வியாழன், 14 மார்ச், 2013

எழுத்துப் பூர்வ கோரிக்கையை ஏற்க ராஜா மறுப்பு

புதுடில்லி: "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில், பார்லிமென்ட் கூட்டு குழு முன் நேரில் ஆஜராவதற்கு பதில், எழுத்துப் பூர்வமாக விளக்கம் தரும்படி கூறிய, பி.சி.சாக்கோவின் கோரிக்கையை, முன்னாள் மத்திய தொலை தொடர்பு அமைச்சர் ராஜா ஏற்க மறுத்தார். நேரில் ஆஜராகவே விரும்புவதாக கடிதம் எழுதியுள்ளார்"2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, ஜே.பி.சி., - பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதன் அறிக்கையை, நடப்பு பார்லிமென்ட் தொடருக்குள் தாக்கல் செய்ய, இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில், இக்குழு முன் ஆஜராகி விளக்கம் அளித்த, அட்டர்னி ஜெனரல் வாகன்வதி, மத்திய தொலை தொடர்பு துறையின் முன்னாள் அமைச்சர், ராஜாவின் செயல்பாடுகள் குறித்து, கடுமையாக விமர்சித்து இருந்தார்.இதையடுத்து, தன் தரப்பு கருத்தையும், பார்லிமென்ட் கூட்டுக் குழு முன் தெரிவிக்க, அனுமதிக்க கோரி, லோக்சபா சபாநாயகர் மீரா குமாருக்கும், கூட்டுக் குழுவின் தலைவர், பி.சி.சாக்கோவுக்கும், ராஜா கடிதம் எழுதி இருந்தார்.


ராஜா நேரில் ஆஜராவதற்கு பதில், அவர் விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்கும்படி, பார்லிமென்ட் குழுவின் தலைவர் சாக்கோ, கடந்த, 8ம் தேதி ராஜாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், நான்கு கேள்விகளுக்கு பதில் அளிக்கும்படி குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், பி.சி.சாக்கோவுக்கு, ராஜா நேற்று கடிதம் ஒன்றை அனுப்பினார். இரண்டு பக்க கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: அட்டர்னி ஜெனரல் வாகன்வதி குற்றச்சாட்டுக்கும், பார்லிமென்ட் கூட்டு குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ள கேள்விகளுக்கும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.குழு முன் நேரில் ஆஜராவதற்கு, வாய்ப்பு அளிக்கப்பட்டால், என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் பதில் அளிக்க விரும்புகிறேன். அனைத்து முடிவுகளும், தொலைதொடர்பு துறையில் ஒருங்கிணைந்து தான் எடுக்கப்பட்டது. நான் நேரில் ஆஜராவதற்கு, பார்லிமென்ட் கூட்டு குழு ஏற்க மறுப்பது ஏன் என்று தெரியவில்லை.இவ்வாறு, ராஜா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். dinamalar.com

கருத்துகள் இல்லை: