புதன், 25 ஜூலை, 2012

அசோக் அமிர்தராஜின் கனரா வங்கி கணக்கில்1.60 கோடி மோசடி


சென்னை: பிரபல டென்னிஸ் வீரர் அசோக் அமிர்தராஜின் வைப்பு நிதியில் இருந்து ரூ.1.60 கோடி மோசடி நடந்திருப்பதை கவனிக்காமல் விட்ட கனரா வங்கிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள கனரா வங்கியில், பிரபல டென்னிஸ் வீரர் அசோக் அமிர்தராஜ் கடந்த 9.8.2010 அன்று ஓராண்டு கால வைப்பு நிதியாக ரூ.6 கோடியே 35 லட்சம் டெபாசிட் செய்திருந்தார். இதில் ரூ.95 லட்சத்திற்கு 6 டெபாசிட்டும், ரூ.65 லட்சத்திற்கான ஒரு டெபாசிட்டும் இருந்தது.
ஒராண்டு காலம் முடிந்த நிலையில், டெபாசிட் பணத்தை அசோக் அமிர்தராஜ் திரும்ப கேட்டார். ஆனால் கனரா வங்கி அதிகாரிகள் பணத்தை தராமல் இழுத்தடித்தது. கனரா வங்கிக்கு கடந்த 31.8.2011 அன்று அசோக் அமிர்தராஜ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை.

எனவே இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு கனரா வங்கி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அசோக் அமிர்தராஜ் தரப்பில் ரூ.6 கோடியே 35 லட்சம் தொகை, 7 பிரிவுகளாக வைப்பு நிதியாக வைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் ரூ.95 லட்சம் மற்றும் ரூ.65 லட்சம் டெபாசிட் தொகைக்கான சான்றிதழ்களை காணவில்லை என்று அசோக் அமிர்தராஜ் சார்பாக லாரன்ஸ் என்பவர் வங்கியிடம் கடிதம் கொடுத்தார். அவரிடம் இரு டெபாசிட் சான்றிதழ்களின் நகல்கள் வழங்கப்பட்டன. அதன்பிறகு கடந்த 26.8.2010 அன்று அசோக் அமிர்தராஜ் தரப்பில் அந்த 2 டெபாசிட் தொகைகளும் திரும்ப கொள்ளப்பட்டன என்று தெரிவித்தது.
இந்த வழக்கின் விசாரணை முடிவில், நீதிபதி அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,
அசோக் அமிர்தராஜ் பெயரில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த 2 நிரந்தர வைப்பு தொகையும் முதிர்ச்சி அடைவதற்கு முன்பே பெறப்பட்டுள்ளது. இந்த தொகையை லாரன்ஸ் என்பவர் பெற்று சென்றுள்ளார். ஆனால் இந்த லாரன்ஸ் என்பவரை யார் என்றே தெரியாது என்று அசோக் அமிர்தராஜ் கூறுகிறார்.
பணம் டெபாசிட் செய்வதற்கான சான்றிதழை காணவில்லை என்றால் காவல் நிலையத்தில் புகார் செய்திருப்பார்கள். ஆனால் வங்கியில் அசோக் அமிர்தராஜ் சார்பில் லாரன்ஸ் மனு கொடுத்த மறுநாளிலேயே அந்த புகார் குறித்து விசாரிக்காமல் 2 டெபாசிட்டுகளுக்கான சான்றிதழ்களையும் லாரன்சுக்கு, வங்கி ஊழியர்கள் வழங்கியுள்ளனர்.
அதன் பின்னர் அந்த சான்றிதழ்கள் மூலம் ரூ.1.60 கோடி டெபாசிட் தொகை முன் தேதியிட்டு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. அசோக் அமிர்தராஜ் 9.8.10 அன்று செய்த டெபாசிட் தொகையில் ரூ.1.60 கோடியை 26.8.10 அன்று அதாவது 17 நாட்களில் லாரன்ஸ் எடுத்துச் சென்றுள்ளார்.
கனரா வங்கியின் `லோகோ' இரண்டு முக்கோணங்களைக் கொண்டதாகும். ஆனால் லாரன்ஸ் கொடுத்த நிரந்தர வைப்புநிதிக்கான சான்றிதழில் ஒரு முக்கோணம் தான் உள்ளது. இந்த சான்றிதழை பார்த்தவுடனே அது போலியானது என்று சாதாரண நபர் கூட கண்டுபிடித்திருப்பார்.
ஆனால் அந்த லோகோவை வங்கி அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை. அதேபோல சான்றிதழை சரிபார்த்த அதிகாரி, சரியான இடத்தில் கையெழுத்திடவும் இல்லை. இவற்றை பார்க்கும் போது, வங்கி அதிகாரிகள் உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளனர் என்பது தெரிய வருகிறது.
மனுதாரர் அசோக் அமிர்தராஜ் உலக புகழ் பெற்ற டென்னிஸ் வீரர். அவருக்கு இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் கதி என்ன? இதுகுறித்து சிபிஐயிடம் புகார் கூறியிருப்பதாக வங்கி நிர்வாகம் கூறுகிறது.
அசோக் அமிர்தராஜ் டெபாசிட் செய்த ரூ.6.35 கோடியை வட்டியுடன் 2 வாரங்களுக்குள் அவருக்கு வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும். கனரா வங்கி நிர்வாகம் கவனக்குறைவுடன் செயல்பட்டதால், வங்கிக்கு ரூ.50 ஆயிரம் வழக்கு செலவு விதிக்கப்படுகிறது. இந்த தொகையை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு கனரா வங்கி இன்னும் 2 வாரத்துக்குள் வழங்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: