந்த இடத்தின் பின்பக்கம் மற்றும் தெற்கு
பக்கத்தில் 150 அடி தூரத்துக்கு யாரும் வசிக்கக்கூடாது என்று தமிழக
பொதுப்பணித் துறை எச்சரித்துள்ளதால், அங்கே வசிப்பவர்கள் தற்காலிகமாக வேறு
இடத்துக்கு இடம்பெயர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு
இடம்பெயரும்போது வீட்டு வாடகை, முன்பணம் உள்ளிட்ட செலவுகள் ஏற்படும்.
எனவே இவர்களை, இந்த விபத்தில் மறைமுகமாக பாதிக்கப்பட்டவர்களாகக் கருதி
தமிழக அரசுதான் நிவாரணம் வழங்க வேண்டும். கட்டிட விபத்து நடந்த இடத்தைச்
சுற்றி எத்தனை பேர் உடனடியாக இடம்பெயர்ந்து செல்ல வேண்டியுள்ளது. அதற்கான
செலவு ஆகியவற்றை கணக்கிட்ட பிறகு நிவாரணம் பற்றி அரசு அறிவிக்கும். இவ்வாறு
அதிகாரி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக