தமிழக அரசு சட்டமான ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும்’ என்பதற்கான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணையில் உள்ள நிலையில், தமிழக அரசு இந்து அறநிலையத்துறை திருவரங்கம் கோவிலில் 4 விதமான பணி நியமனத்திற்கு இந்து பிராமணர் அய்யங்கார் மட்டும் விண்ணப்பிக்கவும் எனவும் 15-3-2013 அன்று விண்ணப்பிக்க இறுதி நாள் என பொறுப்பாகவும் விளம்பரம் கொடுத்திருந்தது.
படம் : பி.பி.சி.
பிப்ரவரி – 13 ஆம் தேதியிட்டு, சிறீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் வேலை வாய்ப்பு அறிவிப்பு என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கீழ்குறிப்பிடப்பட்டுள்ள காலி பணியிடங்களுக்கு இந்து மதத்தைச் சேர்ந்த, தகுதியான வர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்து இந்து சமய அறநிலைய சட்ட விதிகளுக்கு உட்பட்டு 15.03.2013 மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு கீழே காலி பணியிடங்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டிருந்தன, அதாவது
1. பதவி பெயர் – இளநிலை உதவியாளர்
ஊதிய விகிதம் – ரூ. 5,200 – 15,900+ தர ஊதியம் – ரூ. 2,400
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 3
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு மற்றும் கணினி – தட்டச்சுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண் – பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்.
2. பதவி பெயர் – பிரதான ஆலயக் காவலர்
ஊதிய விகிதம் – ரூ. 4,000 – 10,000+ தர ஊதியம் – ரூ. 1,400,
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 10
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
3. பதவி பெயர் – பிரதான ஆலய சிறீபாதம்
(சிலையைத் தூக்குகிறவர்)
ஊதிய விகிதம் – ரூ. 4,100 – 10,000+ தர ஊதியம் – ரூ. 1,400,
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 4
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: இந்து பிராமணர் அய்யங்கார் வகுப்பைச் சேர்ந்தவர் மட்டும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. பதவி பெயர் – உபகோயில் சிறீபாதம்
(சுற்றுப் பிரகார சிலையை தூக்குகிறவர்)
ஊதிய விகிதம் – ரூ. 2,800 – 8,400+ தர ஊதியம் – ரூ. 1,200,
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 2
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: இந்து பிராமணர் அய்யங்கார் வகுப்பைச் சேர்ந்தவர் மட்டும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. பதவி பெயர் – உபகோயில் காவலர்
(சுற்றுப் பிரகார கோயில் காவலர்)
ஊதிய விகிதம் – ரூ. 2,800 – 8,400+ தர ஊதியம் – ரூ. 1,200,
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 7
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்டும் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
6. பதவி பெயர் – சன்னதி வாசல்
(சுற்றுப் பிரகார கோயிலின் அர்ச்சகர்)
ஊதிய விகிதம் – ரூ. 4,100 – 10,000+ தர ஊதியம் – ரூ. 1,400,
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 2
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவர்கள் இந்து பிராமணர் அய்யங்கார் வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
7. பதவி பெயர் – உபகோயில் பரிசாரகர்
(உதவி வேலைகள்)
ஊதிய விகிதம் – ரூ. 2,800 – 8,400+ தர ஊதியம் – ரூ. 1,200
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 1
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவர்கள் இந்து பிராமணர் அய்யங்கார் வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட ஏழு வகையான பணியிடங்களுக்கும் இணை ஆணையரிடம் – செயல் அலுவலர் எஸ்.கல்யாணி அவர்களின் பெயரிலும், இரா.சேஷாயி (தலைவர்) எஸ்.பி.ரங்காச்சாரி, கே.என்.சீனிவாசன், ஏ.டி.கஸ்தூரி, பராசர.ஆர். சிறீவெங்கட பட்டர் (சுழல் முறை அறங்காவலர்) ஆகிய அறங்காவல் குழுவினர் பெயரிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறநிலையத்துறை வெளியிட்ட விளம்பரங்களும் விண்ணப்ப படிவமும் (படங்களை பெரிதாக பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்)
ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தின் விளம்பரத்திற்கு எதிராக அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் அரங்கநாதன் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் தடை கோரி வழக்கு தாக்கல் செய்யபட்டது.
அவரது மனுவில், “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு, மாணவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சியும் அளிக்கப்பட்டது. ஆனால், இந்து கோயில்களின் கருவறைக்குள் பிராமணர்கள் தவிர மற்ற ஜாதியினர் நுழைந்தால் தீட்டாகிவிடும் என்று கூறி, தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிராக சிவாச்சாரியார்களுக்கான அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கிவிட்டார்கள்”, என்று தெரிவித்திருந்தார்.
“ஆனால் தற்போது ஸ்ரீரங்கம் கோயிலில் அறிவிக்கப்பட்டுள்ள ஏழு வகையான பணியிடங்கள் எவையும் கோவிலின் கருவறைக்குள் செல்லும் பணிகள் அல்ல. கருவறைக்கு வெளியே செய்கிற பணிகளுக்குக்கூட பிராமண ஐயங்கார் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று அரசின் விளம்பரத்தில் கூறப்பட்டிருப்பது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. பொதுப் பணித்துறை, வருவாய்த் துறைபோல இந்து அறநிலையத் துறையும் தமிழக அரசின் மற்றும் ஒரு துறைதான். இந்த வேலைகளுக்கு இந்துக்கள் விண்ணப்பிக்கலாம் என்று சொல்லலாமே தவிர, இந்து ஐயங்கார்கள்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறுவது தவறு. எனவே கோயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும்’’ என்று ரெங்கநாதனின் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஹரிபரந்தாமன், ஸ்ரீரங்கம் கோயில் அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி கோயில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம்
இதுபற்றி வழக்கறிஞர் ராஜூவிடம் கேட்ட போது, இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு அரசியல் சட்டத் தின் சரத்து 16-க்கு விரோதமானது. வேலைக்காக ஜாதிப் பாகுபாடுகள் காட்டக்கூடாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆகவே இதற்கு இடைக்காலத் தடை பெற்றிருக்கிறோம் என்று கூறினார். இவர் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிற அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் – வழக்கிலும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாண வர்கள் சார்பிலும் வாதாடி வருவது குறிப்பிடத்தக்கது.
இதைப்பற்றி தமிழ் அர்ச்சகர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.இராஜவிண்ணரசு தெரிவித்த கருத்துக்கள் :
இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது
சிறீரங்கம் கோயிலில் காலி பணியிடத்திற்கான தேர்வு என்பது, இந்திய அரசியலமைப்புக்கும், இந்து அறநிலையத்துறை சட்டத்திற்கும் விரோதமாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல், இந்த அறிவிப்பை வெளியிட்ட அறங்காவலர் குழுவே, இட ஒதுக்கீடு சட்டத்திற்கு விரோதமாக உள்ளது. அதாவது அறங் காவல் துறை சட்டப்படி இந்தக் குழுவில் ஒரு தாழ்த்தப் பட்டவர், ஒரு பெண் இருக்க வேண்டும். ஏ.டி.கஸ்தூரி என்பவர் இருக்கிறார். ஆனால் தாழ்த்தப் பட்டவர் இல்லை. முழுக்க முழுக்க இந்த அறங்காவல் குழுவினரின் தலைவர் இரா.சேஷாயிலிருந்து ஏ.டி.கஸ்தூரி உட்பட அனைவரும் பார்ப்பனர்களாக இருக்கிறார்கள். இதுவே இடஒதுக்கீட் டுக்கு எதிராக இருக்கிறது.
அவாளுக்கே உரிய தந்திரம்
பணியிடங் களுக்கான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள, சன்னதி வாசல் – என்ற வார்த்தை அர்ச்சகர் – என்ற வார்த்தைக்கு பதிலாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது, இளநிலை உதவியாளர், பிரதான ஆலயக் காவலர், பிரதான ஆலய சிறீபாதம் (சிலையைத் தூக்குகிறவர்), உபகோயில் சிறீபாதம் (சுற்றுப்பிரகார சிலையைத் தூக்குகிறவர்), உபகோயில் காவலர், உபகோயில் பரிசாரகர் (உதவிப் பணியாளர்) என்றெல்லாம் பணிகளின் பெயரைக் குறிப்பிட்டுவிட்டு, சுற்றுப்பிரகார கோயிலின் அர்ச்சகர் பணிக்கு மட்டும், அர்ச்சகர் – என்ற வார்த்தையை நேரிடையாக பயன்படுத்தாமல், சன்னதி வாசல் என்று பயன்படுத்தி இருக்கிறார்கள். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இப்படிப்பட்ட தந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
நிரந்தரத் தீர்வு என்ன?
இடைக் காலத் தடை பெற்றிருப்பது மட்டும் தீர்வாகாது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் வெற்றி பெறுவது தான் இதற்கு நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். அதற்குத் தடையாய் இருப்பது, இந்த வழக்கின் எதிர்மனுதாரராக வழக்காடி வரும் வழக்கறிஞர் பராசரன், அவர் ஒரு பார்ப்பனர். தொடக்க காலம் முதலே இந்த வழக்கில் வாதாடி வருகிறார். எங்கள் தரப்பில் இதுபோன்ற நிலையான வழக்கறிஞர் இல்லை. இதுவே இந்த வழக்கு வெற்றி பெறுவதற்கு பெருந்தடையாக இருக்கிறது.
இதற்காகவே காலமெல்லாம் பாடுபட்டுவரும் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் இந்த கொள்கையில் ஒத்த கருத்துள்ள முற்போக்கு அமைப்புகள் இணைந்து ஒரு நிரந்தரமான வழக்கறிஞர் குழுவை நியமிக்க வேண்டும் என்பதை என்னுடைய கோரிக்கையாக வைக்க விரும்புகிறேன் என்று இராஜவிண்ணரசு கேட்டுக் கொண்டார்.
தகவல் : மனித உரிமை பாதுகாப்பு மையம்.
பி.பி.சி. செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக