சனி, 16 மார்ச், 2013

சேலத்தில் ஒரு கவிதை திருவிழா


சேலத்தில் திருவிழா நடக்கிறது. கவிதைக்கான திருவிழா. கிட்டத்தட்ட நாற்பது கவிஞர்கள் கலந்து கொள்கிறார்கள். ஒரு கவிஞனிடம் சிக்கினாலே சிதைச்சு சின்னாபின்னமாக்கிவிடுவான், இதில் நாற்பது பேர் கலந்து கொள்ளும் கூட்டமா என்று ஜெர்க் ஆக வேண்டாம். உங்கள் கழுத்துக்கு நான் கியாரண்டி
சமீபத்தில் வெளிவந்த பதினெட்டு கவிதைத் தொகுப்புகள் மீதான உரையாடலுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஒரு தொகுப்பு மீதான உரையாடலே தலைவலி வரச் செய்துவிடும். இதில் பதினெட்டு தொகுப்புகள் என்றால் எனக்கும் சற்று பயமாகத்தான் இருக்கிறது. இருப்பினும் ஆனது ஆகட்டும். ஒரு கை பார்த்துவிடலாம் என்று கிளம்புகிறேன். அதிகாலை நான்கு மணிக்கு பெங்களூரில் பஸ் ஏறினால் ஒன்பது மணிக்கு சேலத்தை அடைந்துவிடலாம். 
Jokes apart. உரையாடல் சரியாக அமையுமெனில் கவிதையியலில் இது ஒரு மிக முக்கியமான நிகழ்வாக அமைந்துவிடும் வாய்ப்பிருக்கிறது என நம்பலாம்.
முக்கியம், முக்கியமின்மை என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். சமகாலத்தில் கவிதைகளை எழுதியும், கவிதைகள் பற்றி பேசிக் கொண்டும்  இருக்கும் நாற்பது கவிஞர்களை ஒரே இடத்தில் சந்திப்பது உற்சாகமான ஏற்பாடு.
சேலம் மற்றும் சேலம் பக்கத்திலிருக்கும் நண்பர்கள் வாய்ப்பிருப்பின் கலந்து கொள்ளுங்கள். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டால் ஒருவேளை நீங்கள் கவிதை பிரியராக மாறிவிடக் கூடும் அல்லது இனிமேல் கவிதையை தொடக் கூடப் போவதில்லை என்று முடிவெடுத்துவிடக் கூடும். இரண்டில் எது நடந்தாலும் நல்லதுதான் என்பதை மனப்பூர்வமாக நம்புங்கள். nisaptham.com/

கருத்துகள் இல்லை: