சனி, 28 ஜூலை, 2012

போதிதர்மனின் வரலாறு பல மர்மங்களை கொண்டது


போதி தர்மர் / அத்தியாயம் 1
தமிழகத்தின் அரசியல் வரலாறு என்பது பெரும்பாலும் சேரர், சோழர், பாண்டியர் வசமிருந்துதான் ஆரம்பிக்கிறது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி அது. மூவேந்தர்களும் வெளிநாட்டு வணிகத்தால் செல்வச் செழிப்புடன் திகழ்ந்த நேரம். யவனர்கள், அரேபியர்கள், சீனர்கள், வட இந்தியர்கள் என பெரும் வணிகக் கூட்டம் இங்கிருந்து இஞ்சி, மிளகு, இலவங்கம், பருத்தி போன்ற வாசனை பொருட்களை தங்கள் நாட்டுக்கு அள்ளிச் சென்றனர். பதிலுக்கு சர்க்கரை, தங்கம், வெள்ளி, பட்டு, உயர்ரக மது, அழகிகள், குதிரைகள் என்று கொட்டிக் கொடுத்தனர். தேனை வண்டு பார்த்துக்கொண்டா இருக்கும்! தமிழகத்தின் செழிப்பு பிற தேசங்களின் கண்களை உறுத்தின. இப்படியே செழிப்பாக போய்க்கொண்டிருக்கையில்தான் இந்தத் தென்பகுதியில் தொடர்ச்சியான அயல்நாட்டுப் படையெடுப்புகள் எழுந்தன.
எதிர்பாராத பல்லவர் படையெடுப்பு மூவேந்தர்களின் எல்லையைச் சற்று சுருக்கியது. பல்லவர்கள் தொண்டை மண்டலத்தைச் சிறிது சிறிதாக கைப்பற்றத் தொடங்கியிருந்தனர். அந்த சமயத்தில்தான் திடீரென்று களப்பிரர்களின் கை ஓங்கியது. தொண்டை நாட்டைச் சேர்ந்த காடுகளில் வசித்த கள்வர்களே களப்பிரர் என்பது ஒரு கூற்று. ல்லை இவர்கள் தமிழர்களே என்பது மற்றொரு சாராரின் கருத்து.
இங்கு நமக்கு என்ன தேவையென்றால், இவர்கள் பௌத்த, சமண சமயங்களைச் சார்ந்தவர்களாக இருந்தனர் என்பது மட்டுமே.
அவர்களுக்கு முன்பே அதாவது சக்கரவர்த்தி அசோகர் காலத்திலேயே பௌத்தமும் சமணமும் தமிழகத்துக்கு அறிமுகமாகி இருந்தாலும், இவர்கள் மூலமாகவே தமிழகத்துக்குள் பௌத்த சமண மதங்கள் ஆழமாக ஊடுருவின. தமிழர் பண்பாட்டை பாதித்தன. அப்படியானால் இதற்கு முன் எந்த மதமும் தமிழகம் வந்ததில்லையா?
வந்திருக்கின்றன. ஆனால் இந்த அளவுக்கு வெற்றி கண்டதில்லை. எடுத்துக்காட்டாக, பௌத்தம் இங்கு வேரூன்றுவதற்கு முன்பே வேதாந்தத்தின் பிரதியான வைதீகம் தமிழகம் வந்துவிட்டது. மக்கள் மனதில் அகிம்சையையும் சமதர்மத்தையும், பகுத்தறிவையும் புகட்டிய பௌத்த சமண மதங்களுக்கு முன் உயிர்ப் பலிகளையும், பிறப்பால் சாதியத்தையும், பிளவையும், அறிவு நம்ப மறுக்கும் கட்டுக் கதைகளையும் முன்வைத்த வைதீகம் நிற்கக்கூட முடியவில்லை என்பதே உண்மை. இந்த உண்மையை தமிழகத்தின் இருண்ட காலம் என்று கூறப்படும் களப்பிரர்கள் ஆட்சி நடந்த வேளையில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் நூல்கள் தெளிவுபடுத்துகின்றன.
பௌத்தமும் சமணமும் அப்படிப் பரவக் காரணம் என்ன? மக்கள் தொண்டு. புத்த, சமண துறவிகள் தமிழகமெங்கும் பரவினர். தீண்டாமை களைந்தனர். பிறரை/பிறவற்றை இம்சிக்காத அவர்களது எளிமை மக்கள் மனத்தைக் கொள்ளை கொண்டது. அசோகர் தோற்றுவித்த வட்டெழுத்து முறையை அறிமுகப்படுத்தி எழுத்துப் புரட்சி கண்டனர். எழுத்துப் பணி கடை நிலை மனிதனையும் சென்றடைய உதவினர். மக்களுக்கு அவர்கள் இடத்துக்கே சென்று கல்வியையும் கற்றுத்தந்தனர். சுருக்கமாகச் சொன்னால், பௌத்தமும் சமணமும் சாமானியர்களையும் அறிவில் சிறந்தோரையும் ஈர்த்தன. இவ்விரு மதங்களிலும் மக்கள் திரள் திரளாக இணைந்தனர். காஞ்சி தமிழகத்தின் புத்த மக்காவானது. மதுரை, பூம்புகார் போன்ற நகரங்கள் பிற புத்த திருத்தலங்களாயின. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிருந்தும் பயணிகள் இங்கு வரலாயினர். தமிழகத்தில் பௌத்தம் தழைத்தது.
இது பலருக்கு வியப்பாக இருக்கலாம், களப்பிரரின் காலம் இருண்ட நூற்றாண்டல்லவா? எனும் கேள்வி எழலாம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் களப்பிரர் ஆண்ட காலத்தை தமிழகத்தின் இருண்ட காலம் என்றுதான் சொல்லி ஒதுக்கி வந்தனர். ஆனால் தற்போதைய ஆராய்ச்சிகளும் வரலாற்று ஆய்வுகளும் இந்தக் கருத்தை உடைத்தெறிகின்றன. உண்மையில் களப்பிரர் வரவுக்குப் பின்னர்தான் மக்களை நெறிப்படுத்தும் திருக்குறள், நாலடியார் போன்ற அறநூல்கள் தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கின்றன. களப்பிரர்களின் சிறப்பை இருட்டடிப்பு செய்யவே திட்டமிட்டு அவர்களின் ஆட்சியை இருண்டகாலம் என்று பொய்யுரைத்ததாகக் கூறுகின்றன.
இவ்வாறு பௌத்தமும் சமணமும் வளர்ச்சி அடைந்துகொண்டிருந்த தருணத்தில்தான் ஆறாம் நூற்றாண்டு வாக்கில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு மீண்டும் பெரும் எழுச்சி பெற்ற பல்லவர்கள் தமிழகத்தில் நடந்து கொண்டிருந்த களப்பிரர் ஆட்சியை வீழ்த்தி அகற்றுகின்றனர்.
இப்படியாக ஆட்சியை மறுபடியும் கைப்பற்றிய பல்லவர்களும் பௌத்த சமண சமயங்களைச் சார்ந்தவர்களாகவே இருந்தனர். இந்த இரண்டாம் தலைமுறையில் வந்த பல்லவ மன்னன் (சிலர் கோசிவர்மன் என கூறுவதுண்டு) ஒருவனின் மூன்றாம் மகன்தான் போதிதாரா எனும் இயற்பெயர் கொண்ட போதிதர்மர் என்பது பொதுவான கருத்து.
ஆனால் போதிதர்மர் களப்பிரர் வம்சத்தை சார்ந்தவர் என்று மற்றொரு கருத்து நிலவுகிறது. வரலாற்றில் களப்பிரர் வரலாறு எப்படி இருண்டு கிடக்கிறதோ அதுபோலவே போதிதர்மரின் வரலாறும் இருண்டுதான் கிடக்கிறது. போதிதர்மர் களப்பிரராக இருந்ததாலேயே அவருடைய வரலாறும் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கின்றது என்பதும் சிலரின் குற்றச்சாட்டு.
இதனாலேயே போதிதர்மர் பற்றிய செய்திகள் மிகச் சொற்பமாகவே வரலாற்றில் பதிவாகியுள்ளன. அதிலும் அவரது இந்திய வாழ்க்கை குறித்த குறிப்புகளைத் தொகுத்தால் ஒரு பக்கத்தைக்கூட தாண்டமுடியாது.  இப்பொழுது நமக்கு கிடைக்கும் கொஞ்ச நஞ்சத் தகவல்கள், செய்திகள்கூட சீன மற்றும் ஜப்பானிய ஆசிரியர்கள் வரலாற்றில் பதிவு செய்து வைத்துள்ளவைதான்.
ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த யுவாங் சுவான்ஸியின் லியோயங் என்பவரின் ‘பௌத்த மட பதிவுகள்’ என்னும் நூலும், ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்த தான்லின் என்பவரின் ‘இரண்டு நுழைவாயில்கள் மற்றும் நான்கு சட்டங்கள்’ எனும் நூலும், ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்த தாவோக்ஷுவான் என்பவரின் ‘பிரபல பௌத்த துறவிகளின் சரிதம்’ எனும் நூலும் தான் போதிதர்மரின் வரலாற்றை பதிந்த மூன்று முக்கிய சீன நூல்கள் எனலாம்.
இவ்வாறு பதியப்பட்டுள்ள சீன, ஜப்பானிய வரலாற்றாசிரியர்களின் பதிவிலும் பெருத்த முரண்பாடு காணப்படுகிறது. உதாரணத்துக்கு போதிதர்மர் தேநீர் பருகினார் என்கிற ஒரு சாதாரண நிகழ்வை பதிவு செய்யவேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.
‘போதிதர்மர் தேநீர் பருகுகிறார்’
‘அது இனிப்பானது’
‘இல்லை கசப்பானது’
‘அதன் நிறம் பச்சை’
‘அதன் நிறம் வெள்ளை’
‘அதன் நிறம் கருப்பு’
‘அதன் நிறம் சிவப்பு’
‘அது எங்கள் வீட்டு தேநீர். நான்தான் பரிசளித்தேன்’
‘போதிதர்மர் பருகும் தேநீர் அவருக்கு தேவலோகத்தில் இருந்து வருகிறது’
‘போதிதர்மர் போன பிறவியில் தேநீர் பயிரிடுபவராக இருந்தார். அதனால் தான் அவர் இந்த பிறவியில் தேநீராய் அருந்துகிறார்’
‘போதிதர்மர் கசப்பான தேநீரை அருந்துவதன் பின்னணியில் இருக்கும் தத்துவம், வாழ்க்கையின் கசப்பை ஏற்றுக்கொண்டால் தான் நம் வாழ்வு ஆரோக்கியமாகச் செல்லும்.’
இப்படித்தான் போதிதர்மர் பற்றிய நிகழ்வுகளை முரண்பாட்டு மூட்டையாகப் பதிந்துவைத்துள்ளனர் சீனர்கள். ஜப்பானியர்களோ இதற்கு ஒரு படி மேலே சென்றுவிடுகின்றனர்.
‘போதிதர்மர் குடித்த தேயிலையை இந்த நேரத்தில் இந்த இடத்தில் அமர்ந்து குடித்தால் சகல வல்லமையும் பெறுவாய். ஏனென்றால் அவர் அதனை ஒன்பதாண்டுகள் தவமிருந்து பெற்றார்’ என்று ஒரு சாதாரண நிகழ்வை புராணம் ஆக்கிவிடுகின்றனர்.
எது உண்மை; எது மிகை என்பது புரியாத புதிர்தான்.
‘தொடக்கமும் இல்லாத முடிவும் இல்லாத புனிதராகக் கருதப்பட்டு அதற்குத் தகுந்தபடி வரலாறு புனையப்பட்ட மனிதரின் துல்லியமான உண்மைச் சரிதத்தை எழுதுவது என்பது முற்றிலும் இயலாத காரியம். அதனால், போதிதர்மரின் வாழ்க்கையை மீட்டு எழுத முயற்சிக்கும் எவரும் முழுமையாக வெற்றி அடைவதே இல்லை.’ என்று புலம்புகிறார் பிரபல வரலாற்று ஆய்வாளர் John McRae.
அவரது கருத்துப்படி போதிதர்மரின் வரலாற்றை எழுதுவதென்பது இன்றைய, நேற்றைய ஆசிரியர்களின் தலைவலி அல்ல. பல நூற்றாண்டு காலமாக தொன்றுதொட்டு நிலவிவரும் சங்கடம். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த போதிதர்மரின் சீடரான தான்லின் காலத்திலேயே நிலவிய தலைவலி இது.
இப்படி இருக்கையில், போதிதர்மர் இன்ன இடத்தில்தான் பிறந்தார், இன்னாருக்கு மகனாக, இன்ன குலத்தில், இன்ன தேதியில் என்று அவர் பற்றிய செய்திகளை திட்டவட்டமாக வரையரை செய்வது இயலாத காரியம்.
(தொடரும்)
tamilpaper.net

கருத்துகள் இல்லை: