திங்கள், 23 ஜூலை, 2012

ஆளுங்கட்சியினரின் அடாவடி: கலங்கும் விண்ணப்பதாரர்கள்

சத்துணவு அமைப்பாளர், சமையலர், வேலை வாங்கித் தருவதாக, மனுதாரர்களிடம் கட்டாய வசூலில், அ.தி.மு.க.,வினர் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, லட்சம், லட்சமாக பணத்தை கொடுத்தவர்கள், தங்களுக்கு வேலை கிடைக்குமா என்ற அச்சத்தில் விழி பிதுங்கி நிற்கின்றனர். மீதமுள்ள தொகையை கொடுத்தால் தான் வேலை என, கட்சியினர் மிரட்டுவதால், விண்ணப்பித்த பெண்கள் வேதனையில் தத்தளிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்க்காமல், தகுதியான நபர்களுக்கு பணியிடத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ரவுண்டு கட்டி வசூல்:தமிழகம் முழுவதும், சத்துணவு, அங்கன்வாடிகளில் காலியாக உள்ள, 28 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என, சட்டசபையில் முதல்வர் அறிவித்த நாள் முதல், அ.தி.மு.க.,விலுள்ள வட்டம், ஒன்றியம், மாவட்டம் என அனைவரும் எப்படியாவது காசு பார்த்துவிடவேண்டும் என ரவுண்டு கட்டி வசூலில் இறங்கினர். வீடு, நிலம், நகையை அடமானம் வைத்து, அரசு வேலையை வாங்க வேண்டும் என்ற முனைப்பில், பலர் கட்சியினரை நம்பி பணத்தை கொடுத்துள்ளனர்.


இப்படியும் சில கலெக்டர்கள்:சத்துணவு பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்முகத் தேர்வும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படுவதால், தகுதியான நபர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கும். மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில், மாவட்ட கலெக்டர்கள், அரசியல் கட்சியினரின் பரிந்துரைகளை புறக்கணித்து, தகுதியானவர்களுக்கும், ஏழை, எளிய பெண்களுக்கும், விதவையருக்கும் வேலைவாய்ப்பை வழங்கி உள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட அதிகாரிகளும் உண்டு.

சேலம் அடாவடி:சேலம் மாவட்டத்தில், சத்துணவுத் துறையில் காலியாக இருந்த, 478 பணியிடங்களை நிரப்புவதற்கு, ஏழு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களிடம் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது.இன்னும் 10 நாளில், நியமனம் குறித்த பட்டியல் வெளியிடப்பட உள்ளது.பணத்தை கொடுத்தவர்கள் தங்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். ஆனால், இன சுழற்சி முறை என்பதால், தகுதியானவர்களுக்கு மட்டுமே வேலை வழங்க வேண்டும்.

பணத்தை கேட்டு கறார்:ஏற்கனவே, வேலை வாங்கித்தருவதாக பணத்தை கறந்த, அ.தி.மு.க.,நிர்வாகிகள் சிலர், மீதமுள்ள தொகையையும் கொடு என, கட்டாயப்படுத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகமும், சத்துணவு பணிக்கு பணம் கொடுத்து ஏமாறாதீர்கள் என்ற எச்சரிக்கை அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை.இதனால், ஏழை பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படக்கூடும். சத்துணவு பணியிடத்துக்கு போன்று, அங்கன்வாடி பணியிடத்திலும் வசூல்வேட்டை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பணியிடத்தை நிரப்புவது அரசியல்வாதிகளா, அதிகாரிகளா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

மிரட்டல் உருட்டல்:இந்த வேலைக்கு விண்ணப்பித்த, சேலம், தாதகாப்பட்டியைச் சேர்ந்த, பெண் ஒருவர் கூறியதாவது:சேலம் ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பம் வாங்கி, சத்துணவு பணிக்கு விண்ணப்பித்தேன். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளரின் உதவியாளர் ஒருவர், ஆரம்பத்தில் வேலை வாங்கித் தருவதாக, ஒன்றரை லட்சம் ரூபாய் வாங்கி விட்டார். தற்போது, போட்டி அதிகமாக உள்ளது. மேலும் ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்தால் தான், வேலை கிடைக்கும் என, மிரட்டுகிறார்.வேலையை கொடு, பணத்தை தருகிறேன் என்றால், இது என்ன காய்கறி வியாபாரமா. உன்னுடைய பணம் கிடைக்காது என்கிறார். தாலி மற்றும் நகையை அடமானம் வைத்து, பணத்தை கொடுத்துள்ளோம். கட்சியினர் தொடர்ந்து எங்களை அலைக்கழிப்பதுடன், தொல்லை கொடுத்து வருகின்றனர்.முதல்வர் ஜெயலலிதா, எங்களைப் போன்ற ஏழை பெண்களுக்கு ஒரு வாழ்வை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மிரட்டும் கட்சியினர் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளே பணியிடத்தை நிரப்ப உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: