செவ்வாய், 12 மார்ச், 2013

கர்நாடகா உள்ளாட்சி தேர்தலில் BJP க்கு பலத்த அடி

பெங்களூரு:கர்நாடகாவில், விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான, "செமி பைனல்' என, கருதப்பட்ட உள்ளாட்சி தேர்தலில், காங்கிரஸ் அபரா வெற்றி பெற்றுள்ளது.ஆளும் கட்சியான, பா.ஜ., வில் நிலவிய கோஷ்டி பூசலால், அக்கட்சிக்கு வாக்காளர்கள் பலத்த அடி கொடுத்துள்ளனர். "பா.ஜ., வுக்கு பாடம் புகட்டுவோம்' என்று கூறிய, எடியூரப்பா, ஸ்ரீராமுலுவின் கட்சிகளும் படுதோல்வி அடைந்துள்ளன.கர்நாடகாõவில், ஏழு மாநகராட்சிகள், 43 நகராட்சிகள், 93 டவுன் பஞ்சாயத்துகள் உட்பட, 208 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், மொத்தமுள்ள, 4,976 வார்டுகளில், 24 வார்டுகளில் யாரும் மனு தாக்கல் செய்யாததாலும், 85 வார்டுகளில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாலும், 4, 867 வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் நடந்தது இவற்றில், 1,960 வார்டுகளில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. தேவகவுடாவின், மதசார்பற்ற ஜனதா தளமும், பா.ஜ., வும் தலா, 906 வார்டுகளிலும்; எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி, 274 வார்டுகளிலும்; ஸ்ரீராமுலுவின், பி.எஸ்.ஆர்., காங்கிரஸ், 86 வார்டுகளிலும்; சுயேச்சைகள், 776 வார்டுகளிலும்; மார்க்., கம்யூ., 13 வார்டுகளிலும்; தேசிய வாத காங்கிரஸ், இந்திய கம்யூ., தலா, ஒரு வார்டிலும்; மற்றவர்கள், 29 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதன்மூலம், பா.ஜ.,விடமிருந்த மாநகராட்சிகள், தற்போது, காங்கிரஸ் வசம் வந்துள்ளன. "வட கர்நாடகாவில், தனி சாம்ராஜ்யத்தை உருவாக்குவேன்' என்ற எடியூரப்பாவின் கனவும் சிதைந்து விட்டது.

சுரங்க அதிபர்களின் பாதுகாப்பு கோட்டையாக இருந்த பெல்லாரி, மீண்டும் காங்கிரஸ் பிடிக்குள் வந்து விட்டது. ராம்நகரில் ஆர்ப்பரித்து வந்த, மத சார்பற்ற ஜனதா தளம் மாநிலத் தலைவர் குமாரசாமிக்கு தோல்வி கிடைத்தது. மைசூருவில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவின் பிரபலமும் எடுபடாமல் போய் விட்டது.பா.ஜ., அரசிலுள்ள பெரும்பான்மை அமைச்சர்களின் ஜம்பம் பலிக்கவில்லை. எதிரிகளின் கை வலுப்பெற்று விட்டதால், அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தேர்தல் நடந்த தாவணகரே, மங்களூரு, பெல்லாரி ஆகிய மூன்று மாநகராட்சிகளிலும் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. குல்பர்கா மாநகராட்சியில் பெரும்பான்மைக்கு ஐந்து இடங்கள் குறைவாக உள்ளதால், சுயேட்சைகளின் உதவியுடன் மாநகராட்சியை கைப்பற்றுவது உறுதி.மைசூரு மாநகராட்சியில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரசும், மதசார்பற்ற ஜனதா தளமும், அந்நகராட்சியை கைப்பற்ற முயன்ற வருகின்றன. 12 இடங்களை வைத்துள்ள பா.ஜ., வின் ஆதரவு முக்கியமாக கருதப்படுகிறது.

பெல்காம் மாநகராட்சியில் மராத்திய கட்சியான மஹாராஷ்டிரா ஏகி கிரண் சமிதியினர், மொத்தமுள்ள, 58 இடங்களில், 33 வார்டுகளை கைப்பற்றி, மாநகராட்சியை தக்க வைத்துள்ளனர். கடந்த தேர்தலில், பெல்காம் தவிர மற்ற மாநகராட்சிகளில், பா.ஜ., வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான, பா.ஜ., அரசு ஆளும், கர்நாடகாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், அக்கட்சி படுதோல்வி அடைந்துள்ளதால், தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பா.ஜ., விலிருந்து பிரிந்த எடியூரப்பா, ஸ்ரீராமுலு ஆகியோருக்கும், "செம அடி' விழுந்துள்ளது. தேர்தல் முடிவுகளால் காங்கிரஸ் தலைவர்கள் குஷியடைந்துள்ளனர்.

முதல்வர் ஷெட்டர் கூறுகையில்,""உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒரு எச்சரிக்கை மணி. இந்த முடிவுகள், வரும் சட்டசபை தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது,'' என்றார். dinamalar.com

கருத்துகள் இல்லை: