திங்கள், 23 ஜூலை, 2012

சண்டை... நித்தியானந்தா மீது மதுரை ஆதீனம் கடும் கோபம்!


 Madurai Aadheenam Upset With Nithyanantha
மதுரை: தன்னையும், மதுரை ஆதீன மடத்தையும் மதிக்காமல் நித்தியானந்தாவும் அவரது ஆதரவாளர்களும் தான்தோன்றித்தனமாக நடந்து வருவதால் கடும் அதிருப்தியும், கோபமும் அடைந்துள்ளாராம் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர். 
 இதனால் மதுரை ஆதீனத்திற்கும், நித்தியானந்தாவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதாக தெரிகிறது. விரைவில் இது வெடித்து வெளிக்கிளம்பி அம்பலத்திற்கு வரும் என்றும் ஆதீனத்திற்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
1500 ஆண்டு பழமையான மதுரை ஆதீன மடத்தின் இளைய வாரிசாக என்று நித்தியானந்தா நியமிக்கப்பட்டாரோ அன்று முதலே மதுரை ஆதீன மடாதிபதி அருணகிரிநாதருக்குத் தலைவலிதான். இப்போது அது திருகுவலியாக மாறியுள்ளதாக கூறுகிறார்கள் விஷயம் புரிந்தவர்கள்.
நித்தியானந்தாவும், அவரது ஆதரவாளர்கள் என்ற பெயரில் மடத்திற்குள் குவிந்துள்ள 100க்கும் மேற்பட்டோரும் நடந்து கொள்ளும் விதம் ஆதீனத்தை கடும் கோபத்திற்குள்ளாக்கியுள்ளதாம்.

நித்தியானந்தாவை இளைய வாரிசு என்று ஆதீனம் அறிவித்த பின்னர், அவருக்காக ஆதீன மடத்திற்குள் ஒரு ஆபீஸ் போட்டுக் கொடுத்தனர். மேலும் அவரது 100க்கும் மேற்பட்ட ஆண், பெண் ஆதரவாளர்களும் உள்ளேயே தங்கிக் கொள்ள, படுக்க, சாப்பிட வசதியும் செய்து கொடுத்தார் ஆதீனம்.
இந்தக் கும்பல் வந்த பிறகு படிப்படியாக ஆதீன நிர்வாகத்தையே தங்களது பிடிக்குள் கொண்டு வந்து விட்டனர். இவர்களின் அடாவடி ஆதிக்கத்தால், மதுரை ஆதீன மடத்தில் நீண்ட காலமாக வேலை செய்து கொண்டிருந்த சிலர் அங்கிருந்து விரட்டப்பட்டனர் அல்லது விலகிப் போயினர். மதுரை ஆதீனத்தின் உதவியாளரான வைஷ்ணவியைத் தாக்கும் அளவுக்குத் தைரியமும் பெற்றனர் நித்தியானந்தாவின் ஆட்கள்.
மதுரை ஆதீனம் ஊரில் இல்லாதபோது வைஷ்ணவியைத் தாக்கி அவரது டிரஸ்ஸையும் கிழித்து அசிங்கப்படுத்தினர் நித்தியானந்தாவின் முரட்டு ஆதரவாளர்கள். இதனால் வைஷ்ணவி கதறி அழுதார், போலீஸாரைத் தொடர்பு கொண்டு காப்பாற்றுமாறு கோரும் அளவுக்கு நிலைமை போனது.
பின்னர் நித்தியானந்தாவை மதுரை ஆதீனம் கண்டிக்க, பதிலுக்கு அவர் தனது ஆதரவாளர்களை கண்டிக்க வேண்டியதாயிற்று.
இப்போது நித்தியானந்தா கொடைக்கானலில் முகாமிட்டு ஏதோ செய்து கொண்டிருக்கிறார். அங்கேயே புதிய மடம் அமைக்க சைட் பார்த்து வருவதாகவும் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் நித்தியானந்தாவின் ஆட்கள், ஏதோ சினிமாவில் வரும் அடியாள் கூட்டம் போல நடக்க ஆரம்பித்திருப்பதால் மதுரை ஆதீனம் கடும் கோபமடைந்துள்ளாராம். மதுரை ஆதீனத்திற்கு்ச சொந்தமான குடியிருப்புகள் சூடம் சாமியார் சந்தில் உள்ளது. இங்கு நித்தியானந்தாவின் ஆட்கள் சிலர் போயுள்ளனர். கைகளில் உருட்டுக் கட்டை மட்டும்தான் இல்லை, டாடா சுமோவில் வரவில்லை. மற்றபடி சினிமாவில் வரும் வில்லன்களைப் போல உடனே இடத்தைக் காலி செய்ய வேண்டும் என்று அங்கு குடியிருந்து வருபவர்களை இந்தக் கும்பல் மிரட்டியதாம்.
இதனால் வெகுண்ட அந்த மக்கள் மதுரை ஆதீனத்திடம் இதைக் கொண்டு போனார்கள். இதைக் கேட்டு ஆதீனம் கடும் அதிர்ச்சி அடைந்தாராம். மேலும், மதுரை ஆதீன மடத்தில் வைக்கப்பட்டிருந்த ஆதீனத்தின் தந்தை படம், அவரது படம் உள்ளிட்டவற்றை நித்தியானந்தா கும்பலைச் சேர்ந்தவர்கள் கழற்றிப் போட்டு விட்டனராம். நித்தியானந்தா சிரிக்கும் போட்டோக்களை மாட்டி வைத்துள்ளனராம். இதுவும் ஆதீனத்தை கடுப்பாக்கியதாம்.
இது போதாதென்று நித்தியானந்தாவின் ஆள் ஒருவர், தனது விசிட்டிங் கார்டில் ஆதீனத்தின் படத்தைப் போடாமல் நித்தியானந்தாவின் படத்தை மட்டும் போட்டு வைத்திருக்கிறாராம். இதைப் பார்த்தும் டென்ஷனாகி விட்டாராம் ஆதீனம். என்ன நடக்கிறது இங்கே என்று அவர் நித்தியானந்தா தரப்பைப் பார்த்து கோபத்துடன் கேட்டதாக கூறுகிறார்கள்.
இதையெல்லாம் விட நித்தியானந்தாவுக்கு ஆண்மை உள்ளதா என்பதைக் கண்டறிய கர்நாடகத்தில சோதனை நடத்தவுள்ளனர். இதுதொடர்பாக கர்நாடக சிஐடி போலீஸார் சம்மன் கொடுத்துள்ளனர். இதை மதுரை ஆதீனத்திற்கே நேரில் வந்து கொடுத்துள்ளனர். அதை நித்தியானந்தாவின் ஆள் ஒருவர் வாங்கியுள்ளார். ஆனால் இது எதுவுமே மதுரை ஆதீனத்திற்குத் தெரிவிக்கப்படவில்லையாம். எதேச்சையாக பேப்பரைப் படித்த போதுதான் இதெல்லாம் மதுரை ஆதீனத்திற்குத் தெரிய வந்ததாம். இதனால் மேலும் கோபமாகி விட்டாராம் மதுரை ஆதீனம்.
நித்தியானந்தாவை விட அவரது கூடவே இருக்கும் ஆட்கள் படு மோசமாக இருப்பதாக மதுரை ஆதீனம் கருதுகிறாராம். எனவே இந்தக் கும்பலை ஒட்டுமொத்தமாக ஆதீன மடத்தை விட்டு விரட்டியடிக்க அவர் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நித்தியானந்தா மீதும் அவர் சமீப காலமாக சீற்றமடைந்து வருவதாகவும் தெரிகிறது.
விரைவில் கைலாயம் போகப் போகிறாராம் நித்தியானந்தா. அங்கு போய் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. 15 நாட்கள் டேரா போட்டிருப்பாராம். நீங்களும் வாங்களேன் என்று ஆதீனத்தையும் அழைத்தாராம் நி்த்தியானந்தா. ஆனால் நான் வரவில்லை என்று பட்டென்று கூறி விட்டாராம் ஆதீனம். இதனால் நித்தியானந்தா தர்மசங்கடமாகி விட்டாராம்.
தற்போதுதான் முதல் முறையாக நித்தியானந்தாவுடன் நேருக்கு நேர் முகம் காட்ட ஆரம்பித்துள்ளார் மதுரை ஆதீனம். விரைவில் இது பூதாகரமாக வெடிக்கும், பல அதிரடி முடிவுகளை ஆதீனம் எடுக்கலாம் என்று அவரது தரப்பினர் கூறுகிறார்கள்

கருத்துகள் இல்லை: