செவ்வாய், 12 மார்ச், 2013

மணியம்மையாரின் பொதுவாழ்க்கை கடவுள் மதம் ஜாதி


வரலாற்றை ஆழ்ந்து படித்தால் ஆதிச் சமூகம் என்பது தாய் வழிச்சமூகமாகத்தான் இருந்ததுள்ளது என்பதை அறியமுடியும்.ஆனால்,காலப் போக்கில் பெண்களை இல்லத்தரசி(?)ஆக்கிவிட்டு குடும்பத்தலைவர்கள் ஆளுமை செலுத்தத் தொடங்கிவிட்டார்கள்.பொருள் தேடல் பின்னால் வருவாய் ஈட்டல் என்கிற முக்கியப் பணியை மட்டும் ஆண்கள் எடுத்துக்கொண்டனர். அதேநேரம் குழந்தைகளை ஈன்றல், வளர்த்தல், சமைத்தல், பெரும்பகுதி நேரம் பராமரித்தல் என பல பணிகள் பெண்களுக்கென ஆனது.
பெண்ணுரிமைக் குரல் ஒலிக்கத் தொடங்கிய காலத்தில்கூட பொது வாழ்க்கைக்குப் பெண்கள் வராமலேயே இருந்தனர். விதி விலக்குகள் ஒன்றிரண்டு இருக்கலாம்; அவையும் அரச மரபுப் பெண்களாக இருந்தனர். இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் சில பெண்கள் ஈடுபட்டதுண்டு. அவர்களும் முழுமையாக ஈடுபட்டதாகச் சொல்லமுடியாது.அக்காலகட்டத்தில் ஈரோட்டில் கள்ளுக்கடை மறியலில்,வைக்கம் சத்யாகிரகத்தில் ஈடுபட்டவர்கள் பெரியாரின் மனைவி நாகம்மையாரும், கண்ணம்மையாரும்தான் தீவிரமாகக் களத்தில் குத்தித்தவர்கள் என்பதற்கு காந்தியாரின் வாக்குமூலமே ஆதாரம்.
இத்தகைய பின்புலத்தில் தமிழக வரலாற்றில்...அல்ல...அல்ல...இந்திய வரலாற்றிலேயே ஒரு பெண் தன்னை முழுமையாக பொது வாழ்க்கைக்கு ஒப்படைத்தார் என்றால், அவர் அன்னை மணியம்மையார்தான் என்பதே மறுக்கமுடியாத உண்மை.

இந்தியாவில் பெரும்பான்மையான மக்களின் ஒன்றுபட்ட உணர்வின் அடிப்படையில் அமைந்த சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டனர் என்பது அதிசயமல்ல; ஏனென்றால், உலகின் பல்வேறு நாடுகளில் நடந்த சுதந்திரப் போராட்டங்களிலும் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.ஆனால், பெரும்பான்மை மக்கள் ஏற்காத சமூகப் புரட்சி இயக்கத்தில் ஒரு பெண் தனது 23 ஆம் வயதில் இணைத்துக் கொண்டார் என்பது உலகில் வேறெங்கும் காணமுடியாத தனிச் சரித்திரம்.
கடவுள் ஒழிக, மதம் ஒழிக, ஜாதி ஒழிக என ஆயிரங்காலத்து மூடநம்பிக்கைக்கு எதிராகப் போராடும் ஓர் இயக்கத்தில் இணைகிறார்; மூடநம்பிக்கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் பெண்ணினத்திலிருந்து ஒருவர் மட்டும் வருகிறார் என்பதைத் தமிழக வரலாறு அப்போதுதான் பதிவுசெய்கிறது.
மணியம்மையாரின் பொதுவாழ்க்கை நுழைவு மற்றவர்களிடமிருந்து வேறுபட்டது.இளம்வயதிலேயே பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர் மணியம்மையார். தன் தந்தை வழியாக பெரியாரின் கொள்கைகளை அறிந்த அவர், அந்தக் காலப் பெண்கள் எவருக்கும் நாட்டம் இருந்திராத சமுதாயப் பணிக்குத் தன்னை அர்ப்பணிக்கத் துணிந்தார் என்பதும் இதற்கு முன் தமிழகம் காணாதது. மணியமையாரின் தந்தையார் கனகசபை சுயமரியாதை இயக்கத்தவர். எனவே, அவர் அடிக்கடி பெரியாருக்கு கடிதம் எழுதுவது வழக்கம். பெரியாரின் 54 ஆம் வயதில் தனது உடல்நிலை குறித்து சலிப்புடன் இருந்த காலம்.அப்போது கனகசபை எழுதிய கடிதம் ஒன்றில் தங்கள் உடம்பை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள் என்று எழுதியுள்ளார். அதற்கு பதில் எழுதிய பெரியார், ``எல்லோரும் தூர இருந்தபடி உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளுங்கள் மீஎன்கிறார்கள். ஆனால், கூட இருந்து உதவி செய்ய யாரும் இல்லை. என்னவோ என் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன், என்று தனது மனநிலையை உள்ளது உள்ளபடி வெளிப்படுத்தியிருக்கிறார்.
பெரியாரின் மனநிலையை அறிந்த கனகசபை, மணியம்மையாரை (அப்போது அவரது பெயர் காந்திமதி)அழைத்துச் சென்று`இந்தப் பெண் தங்கள் கூட இருந்து தொண்டு செய்ய்யட்டும்என்று கூறினார்.பெரியாரிடம் இப்படி வந்தவர்தான் மணியம்மையார்.
பெரியாரிடம் தான் கொண்டிருந்த ஈடுபாட்டை அன்னை மணியம்மையாரே சொல்கிறார் கேளுங்கள்.``
``எனது இளம் வயதிலிருந்து அதாவது எனக்குப் புத்தி தெரிந்த நாளிலிருந்து அவர் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அதே பைத்தியமாகிப் பள்ளிப் படிப்பையும் செம்மையுற முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டு என் தந்தை இறந்த சிறிது நாள் களுக்குள்ளாகவே அய்யா அவர்களிடம் என்னை ஒப்படைத்துக் கொண்டேன். அவர் தொண்டுக்கு முழுக்க முழுக்க ஆளாக்கி அவர் நலத்தைக் கண் எனப் பாதுகாக்க ஒரு தாயாக என்னைப் பாவித்துக் கொண்டு அவரை ஒரு சிறு குழந்தையாகவே என் மனத்தில் இறுத்தி அக்குழந்தைக்கு ஊறு நேராவண்ணம் பாதுகாப்பதிலேயே மகிழ்ச்சி கண்டேன். அவரும் என்னை ஒரு நாளும் பெயரிட்டு அழைக்காமல் அவர் உயிர் பிரியும் வரையிலும் அம்மா! அம்மா! என்று ஆயிரம் அம்மாக்களாய்த் தினமும் அழைத்த வண்ணமே இருப்பார். அந்த மழலை மொழியைத்தான் இனி நான் கேட்க முடியாதே தவிர, என் உள்ளம் மட்டும் மானசீகமாக கேட்டுக் கொண்டே இருக்கிறது.
அவரோடு நான் 30 ஆண்டு 3 மாதம் 13 நாள்கள் அவரை விட்டுப் பிரியாது இருந்தேன். 1943 செப்டம்பர் 11ஆம் நாள் வந்தடைந்த நான் அன்று முதல் இன்று வரை ஒரு நாளும் விட்டுப் பிரியாது மகிழ்ந்த நான் ஓர் ஆண்டாக இயற்கையின் கொடுமைக்கு ஆளாகி நடுநடுவே பிரிய நேர்ந்தது. 1972 செப்டம்பர் 17-ஆம் நாள் ஈரோட்டிலே அவர் பிறந்து வாழ்ந்த ஊரிலே என்றும் இல்லாத அளவுக்கு வெகுசிறப்புடன் அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடி அவரது திரு உருவச் சிலையையும் திறந்து, கடலென மக்கள் திரண்டு வந்திருந்து மகிழ்ந்திருந்த வேளையிலே அம்மகிழ்ச்சியில் பங்கு கொண்டு நானும், அது முடிந்ததும் அம்மகிழ்ச்சியின் வேகத்தைத் தாங்கும் சக்தி இல்லாததனாலோ என்னவோ அன்று இரவு 11 மணியளவில் இருதய வலி முதன் முதலாக ஏற்பட்டுப் படாதபாடுபட்டு அவதியுற்ற வேளையில், அய்யா அவர்கள் பயந்து துடித்த துடிப்பும் என் துடிப்பைவிட அதிகமாய் இருந்ததாகவும் அன்று வந்திருந்த நமதியக்க அன்புத் தோழர்கள் பட்டபாட்டையும், பின்னர் உடல் நலம் தேறியவுடன் ஒவ்வொருவரும் சொல்வதைக் கேட்டு ஒருபுறம் வேதனையும் அதே நேரத்தில் பூரிப்பும் அடைந்து அய்யா அவர்களிடம் சென்று, நீங்கள் பயந்து விட்டீர்களாமே! நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம். நான் பிழைத்தது ஏதோ காரணத்திற்காகத் தான். உங்களை விட்டுவிட்டு அவ்வளவு சீக்கிரம் போய்விட மாட்டேன்.
எத்தனையோ ஏளனப் பேச்சுகளையும், தூற்றுதலையும் கேட்டுத் தாங்கிய இந்த உள்ளம், உங்களுக்கு இன்று ஏற்பட்ட மகிழ்ச்சியைத் தாங்க முடியாமல் போய்விட்டது. அவ்வளவுதான் வேறில்லை என்று கூறி அவரை மகிழ்வித்தேன். அய்யா அப்பொழுது சொன்னது இன்னமும் என் மனத்தில் அப்படியே இருக்கின்றன. இயற்கையை, வெல்வது கடினம்தான்! உனக்கு ஏதாவது இன்று நேர்ந்திருந்தால் அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியும்.
ஆனால் என் எண்ணம் வீணாயிற்றே. வீண் பழிக்கும் பொல்லாப்புக்கும் ஆளானேனே. எந்தக் காரணத்திற்காக, என்ன நோக்கத்திற்காக இந்த ஏற்பாடுகள் (பல பேரின் அதிருப்திக்கும் - வெறுப்புக்கும் ஆளாகி) செய்தேனோ அது நிறைவு பெறாமல் நீ போய் விடுவாயோ என்றுதான் கலங்கினேன் என்று கூறிக் கண்ணீரை உதிர்த்தார். அப்போது நான் அவரை ஊக்கப்படுத்துவதற்காகச் சொன்னேன்: இதென்ன நீங்கள் இவ்வளவு பலவீனமானவரா, எல்லோருக்கும் மரணத்தைப் பற்றித் தத்துவம் பேசுவீர். இயற்கையின் நியதியைப் பற்றி வண்டிவண்டியாய்ச் சொல்வீர். கடைசியிலே நீங்களே இப்படி இருந்தால் மற்றவர்களுக்கு மட்டும் அப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதில் என்ன பொருள் இருக்கிறது; எனக்கு ஒன்றும் புரியவில்லையே உங்கள் பேச்சு என்று சற்றுப் பொய்க் கோபத்துடன்  கடினமாகச் சொன்னேன். உடனே தமக்கே உரிய சிரிப்புச் சிரித்து ஏதோ சமாதானம் செய்தார். உண்மையிலே அந்நிகழ்ச்சி எங்கள் இருவரையும் மிகவும் நெகிழ வைத்த ஒன்றாகும். மறக்க முடியாததும்கூட.
சில சமயங்களிலே எனக்கும் அய்யா அவர்களுக்கும் சிறு சிறு சம்பவங்களுக் கெல்லாம்கூடச் சங்கடம் ஏற்படுவதுண்டு. அதுவும் அவர் நலத்தைப் பற்றிய அக்கறையினால் கடுமையாகக் கூட நடந்து கொள்வேன். அது தவிர அவர் மனது நோகும்படியாகவோ துயரம் தரும்படியாகவோ ஒன்றும் பெரிதாக இருக்காது. ஒன்று, இரண்டு சம்பவங்கள் நேர்ந்ததுண்டு. உடனே ஒரு சிறிது நேரத்தில் அய்யா அவர்களே முதலில் முந்திக் கொண்டு நான் கொண்டிருந்த வருத்தத்தைக் களைய முன் வந்து விடுவார். மற்றபடி பெரும்பாலும் அவர் குறிப்பறிந்து நடந்து கொண்டு அவர் தம் வேலைகளுக்கு எந்தவிதமான இடையூறும் தொந்தரவும் இன்றி கவனித்துத் தான் வந்தேன்.(விடுதலை 4.1.1974)
இந்தியா போன்ற ஆணாதிக்க சமுதாயச் சூழலில் பொது வாழ்வுக்கு வரும் பெண்கள் மீதான விமர்சனம் நேர்மையாக இருப்பதில்லை; நூறாண்டுகளுக்கு முன்பிருந்தே இதே நிலைதான்.
சமுதாய,அரசியல் பணிகளின் மீதோ,சொல்லப்படும் கருத்துகள் மீதோ விமர்சனங்களை வைக்காமல், தனிப்பட்ட வாழ்வின் மீது வைக்கப்படும் விமர்சனங்களே அதிகமுள்ளன. (ஆண்களின் மீதும் இதே பார்வையில் விமர்சனக்கள் வைக்கப்படுகின்றன. ஆனால், ஒப்பீட்டளவில்  குறைவு.) நடுநிலை என்று சொல்லிக்கொள்ளும் பத்திரிகைகளும் மக்களின் பொதுப் புத்திக்குத் தீனி போடும் வன்மத்தில் ஈடுபட்டு, தனி மனித தாக்குதல்களைத் தொடுக்கின்றன.இந்தச் சூழ்நிலை சென்ற நூற்றாண்டில் அதிகம் இருந்திருக்கும்.காரணம் அப்போது பெண்கள் பொது வாழ்க்கைக்கு வரத் தயங்கிய காலம்.அந்நிலையில் ஒரு பெண் தன்னைவிட 42 வயது அதிகமுள்ள ஒரு ஆணுடன் இணைந்து சமுதாயப் பணியாற்ற ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டு பிரச்சாரம் செய்துவந்த காலத்தில் அப்பெண் எத்தகைய இழிவுகளைத் தாங்கியிருக்கவேண்டும். ஆனால், அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு கொண்ட கொள்கைக்காக சளைக்காமல் போராடி வந்துள்ளார் என்பதே மணியம்மையாரின் சிறப்பு.
எலிகளுக்குக் கூட பூனையிடமிருந்து விடுதலை கிடைக்கலாம். ஆனால், பெண்களுக்கு ஆண்களால் ஒரு போதும் விடுதலை கிடைக்காது என்ற பெரியாரின் கருத்து. தமக்காக ஆண்கள் போராடவரமாட்டார்கள் என்ற கருத்து, பெரியாரின் இடையறாத பிரச்சாரத்தால் தமிழ் மண்ணில் விதைக்கப்பட்டதன் விளைவே அரசியல் சமுதாயக் களங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதற்குக் காரணமாகும்.இத்தகைய சூழலில் பெண்கள் எப்படி இயங்க வேண்டும்-யாரை தமது முன்னோடியாகக் கொள்ளவேண்டும் என்பது முக்கியமாகும்.வெறுமனே தமது கணவருக்கு பதிலாளாக உள்ளாட்சிப் பொறுப்புகளில் வெற்றிபெறும் பெண்களின் எண்ணிக்கை மிகுதியாக உள்ளதைப் பார்க்கிறோம். வெற்றிச் சான்றிதழ் பெற்ற கையோடு வீட்டிலேயே முடங்கிவிடுவதும், கூட்டங்களில் மட்டும் பெயருக்குப் பங்கேற்றுத் திரும்புவதுமாக இத்தகையவர்கள்  இருக்கிறார்கள். இந்த நிலை பெண்களின் சமுதாயப் பணிகளை வளர்க்க உதவாது.
பாதுகாத்த பெருமை!
அய்யா அவர்களிடம் நான் வந்து சேரும்போது, இப்போது எனக்கு என்ன வயதோ, அதே வயதுதான் அப்போது அய்யாவுக்கு. இப்பொழுது எனது உடலில் என்னென்ன கோளாறுகள் உள்ளதோ, அதைவிட அதிகமான கோளாறுகள் அய்யாவுக்கு இருந்தன. அப்படியிருந்த அய்யாவை, கடந்த முப்பது ஆண்டுகளாகக் கட்டிக் காத்து, அவரை நோயின்றி உடல் நலத்தோடு பாதுகாத்து வரும் பெருமை மணியம்மையாரையே சேரும்.
- அறிஞர் அண்ணா
தொடர்களுக்காக,ஆன்மீக மற்றும் சமையல் நிகழ்ச்சிகளுக்காக தொலைக்காட்சிகளைப் பார்ப்பவர்களாகவும், சினிமா செய்திகளைக் காண பத்திரிகைகளைப் புரட்டுபவர்களாகவும் பெண்கள் இருப்பது இன்னும் எத்தனைக் காலத்திற்கு நீடிக்கப்போகிறது?
முகநூல்களிலும்,இணையப் பொழுது போக்குகளிலும் தமது நேரத்தைத் தொலைக்கும் இளம் தலைமுறைப் பெண்களின் நிலை மாறுவது எப்போது?
நம்மைச்சுற்றியுள்ள சமூகத்தின் சிக்கல்களை அறிந்துகொள்ளாமலும்,நம் இனத்தின் எதிர்காலம்,நம்மை உயர்த்திய இயக்கங்களின் வரலாறு,நம்முடைய இன்றைய உயர் நிலைக்குக் காரணமான தலைவர்களின் போராட்டங்கள் போன்றவற்றின் மீது கவனம் கொள்ளாமல் இருப்பதும் சரியா?
சினிமா நடிகைகளின் வாழ்வை அறிந்துள்ளதில் நூறில் ஒரு பங்காவது மணியம்மையார் போன்ற தலைவர்களின் சமுதாயப் பணியை அறிந்ததுண்டா? ஒரே ஒரு மாற்றுடையோடு, ஒரு குண்டுமணி அளவுத் தங்கத்தைக் கூட அணிந்து கொள்ளாமல், தமது தனி வாழ்க்கைக்கு என எழுதிவைக்கப்பட்ட சொத்தினைக் கூட தம் உறவினர்க்கு அளிக்காமல் பொதுவுக்கு என ஆக்கி, தம் மீதான இழிவுகளையெல்லாம் துடைத்தெறிந்துவிட்டு துறவிக்கும் மேலாக  வாழ்ந்து மகளிர் இனத்துக்கே பெருமை சேர்த்த மணியம்மையாரின் வாழ்க்கையே பெண்ணினத்தின் விடியலுக்குப் பயன்படும் பாடமாகும்

கருத்துகள் இல்லை: