வியாழன், 28 மார்ச், 2013

இந்தியாவுக்கு இலங்கையின் ஆயத்த ஆடைகள்

அமைச்சர் ஆனந்த் சர்மா இந்தியாவுக்கு இலங்கையின் ஆயத்த ஆடைகள்
மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஏற்றுமதி செய்வதற்கான பரந்துபட்ட சந்தை வாய்ப்பை இந்தியா அதிகரித்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, 50 லட்சம் பருத்தி ஆடைகள் வரை இந்தியாவுக்கு தீர்வையின்றி இறக்குமதி செய்யலாம் என்ற கட்டுப்பாட்டை இந்தியா தற்போது 80 லட்சம் பருத்தி ஆடைகள் வரை அதிகரித்துள்ளதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இலங்கைக்கு கடந்த ஆண்டு இந்திய வர்த்தக, தொழில் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஆனந்த சர்மா அவர்கள் சென்ற போது, இந்த ஆடை ஏற்றுமதியில் இருக்கும் கட்டுப்பாட்டை விலத்துமாறு இலங்கை அரசாங்கத்தால் கேட்கப்பட்டதாகவும், அதற்கிணங்கவே 80 லட்சம் பருத்தி ஆடைகள் வரை தீர்வையற்ற வகையில் ஏற்றுமதி செய்ய இலங்கைக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது
இதற்கான அறிவித்தல் முறைப்படி, இலங்கை வணிகத் திணைக்களத்தின் தலைமை இயக்குனரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியத் தூதரகம் கூறியுள்ளது. அத்துடன் தெற்காசிய சுதந்திர வணிக உடன்படிக்கையின் அடிப்படையிலால் துணிவகைகளுக்கான தீர்வை கூட இந்தியாவினால் இலங்கை இறக்குமதிகளுக்கு 11 வீதத்தில் இருந்து 5 வீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ''சுகாதார தரத்தை உறுதி செய்யும் இறக்குமதிக்கான அனுமதிப் பத்திரத்தின்'' காலத்தை இந்தியா 6 மாதங்களில் இருந்து ஒரு வருடமாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இலங்கை ஏற்றுமதிகளுக்கு ஒரு பரந்து பட்ட சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த சலுகைகளை செய்துள்ளதாகவும் இலங்கைக்கான இந்தியத் தூதரகம் கூறியுள்ளது.
இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழகத்தில் இருந்து ஆளும் அதிமுக உட்பட பல தரப்பினரும் கோரிவரும் நிலையில் இந்திய தூதரகத்தின் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.

bbc.com

கருத்துகள் இல்லை: