சனி, 2 ஜூன், 2012

ஜெயாவின் பொய் வழக்கு போலிஸ் வாங்கிய அவமானம்


ஐ.பெரியசாமி வீட்டில், போலீஸ் படைக்கு தி.மு.க. வழங்கிய ராஜோபசாரம்!

Viruvirupu
தமிழக காவல்துறைக்கு தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் ஏற்பட்ட அவமானம் போல, வேறு எங்காவது ஏற்பட்டதா என்று தெரியவில்லை. அதிகார தோரணையில் ரெயிடு நடத்தச் சென்ற போலீஸ், தி.மு.க.-வினரால் அடைத்து வைக்கப்பட்டு, “ரெயிடு வேணாம், ஆளை விடுங்க” என்று பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு, ஓடி வந்திருக்கிறார்கள்.
ரெயிடு சென்ற போலீஸ் படை, ஒரு டி.எஸ்.பி. தலைமையில் சென்றது. அதனால் என்ன? டி.எஸ்.பி.யும் மற்றைய போலீஸாருடன், ஐ.பெரியசாமி வீட்டில் அடைபட்டு இருந்துவிட்டு, மீண்டு வந்திருக்கிறார்.
நல்ல வேளையாக எஸ்.பி. செல்லவில்லை.

கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பத்திரப் பதிவுத் துறை அமைச்சராக இருந்த ஐ. பெரியசாமியின் வீடு அண்மையில் ரெயிடு செய்யப்பட்டிருந்தது. அவரது வீடு மட்டுமின்றி, அவரது மகன் மற்றும் மகள் வீடுகளிலும் நூற்பாலைகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியிருந்தனர். சில ஆவணங்களையும் எடுத்துச் சென்றிருந்தனர்.
காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “பச், அந்த ஆவணங்களை வைத்து ஐ.பெரியசாமி வீட்டு பசுமாட்டைக்கூட கைது செய்ய முடியாது” என்றனர். எனவே அந்த ரெயிடு கிணற்றில் போட்ட கல்லாக இருந்தது.
ஆனால், திண்டுக்கல் காவல்துறைக்கு ‘மேலே’ இருந்து பிரஷர் மேல், பிரஷர் கொடுக்கப்பட்டது. பெரியசாமியைக் கைது செய்ய ஏதாவது வழி பார்க்குமாறு கூறப்பட்டு, இன்னும் ஒரு வாரத்துக்குள் அவர் கைதாக வேண்டும் என்று கடுமை காட்டப்பட்டதான, திண்டுக்கல் போலீஸ் கண்களைக் கசக்குகிறார்கள்.
ஏற்கனவே ஒரு தடவை ரெயிடு செய்தாகி விட்டது. அதில் எதுவும் அகப்படவில்லை. அடுத்தமுறை போவதென்றால், கஞ்சா பொட்டலங்களை இவர்கள்தான் கொண்டுபோய் வைத்துவிட்டு, மீட்க வேண்டும். அது அவ்வளவு நன்றாக இருக்காது. நம்பும்படியாகவும் இருக்காது.
வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தவர்கள், வேறு ஒருவரை வளைத்து, இவரைப் பிடிக்கும் பிளான் ஒன்றைப் போட்டனர். ஐ.பெரியசாமியின் உறவினரும், தி.மு.க. ஒன்றியச் செயலாளருமான பி.சி.முரளிதரனை விசாரணை என்று சொல்லி நேற்று அழைத்துச் சென்றுள்ளனர்.
அந்த விபரம் தெரிந்த உடனேயே, தி.மு.க. தரப்பு உஷாராகியது. முரளிதரனை எங்கே வைத்து விசாரிக்கிறார்கள் என்று தமது ‘சோர்ஸ்கள்’ மூலம் தெரிந்து கொண்டனர். குஜிலியம்பாறை (திண்டுக்கல் மாவட்டம்) பகுதியில் உள்ள பூம்பூர் காவல் நிலையத்துக்கே அவரை அழைத்துச் சென்றதாக தெரியவந்தது.
அதையடுத்து அந்த போலீஸ் ஸ்டேஷனை சூழ்ந்து கொண்டு, முரளிதரனை கைது செய்வதென்றால், அரஸ்டு வாரண்ட் இருக்கா என்று கேட்டிருக்கின்றனர். போலீஸிடம் அப்படி ஏதும் கிடையாது. ஆனால், கூட்டம் திரண்டு வரும் விஷயம் தெரிந்து, முரளிதரனை வேறு எங்கோ இடம் மாற்றி விட்டிருந்தனர்.
முரளிதரனிடம் இருந்து ஏதாவது தகவல் கிடைத்தால், அடுத்து ஐ.பெரியசாமியை கைது செய்ய வருவார்கள் என்பதுகூட தி.மு.க.-வினருக்கு தெரியாதா? இதனால், திண்டுக்கல் கோவிந்தாபுரம் சாலையில் உள்ள ஐ.பெரியசாமி வீட்டுக்கு போலீஸ் வந்தால் உடனே சூழ்ந்து கொள்ள வசதியாக, அங்கு ஒரு கண் வைத்துக் கொண்டு காத்திருந்தனர்.
பாவம், அதைத் தெரிந்து கொள்ளாத திண்டுக்கல் போலீஸ் படை ஒன்று, டி.எஸ்.பி. சுருளிவேல் தலைமையில் ரெயிடு செய்ய ஐ.பெரியசாமி வீட்டுக்கு புறப்பட்டது. அவர்கள் போலீஸ் ஸ்டேஷனை விட்டு கிளம்பிய உடனேயே தி.மு.க.-வினருக்கு தகவல் வந்துவிட்டது.
போலீஸ் காலையில் பெரியசாமி வீட்டுக்கு முன் வந்து இறங்கவே, அவர்களை சுற்றி வளைத்துக் கொண்டனர் தி.மு.க.-வினர். சர்ச் வாரண்ட், அல்லது கைது வாரண்ட் எதுவுமே இல்லாமல் வீட்டுக்குள் நுழையக்கூடாது என்றும், முதலில் வாரண்டை காட்டும்படியும் கேட்டனர்.
நம்ம போலீஸிடம் அப்படி ஏதாவது இருந்தால்தானே காட்ட முடியும்?
டி.எஸ்.பி. சுருளிவேல், “சர்ச் வாரண்ட், கைது வாரண்ட் குறித்து எஸ்.பி.-யிடம்தான் கேட்க வேண்டும், அவருடைய உத்தரவை நிறைவேற்றவே இங்கே ரெயிடு செய்ய வந்தோம்” என்றார்.
“நல்லதா போச்சு. அவரும் வரட்டும். அதுவரை நீங்க கொஞ்சம் உள்ளே இருங்க” என்று கூறி, டி.எஸ்.பி. சுருளிவேல், மற்றும் அவருடன் வந்த போலீஸ் படையை வீட்டுக்குள் அடைத்து வைத்தனர். டி.எஸ்.பி. சுருளிவேல் யாருக்கோ போன் செய்ய முயலவே, லபக்கென்று அவரது செல்போனையும் பறிமுதல் செய்தனர் தி.மு.க.-வினர்.
இதற்குமேல் என்ன செய்வது? நாம் ஏற்கனவே எழுதியது போல, ‘வெற்றிகரமாக’ பின்வாங்கியது போலீஸ் படை.
அவமானம்தான். காக்கிச் சட்டைக்கே தலைகுனிவுதான். அடைத்து வைத்து அவமானப் படுத்தியதைவிட, மேலேயுள்ள போட்டோவில் உள்ளது போல (போட்டோ திண்டுக்கல்லில் எடுக்கப்பட்டதல்ல. அது அசாம் போலீஸ்) விறகு கட்டையால் நாலு அடி போட்டுவிட்டு அனுப்பியிருந்தால், அவமானம் இதைவிட குறைவுதான்.
இருந்தாலும், அடைபட்ட காவல்துறையின் ஐ.பி.எஸ். பயிற்சியும், சாதுரியமும் இறுதியில் ஜெயித்தது. திரும்புவதற்குமுன் ராஜதந்திர ரீதியில் செயல்பட்டு, டி.எஸ்.பி.-யின் செல்போனை மீட்டுச் சென்று விட்டார்கள் திண்டுக்கல் போலீஸார்.
செல்போன் மீட்ட சாகசத்துக்கு, ஏதாவது சக்கரம் கொடுப்பார்களா தெரியவில்லை!

கருத்துகள் இல்லை: