வெள்ளி, 27 ஜூலை, 2012

தளபதியை முன்னிறுத்தி அழகிரியும் ஸ்டாலினும் பனிப்போர்

 Azhagiri Vs Stalin No End Rift Dmk தூக்க' முயலும் அழகிரி.. 'காக்க' முயலும் ஸ்டாலின்: மதுரை திமுகவில் கோஷ்டி பூசல் தீவிரம்!

மதுரை மாவட்டத் திமுகவில் மீண்டும் உள்கட்சி பூசல் வெடித்துள்ளது.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆதரவாளரும் மாநகர் மாவட்டச் செயலாளருமான தளபதியை நீக்கக்கோரி திமுக தலைவர் கருணாநிதியிடம் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் நேரில் சந்தித்து புகார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் அழகிரி வெளிநாட்டில் இருந்தபோது திடீரென இளைஞர் அணி நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்காக மதுரை வந்தார் ஸ்டாலின். இதையடுத்து அழகிரியின் ஆதரவாளர்கள் ஸ்டாலின் கூட்டத்தை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தனர்.
தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருக்கும் அழகிரியை மதிக்காமல் கூட்டம் நடந்த வந்ததால் ஸ்டாலினின் கூட்டத்தைப் புறக்கணித்ததாக அவர்கள் கூறினர்.
ஆனால், மாநகர் மாவட்டச் செயலாளரான தளபதி மட்டும் வேறு வழியின்றி ஸ்டாலின் கூட்டத்தில் கலந்து கொண்டார். காரணம் இந்தக் கூட்டம் நடந்தது அவர் செயலாளராக இருக்கும் மாநகர் மாவட்டப் பகுதியில் தான்.
தனது உத்தரவையும் மீறி ஸ்டாலினின் கூட்டத்தில் பங்கேற்றதால் தளபதியை அழகிரி ஒதுக்க ஆரம்பித்தார். இத்தனைக்கும் அவரும் மிகத் தீவிரமான அழகிரி ஆதரவாளர் தான்.

இந் நிலையில் மதுரையில் தன்னைப் புறக்கணித்த திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்ககுமாறு கருணாநிதிக்கு ஸ்டாலின் நெருக்கடி கொடுத்தார். இதைத் தொடர்ந்து கூட்டத்தைப் புறக்கணித்த 17 அழகிரி ஆதரவாளர்களுக்கும் விளக்கம் கேட்டு திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் நோட்டீஸ் அனுப்பினார்.
ஆனால், இதற்கு 16 பேர் சரியான விளக்கம் தரவில்லை. மாவட்ட அவைத் தலைவராக இருந்த இசக்கிமுத்து மட்டும், "எங்களைக் கேள்வி கேட்கும் அதிகாரம் பொதுச் செயலாளர் க.அன்பழகன் மட்டுமே உண்டு, இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை' என்று விளக்கம் அளித்திருந்தார்.
இதனால் அதிர்ந்து போன ஸ்டாலின் தரப்பு கருணாநிதியிடம் மீண்டும் முறையிடவே, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இசக்கிமுத்து நீக்கப்பட்டார்.
இதன் பிறகு ஸ்டாலின் வெளிநாடு சென்றிருந்த நிலையில் கருணாநிதியைச் சந்தித்து இசக்கிமுத்துவை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அழகிரி கூறியதாகவும், அதை அவர் ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் வந்தன.
இந் நிலையில் திமுகவினர் தொடர்ந்து கைது செய்யப்படுவதைக் கண்டித்து திமுக சார்பில் ஜூலை 4ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மாநிலம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கைதாகினர்.
ஆனால், மு.க.அழகிரி கண்ட்ரோலில் உள்ள தென் மாவட்டங்களில் மற்ற மாவட்டங்களைவிட குறைவான எண்ணிக்கையிலேயே திமுகவினர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
குறிப்பாக மதுரை மாவட்டங்களில் மிக மிகக் குறைவான அளவிலேயே பங்கேற்றனர். இதனால் கருணாநிதி கடும் அதிருப்தியில் உள்ளார்,
இந் நிலையில் அழகிரியின் மிகத் தீவிர ஆதரவாளர்களான மதுரை முன்னாள் துணை மேயர் பி.மன்னன், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் உதயகுமார், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கவுஸ் பாட்சா, சின்னம்மாள் உள்பட பலர் நேற்று சென்னை வந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியை சந்தித்தனர்.
சிறை நிரப்பும் போராட்டத்தில் மதுரை மாநகரில் குறைவானவர்கள் பங்கேற்றதற்கு மாவட்டச் செயலாளர் தளபதியே காரணம். கட்சிப் பொறுப்புகளில் இருக்கும் யாரையும் தளபதி மதிப்பது இல்லை. யாரோடும் ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்று புகார் தந்தனர்.
பின்னர் அழகிரி ஆதரவாளர்கள் ஸ்டாலினையும் சந்தித்துப் பேசினர். ஆனால், அவர்களுக்கு மிகச் சில நிமிடங்களே ஒதுக்கித் தந்த ஸ்டாலின், நீங்கள் ஏன் புகார் சொல்கிறீர்கள் என்று தெரியும், உங்களை அனுப்பியது யார் என்பதும் தெரியும் என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பி வைத்துவிட்டார் என்கிறார்கள்.
தனது ஆதரவாளராக இருந்து ஸ்டாலின் பக்கம் சாய்ந்துவிட்ட தளபதியின் பதவியைக் காலி செய்ய அழகிரி தீவிரமாக களமிறங்கியுள்ளார். அதே நேரத்தில் அழகிரி பக்கமிருந்து தனது பக்கம் வந்த தளபதியைக் காப்பாற்ற ஸ்டாலினும் தீவிரம் காட்டி வருகிறார்.
இதனால் மதுரை மாவட்ட திமுகவில் மீண்டும் பெரும் பிரச்சனை வெடித்துள்ளது.

கருத்துகள் இல்லை: