ஞாயிறு, 22 ஜூலை, 2012

திடீரென வளர்ந்து? ஓரங்கட்டப்படும் ஈரோடு ராசி

அரசியலில் மிக உயரத்துக்கு வளர்ந்து, திடீரென ஓரங்கட்டப்படும் ஈரோடு மாவட்ட அரசியல்வாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழக அரசியலில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களின் பிரதிநிதித்துவம், கட்சிப் பாகுபாடின்றி அதிகம் இருக்கும். குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பலர், அரசியலில் பிரபலமாக இருந்தனர். அவர்களில் பலர், கட்சியில் ஓரங்கட்டப்பட்ட வரலாறு இன்று வரை தொடர்கிறது.ஈரோட்டில், "ராசியில்லாமல்' போன ராஜாக்கள் சிலர் குறித்த விவரம் அ.தி.மு.க., உதயமானது முதல், எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளையாக இருந்தவர், ஈரோட்டைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் முத்துசாமி. எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், ஒரு சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா சுற்றுப்பயணத்தை வழி நடத்தி, அதன் பின் ஓரங்கட்டப்பட்டார். 2009ல், தி.மு.க.,வில் இணைந்து, தி.மு.க., தலைவர்களுடன் நெருக்கம் காட்டினார்.
2011 சட்டசபை தேர்தலில், < ஈரோடு கிழக்கு தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, தோற்றார். இப்போது, சென்னையிலேயே இருக்கிறார்.
*அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சர் பதவி பெற்று செல்வாக்காய் இருந்த துரை ராமசாமி, பிற்காலங்களில் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டதால், சுயேச்சையாக களமிறங்கி தேர்தலில் தோல்வியைச் சந்தித்தார். அதன் பின், காங்கிரசில் ஐக்கியமானாலும், இழந்த செல்வாக்கை அவரால் மீண்டும் பெற முடியவில்லை.


* அ.தி.மு.க., ஆட்சியமைத்த, 2001 - 06ல், செங்கோட்டையன் ஓரங்கட்டப்பட்ட போது, ஈரோட்டைச் சேர்நத ராமசாமி,
அறநிலையத்துறை அமைச்சராக்கப்பட்டார். ஈரோடு மாவட்டச் செயலராகவும் வலம் வந்த இவர், தொடர் புகாரின் பேரில் கட்சியில் ஓரங்கட்டப்பட்டார். 2006 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தும், கடைசி நேரத்தில் கட்சியால் வாபஸ் பெறப்பட்டார். தற்போது முக்கிய பதவி ஏதுமின்றி இருக்கிறார். * அ.தி.மு.க.,வில் சத்தியமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ., சரஸ்வதி, கட்சியால் ஓரங்கட்டப்பட்டு, முத்துசாமியுடன், தி.மு.க.,வில் சேர்ந்தார். தாராபுரம் முன்னாள் எம்.எல்.ஏ., சிவகாமி, ஈரோடு முன்னாள் எம்.எல்.ஏ., மாணிக்கம் ஆகியோரும், கட்சியால் ஓரங்கட்டப்பட்டோர் பட்டியலில் தொடர்ந்து இடம் பெற்றுள்ளனர்.

* அ.தி.மு.க.,வைப் போலவே, தி.மு.க.,வில் மிக வேகமாக வளர்ந்தவர் ராஜா. மாவட்டச் செயலர், அமைச்சர் ஆகிய பதவிகள் வேகமாக இவரைத் தேடி வந்தன. பெருந்துறை ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிய இவர், அனைத்து பதவியையும் இழந்து,
கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டார். இவரது தந்தை, என்.கே.கே.பெரியசாமியின் பிரயத்தனத்தால், மாவட்டச் செயலராக தொடர்கிறார்.

* இதன் தொடர்ச்சியாக, பதவியிழந்தோர் பட்டியலில் தற்போது, செங்கோட்டையன் சேர்ந்துள்ளார். தமிழக அமைச்சரவையில் மூன்றாம் இடத்தில் இருந்த இவர், திருச்சி, சங்கரன்கோவில், புதுக்கோட்டை இடைத்தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில், பன்னீர்செல்வத்துடன் முன்னிலைப்படுத்தப்பட்டார். தற்போது, தடாலடியாக அமைச்சர் பதவி, கட்சியின் தலைமை நிலையச் செயலர் பதவியும் பறிக்கப்பட்டு, முடக்கப்பட்டுள்ளார்.- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: