வியாழன், 26 ஜூலை, 2012

பஸ்சில் 3 பேரைக் கொன்றவர் ஏற்கனவே 25 பேரைக் கொன்ற மன நோயாளி!

சென்னை: ஆந்திராவிலிருவந்து சென்னை வந்த பேருந்தில் பயணித்த 3 பயணிகளை கொடூரமாக கத்தியால் குத்திக் கொன்றும், ஒருவரை படுகாயப்படுத்தியும் தப்பி ஓடிய நபர் மன நோயாளி என்றும், ஏற்கனவே அவர் 25 பேரை ஆந்திராவில் கொன்றுள்ளார் என்றும் அவர் மீது இதுவரை 100க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும் ஆந்திர போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தடா காட்டுப் பகுதிக்குள் அவர் பதுங்கியிருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து அவரைத் தேடி போலீஸார் விரைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் பத்திராச்சலத்திலிருந்து சென்னைக்கு ஆந்திர மாநில அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. தடா பகுதியில் பேருந்து வந்தபோது திடீரென ஒரு நபர் தூங்கிக் கொண்டிருந்த பயணிகளை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் 3 பேர் பேருந்திலேயே உயிரிழந்தனர். அவர்களுக்கு கழுத்து, நெஞ்சுப் பகுதியில் பலத்த கத்திக் குத்துக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. ரமேஷ் என்ற என்ஜீனியர் படுகாயமடைந்தார்.
சம்பவத்தைத் தொடர்ந்து பேருந்து நிறுத்தப்பட்டது. அதைப் பயன்படுத்தி கத்தியால் குத்திய நபர் பேருந்திலிருந்து இறங்கி ஓடி விட்டார்.
இந்தச் சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர் சாம்பய்யா என்று தெரிய வந்துள்ளது. இவர் ஒரு மன நோயால் பாதிக்கப்பட்ட நபர். கண்ணில் தென்படுகிறவர்களை கத்தியால் குத்தி விட்டு ஓடி விடுவார். இதுவரை 25 பேரை இவர் கொன்றுள்ளாராம். இவர் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகளும் இதுதொடர்பாக தொடரப்பட்டுள்ளதாம்.

சமீபத்தில்தான் இவரை பத்திராச்சலம் பகுதியில் வைத்து போலீஸார் பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் போலீஸ் பிடியிலிருந்து அவர் தப்பி ஓடி விட்டார். தற்போது தடா காட்டுக்குள் இவர் தப்பி ஓடி விட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து அவரை பிடிக்க போலீஸார் விரைந்துள்ளனர். மோப்ப நாய்கள் சகிதம் சாம்பையாவைத் தேடி போலீஸார் விரைந்துள்ளனர்

கருத்துகள் இல்லை: