திங்கள், 23 ஜூலை, 2012

செல்வம் தேடும் வழி. அளவில்லாத செல்வம் என்னைச் சுற்றி இருக்கிறது


கீதா பிரேம்குமார், மனித மேம்பாட்டு ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர். உளவியல் துறையில் பட்ட மேற்படிப்பு முடித்தவர். இவர் எழுதும் ஜெயிக்கலாம் தோழி தமிழ்பேப்பரில் ஒவ்வொரு வாரமும் திங்கள் அன்று வெளிவரும். இது பெண்களுக்கான தொழில் முனைவோர் கையேடு.
ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 1
மனித குலத்தை மேம்படுத்தக்கூடிய கருவி ஒன்று உண்டு. மனிதனின் கனவுகள் நனவாகவும், தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இது உதவுகிறது. இந்தக் கருவி நல்லவிதமாகப் பயன்படுத்தப்படும்போது வையகம் மனித குலத்தின் வசத்துக்குள் வருகிறது. அதே கருவி தவறாகச் செலுத்தப்படும்போது மனிதக்குலத்தையே வேரறுக்கும் வல்லமையைப் பெற்றுவிடுகிறது. இது இல்லையேல் மகன் தாயை மறக்கலாம், மனைவி கணவனை இழக்கலாம்; எவரும் உயிரைத் துறக்கலாம். இனம், குலம், மதம், மொழி, நாடு என்ற எந்தவிதப் பாகுபாடும் இன்றி மனிதகுலத்தை தன் வசத்தில் வைத்திருக்கிறது அந்தக் கருவி.
செல்வம்.

காலையில் கண் விழித்ததும் இன்று என் தேவைகள் என்ன, அதற்குத் தேவைப்படும் பணம் என்ன என்று யோசிப்பவரா நீங்கள்? பணம் இல்லாததால் என் மதிப்பு குறைகிறது என்று மனக்குமுறலுடன் வாழ்பவரா நீங்கள்? பணம் மட்டும் என் கையில் இருக்கட்டும், என்ன செய்கிறேன் பார் என்று உலகுக்குச் சவால் விட விரும்புவரா நீங்கள்? பணம் இல்லாததால் சாவின் விளிம்பை எட்டிப்பார்க்க விரும்புவரா நீங்கள்? எந்தப் பிரிவில் நீங்கள் இருந்தாலும் சரி, உங்களுக்காகத்தான் இந்த எழுத்து.
இதை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது?
இருக்கிறது. இல்லாமையிலிருந்து உயிர் பெற்று, வல்லமையைப் வென்று கொண்டிருக்கும் ஒருவருடைய அனுபவம் இது. வாழ்க்கை எனக்குக் கற்றுக் கொடுத்த பாடங்களைத்தான் உங்களுடன் நான் பகிர்ந்துகொள்ளவிருக்கிறேன். இதிலிருந்து ஒரு துளி உங்கள் நினைவை, நிலையை மாற்றுமேயானால் மகிழ்ச்சியே.
வேண்டாம் என்று ஒதுங்கிப் போவோருக்கும் ஒரு சிறு விண்ணப்பம். என் நிலையை நீங்கள் அடையும் நாளில் இப்புத்தகத்தின் ஒரு சில பக்கங்களைப் புரட்டிப் பாருங்கள். ஒற்றுமையை உணர்வீர்கள்.
என் அனுபவச் சிதறல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள என்னைத் தூண்டிய வல்லமைப் படைத்த இறைவனுக்கும், ஈன்றெடுத்த பெற்றோருக்கும், கல்வி தந்த ஆசிரியருக்கும், வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் என்னைச் செலுத்தும் உந்து சக்தியாக இருந்து, என்னை வசீகரித்த மனிதர்களுக்கும், என் வாழ்வின் நினைவலைகளுக்குச் சங்கிலிப் போடாத குடும்பத் தலைவருக்கும், என் வளர்ச்சிக்கு எப்போதும் தடை விதிக்காது மறைந்த என் மாமனார், மாமியார் அவர்களுக்கும், என் பணிக்குத் தங்கள் வாழ்வில் சிறு சிறு தியாகங்கள் செய்த என் குழந்தைகளுக்கும், மற்றும் என் வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனையாக, நட்பென்ற பெயரில் என்னுடன் இணைந்து, தன்னுடன் இணைந்ததால் மீண்டும் பலம் பெறச் செய்து, புனிதமான உறவுமுறைத் தொடர தோழிகளாக வந்த பலருக்கும் இப்புத்தகத்தை மனமுவந்து காணிக்கை ஆக்குகிறேன். இதில் குறைகள் இருப்பின் அவை என்னைச் சேரட்டும். நிறைகள் இருந்தால் அது மேற்கூறிய அனைவரையும் சார்ந்தது.
இந்தப் புத்தகம் கீழ்கண்டவர்களுக்கு :
  1. குடும்பத் தலைவர்கள்
  2. பெண்கள்
  3. இளைஞர்கள்
  4. தொழிலதிபர்கள்
  5. வறுமையை எதிர்கொண்டு போராடும் கீழ், மத்தியதரக் குடும்பத்தினர்
  6. மத்தளமாக இருக்கும் நடுத்தரக் குடும்பத்தினர்
  7. மேல்தட்டு வர்க்கத்தினர்
  8. தொழில்முனைவோர்.
0
என் கையில் பணம் இல்லை, என்னால் பணம் ஈட்ட முடியவில்லை, என் தேவைகளுக்குப் பணம் போதவில்லை என்றுதான் நம்மில் பலரும் நம்மைப் பற்றி சுயமதிப்பீடு செய்கின்றோம். உண்மை என்னவெனில் காற்று எங்கும் வியாபித்திருப்பது போல், நீர் எங்கும் பரவிக்கிடப்பது போல், செல்வமும் உலகில் ஏராளம் கொட்டிக்கிடக்கிறது. தாகத்தால் தவிப்பவன் நீரைத் தேடி அலைந்து, திரிந்து அதைக் குடித்து உயிர் வாழ நினைப்பது போல், செல்வத்தையும் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் அடைய முடியும்.
தான் ஈட்டும் பணத்தால் எந்தவித மனச்சாட்சி உறுத்தலும் இன்றி யார் வாழ்கிறார்களோ அவர்களே செல்வத்தால் பயன் பெறுகின்றார்கள். அநியாயத்துக்குத் துணை நின்று அளவில்லாத செல்வத்தைச் சிலர் பெற்றிருக்கலாம். அவர்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கிறார்கள் என்று நம்மில் பலரும் நினைப்பது இயல்பு. உண்மையில் அந்தப் பணம் அவர்களுடைய  பொருளாதார நிலையை மட்டுமே உயர்த்தியிருக்கிறது. சமூகத்தின் மதிப்பை அவர்கள் பெறுவதில்லை. ஊரைக் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள், கள்ளக் கடத்தல், போதைப்பொருள் கடத்துதல், சாராய வியாபாரிகள் இன்னும் பிற சீர்கேடான செயல்களில் ஈடுபட்டு, கோடிக் கணக்கில் பணம் குவிக்கும் பலரும், மன உளைச்சலோடு மட்டுமே தங்கள் வாழ்வை நடத்துகிறார்கள்.
நேர்மையான வழியில் செல்வத்தை ஈட்ட நினைப்பவர்கள் கீழ்வருமாறு சொல்லிக்கொள்ளுங்கள்.
அளவில்லாத செல்வம் என்னைச் சுற்றி இருக்கிறது. அது என்னைத் தேடி வரும் முன்பு, நான் என்னை அதனுடன் இணைத்துக் கொள்வேன்.
கேட்பதற்கு வினோதமாக இருந்தாலும், உளவியல் ரீதியாக இந்த வாக்கியம் ஏற்படுத்தும் தாக்கம் முக்கியமானது.
கண்ணாடி அறைக்குள் இருக்கும் ஆடைகளை நம் மேல் பொருத்திப் பார்ப்பது போல், ஒரு கடைக்குள் இருக்கும் இனிப்புப் பலகாரத்தை நம் நினைவில் சுவைத்துப் பார்ப்பது போல், தெருவில் செல்லும் ஒரு அழகான வாகனத்தை ஆள நினைப்பது போல், செல்வத்துடன் நம்மை இணைத்துக் கொண்டு, செயல்படவேண்டும்.
வீட்டில் அரிசி இல்லை, பணம் இல்லை என்பதை அந்தக் காலத்தில் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். ‘வீட்டில் அரிசி நிறைந்து கிடக்கிறது, நாளைக்கு அரிசி வாங்க வேண்டும்’ என்பார்கள். இல்லாமை என்ற நிலையை அகற்ற வேண்டும் என்று உள்ளுக்குள் முதலில் சொல்லிக்கொள்ளவேண்டும்.
Think Positive always and talk Positive about the aspects of life என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். நம்மில் பெரும்பாலோர் இதைச் செயல்படுத்துவதே இல்லை. நம்மிடம் என்ன இல்லை என்பதைத்தான் மிக அதிக அளவில் கணக்கெடுக்கிறோம். என்னிடம் உள்ளவை இவை என்று மிகக் குறைவானவற்றையே பட்டியலிடுகின்றோம். விளைவு? பெருமூச்சு, சுய பச்சாத்தாபம், தாழ்வு மனப்பான்மை, மன உளைச்சல், தூக்கமின்மை.
இப்படிச் சொல்லிப் பாருங்கள். உலகத்தில் வியாபித்திருக்கும் காற்றை நான் இயல்பாக எடுத்து சுவாசித்து வெளிவிடுவது போல், உலகத்திலுள்ள நீரை எனக்கு வேண்டிய அளவு எடுத்து உயிர் வாழ்வது போல், என்னைச் சுற்றியிருக்கும் செல்வத்தில் இருந்து எனக்குரிய பங்கை நான் அடைந்தே தீருவேன்.
இது ஓர் உறுதிமொழியாக உங்கள் நினைவலைகளில் தொடர்ந்து ஒலிக்க வேண்டும். இதுதான் செல்வத்தை நோக்கி நாம் நடத்தும் பயணத்தின் முதல் படி.
(தொடரும்)

கருத்துகள் இல்லை: